பக்கம் -71-
லஹ்யான் போர் (ஹிஜ் 6, ரபீவுல் அவ்வல்)
லஹ்யான் கிளையினர்தான் ‘ரஜிஃ’ என்ற இடத்தில் பத்து நபித்தோழர்களை வஞ்சகமாகக் கொலை
செய்தனர். இவர்களது இல்லங்களும் இருப்பிடங்களும் மக்காவிற்கு மிக அருகில்தான்
இருந்தன. மக்காவிலோ இஸ்லாமிற்கு எதிரியாக இருக்கும் குறைஷி மற்றும் அரபு
குலத்தவர்கள் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் மக்கா எல்லை வரை சென்று லஹ்யான்
இனத்தவர் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றமாகக் கருதவில்லை.
அகழ்போல் குறைஷி மற்றும் அரபு இனத்தவன் இராணுவங்கள் வலுவிழந்து சிதறி சென்று
விட்டதால் நிலைமை ஓரளவு முஸ்லிம்களுக்குச் சாதகமாக இருந்தது. எனவே, ரஜீஃயில்
கொல்லப்பட்ட தங்களது தோழர்களுக்காக லஹ்யானியரிடம் பழிதீர்க்க நாடி ஹிஜ்ரி 6, ரபீஉல்
அவ்வல் அல்லது ஜமாதுல் அவ்வல் மாதத்தில் இருநூறு தோழர்களை அழைத்துக் கொண்டு
மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி)
அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஷாம் நாட்டை நோக்கிப் பயணிப்பதாகக் கூறி
வெகு விரைவாகப் பயணத்தை மேற்கொண்டு அமஜ், உஸ்ஃபான் என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள
‘குரான்’ என்ற பள்ளத்தாக்கைச் சென்றடைந்தார்கள். அங்குதான் நபித்தோழர்கள் படுகொலை
செய்யப்பட்டார்கள். அவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்காக
அல்லாஹ்வின் கருணை வேண்டி பிரார்த்தித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட லஹ்யானியர் அங்கிருந்து தப்பித்துச்
சென்று மலை உச்சியில் ஏறி பதுங்கிக் கொண்டனர். எவரும் முஸ்லிம்களின் கையில்
அகப்படவில்லை. நபியவர்கள் அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிறு சிறு குழுக்களை
அனுப்பி தேடும்படி பணித்தார்கள். ஆனால், எவரையும் பிடிக்க முடியவில்லை. நபியவர்கள்
அங்கிருந்து ‘உஸ்ஃபான்’ என்ற இடம் வரை சென்றார்கள். அங்கிருந்து ‘குராவுல் கமீம்’
என்ற இடத்திற்கு பத்து குதிரை வீரர்களை அனுப்பினார்கள். தான் வந்திருக்கும் செய்தி
குறைஷிகளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள். பின்பு
அங்கிருந்து தனது தோழர்களை அழைத்துக் கொண்டு மதீனாவிற்குத் திரும்பினார்கள்.
இவ்வாறு நபியவர்கள் பதினான்கு நாட்கள் தங்களது படையுடன் சுற்றிவிட்டு
திரும்பினார்கள்.
குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்
மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல
குழுக்களையும் படைப்பிரிவுகளையும் அனுப்பினார்கள். அதன் சுருக்கம் வருமாறு:
1) உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் நாற்பது தோழர்களை ‘கம்ர்’
என்ற இடத்துக்கு ஹிஜ்ரி 6, ரபீஉல் அவ்வல் அல்லது ரபீஉல் ஆகில் நபியவர்கள்
அனுப்பினார்கள். ‘கம்ர்’ என்பது அஸத் கிளையினருக்கு சொந்தமான கிணற்றுக்குரிய
பெயராகும். அங்குதான் அவர்கள் வசித்து வந்தனர். முஸ்லிம்களின் வருகையை அறிந்த
அக்கூட்டத்தினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களின் இருநூறு ஒட்டகங்களை
ஓட்டிக் கொண்டு முஸ்லிம்கள் மதீனா திரும்பினர்.
2) முஹம்மதிப்னு மஸ்லமா (ரழி) அவர்களைப் பத்து தோழர்களுடன் ஸஅலபா கிளையினர்
வசிக்கும் ‘துல்கஸ்ஸா’ என்ற இடத்திற்கு ஹிஜ்ரி 6, ரபிஉல் அவ்வல் அல்லது ரபிஉல்
ஆகில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். முஸ்லிம்களின் வருகையை அறிந்த ஸஅலபாவினர்
இரகசியமாக மறைந்து கொண்டனர். நபித்தோழர்கள் ஓர் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்
போது திடீரெனத் தாக்குதல் நடத்தி முஹம்மதிப்னு மஸ்லமாவைத் தவிர மற்ற அனைவரையும்
கொன்று விட்டனர். இவர் மட்டும் காயத்துடன் தப்பித்து மதீனா வந்து சேர்ந்தார்.
3) இந்நிகழ்ச்சிக்குப் பின் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்களை நாற்பது
தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6, ரபிஉல் ஆகில் துல்கஸ்ஸாவிற்கு அனுப்பி
வைத்தார்கள். இவர்கள் இரவெல்லாம் நடந்து சென்று காலையில் ஸஅலபாவினர் மீது
படையெடுத்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் தப்பித்து மலைகளுக்கு ஓடிவிட்டனர்.
அவர்களிலிருந்து ஒருவரை மட்டும் முஸ்லிம்களால் பிடிக்க முடிந்தது. பிறகு அவர்
இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். முஸ்லிம்கள் எதிரிகளின் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா
திரும்பினர்.
4) ஹிஜ்ரி 6, ரபிஉல் ஆகிர் மாதத்தில் ஜைதுப்னு ஹாஸா (ரழி) அவர்களை ‘ஜமூம்’ என்ற
இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஜமூம் என்பது ‘மர்ருல் ளஹ்ரான்’
என்ற இடத்திலுள்ள சுலைம் கிளையினருக்கு சொந்தமான கிணறாகும். ஜைத் அவர்கள் பனூ
சுலைம் கிளையினரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது முஸைனா கிளையைச் சேர்ந்த ஒரு
பெண்ணைக் கைது செய்தார்கள். அவரது பெயர் ஹலீமாவாகும். அப்பெண் சுலைமினருக்கு
சொந்தமான இடங்களைக் காண்பித்துக் கொடுத்தார். அங்கு சென்று முஸ்லிம்கள் அதிகமான
கால்நடைகளையும், கைதிகளையும் பிடித்து வந்தனர். மதீனா திரும்பியவுடன் விஷயம்
அறிந்து நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை உரிமையிட்டு திருமணமும் முடித்து வைத்தார்கள்.
5) ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஊலா மாதத்தில் ‘ஈஸ்’ என்ற இடத்திற்கு ஜைத் அவர்களை 170
வீரர்களுடன் அனுப்பி வைத்தார்கள். அங்கு குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் நபி (ஸல்)
அவர்களின் மருமகனார் அபுல் ஆஸின் தலைமையின் கீழ் தங்கியிருந்தது. அங்கு சென்று
முஸ்லிம்கள் அனைத்தையும் கைப்பற்றினர். ஆனால், அபுல் ஆஸ் தப்பிச் சென்று மதீனாவில்
நபியவர்களின் மகளார் ஜைனபிடம் அடைக்கலம் தேடினார். மேலும், தனது பொருட்களைத்
திருப்பித் தருமாறு நபியவர்களிடம் கோரும்படி ஜைனபிடம் கேட்டுக் கொண்டார். அவரும்
தனது கணவன் கோரிக்கையை நபியவர்களிடம் சொல்லவே, நபியவர்கள் பொருள்களை திரும்பத்
தருமாறு மக்களிடம் கேட்டார்கள். ஆனால், எவரையும் அதற்காக நிர்பந்தப் படுத்தவில்லை.
நபியவர்களின் விருப்பத்திற்கிணங்க சிறிய பெரிய அனைத்து பொருட்களையும் நபித்
தோழர்கள் திரும்பக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவற்றை எடுத்துக் கொண்டு மக்கா
சென்று உரியவர்களிடம் அப்பொருட்களை ஒப்படைத்துவிட்டு இஸ்லாமை ஏற்று மதீனா
திரும்பினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பிய தமது மருமகன்
அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஜைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து
வைத்தார்கள். இவ்வாறுதான் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் வந்துள்ளது. (ஸுனன்
அபூதாவூது)
ஏனெனில், முஸ்லிமான பெண்களை இறைநிராகரிப்பாளர்களுக்குத் திருமணம் முடித்துக்
கொடுக்கக் கூடாது என்ற அல்லாஹ்வுடைய கட்டளை அப்போது வரைக்கும் இறங்கவில்லை. ஆனால்,
சிலர் “மறுபடியும் புதிய திருமணம் செய்துதான் நபியவர்கள் சேர்த்து வைத்தார்கள்”
என்று கூறுகின்றனர். இது தவறாகும். அவ்வாறே ஆறு வருடங்கள் கழித்து இருவரையும்
சேர்த்து வைத்தார்கள் என்று கூறுவதும் சரியாகாது. ஏனெனில், அதற்குரிய ஆதாரம்
வலுவில்லாதது. (துஹ்ஃபத்துல் அஹ்வதி)
6) மீண்டும் ஜைத் அவர்களைப் பதினைந்து தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6,
ஜுமாதா அல்ஆகிர் மாதத்தில் ஸஃலபாவினர் வசிக்கும் ‘தஃப்’ அல்லது ‘தக்’ என்ற
இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். நபியவர்கள்தான் தங்களின் படையைத் திரட்டிக் கொண்டு
வந்திருக்கின்றார்கள் என்று நினைத்து அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஜைத்
அவர்கள் இருபது ஒட்டங்களை பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மதீனா
வந்தார்கள்.
7) பன்னிரெண்டு நபர்களுடன் ‘வாதில் குரா’ என்ற இடத்திற்கு ஹிஜ்ரி 6, ரஜப் மாதத்தில்
அங்கு எதிரிகளின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்து வருவதற்காக
நபியவர்கள் ஜைதை அனுப்பி வைத்தார்கள். ஆனால், அங்கிருந்தோர் நபித்தோழர்களைத் தாக்கி
ஒன்பது தோழர்களைக் கொன்று விட்டனர். மூவர் மட்டும் தப்பித்து மதீனா திரும்பினர்.
அதில் ஜைது இப்னு ஹாஸாவும் ஒருவர். (ரஹ்மதுல் லில் ஆலமீன், ஜாதுல் மஆது)
8) ‘ஸயத்துல் கபத்’ எனப்படும் இப்படை ஹிஜ்ரி 8, ரஜப் மாதத்தில் அனுப்பப்பட்டது
என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் தொடரை நாம் பார்க்கும் போது இது ஹுதைபிய்யா
உடன்படிக்கைக்கு சற்று முன் நடைபெற்றது என்று தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக
இதில் கலந்து கொண்ட ஜாபிர் (ரழி) அறிவிப்பதாவது: “300 வாகன வீரர்களை அபூ உபைதாவின்
தலைமையில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நாங்கள் குறைஷிகளுடைய வியாபாரக்
கூட்டத்தை எதிர்பார்த்து பதுங்கி இருந்தோம். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டதால்
காய்ந்த இலைகளைத் தின்றோம். எனவே, இப்படைக்கு ‘ஜய்ஷுல் கபத்’ -இலை படை- என்று பெயர்
வந்தது. எங்களில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை ஒரே நாளில் அறுப்பார். மற்றொரு நாள்
மீண்டும் மூன்று ஒட்டகங்களை அறுப்பார். பின்பு தளபதி அபூ உபைதா (ரழி) அதனைத் தடை
செய்துவிட்டார். அதற்குப் பின் கடலிலிருந்து ‘அம்பர்’ என்ற மிகப்பெரிய மீன் ஒன்று
எங்களுக்குக் கிடைத்தது. அதை நாங்கள் பதினைந்து நாட்கள் சாப்பிட்டோம். அதனுடைய
கொழுப்பை எண்ணையாக பயன்படுத்தி தடவிக் கொண்டோம். அதன் மூலம் எங்களுடைய உடல்கள் நல்ல
ஆரோக்கியமடைந்தன.
அபூ உபைதா (ரழி) அதனுடைய விலா எலும்பில் ஓர் எலும்பை எடுத்தார். பின்பு அதை
நிறுத்தி, படையில் மிக உயரமாக உள்ள ஒருவரை மிக உயரமான ஒட்டகத்தில் உட்கார வைத்து
அதற்குக் கீழ் செல்லும்படி கூறினார்கள். அந்த எலும்பு அவ்வளவு பெரியதாக இருந்தது.
அதனுடைய இறைச்சியிலிருந்து பெருமளவு நாங்கள் சேகரித்து வைத்துக் கொண்டோம். மதீனா
திரும்பியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறிய போது இது அல்லாஹ்
உங்களுக்கு அளித்த உணவாகும். உங்களிடம் ஏதாவது அதில் மீதமிருந்தால் எனக்கும் உண்ணக்
கொடுங்கள் என்றார்கள். நாங்கள் அதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தோம்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்திருக்க வேண்டும் என்று நாம் கூறியதற்குக்
காரணம், முஸ்லிம்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் எந்தவொரு வியாபாரக்
கூட்டத்தையும் கைப்பற்றுவதற்காக செல்லவில்லை.