பக்கம் -72-
பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர்
இப்போர் ஒரு விரிவாகக் கூறப்படும் அளவிற்கு இல்லையென்றாலும் இதனால் பல
குழப்பங்களும் பிரச்சனைகளும் இஸ்லாமியச் சமுதாயத்தில் ஏற்பட்டன. இக்குழப்பத்தின் இறுதியில்
நயவஞ்சகர்களுக்குக் கேவலம் ஏற்பட்டது. இஸ்லாமியச் சமூகத்திற்குப் பல மார்க்கச் சட்டங்கள்
அருளப்பட்டன. அதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கண்ணியமும் உயர்வும் கிடைத்தது.
முதலில் நாம் இப்போரைப் பற்றி கூறியதற்குப் பின்பு அப்பிரச்னைக்குரிய நிகழ்ச்சியைப்
பற்றி கூறுவோம்.
இப்போர் ஹிஜ்ரி 5, ஷஅபான் மாதத்தில் நடைபெற்றதென்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள்
கூறுகின்றனர். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) ஹிஜ்ரி 6ல் நடைபெற்றது என்று கூறுகின்றார்.
இப்போருக்கான காரணமாவது: முஸ்தலக் எனும் கிளையினரின் தலைவரான ஹாரிஸ் இப்னு அபூ ழிரார்
தனது கூட்டத்தினரையும் மற்றும் பல அரபிகளையும் அழைத்துக் கொண்டு நபியவர்களிடம் போர்
புரிவதற்காக வருகிறார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதை உறுதியாகத்
தெரிந்து வர, புரைதா இப்னு ஹுஸைப் அஸ்லமி (ரழி) என்பவரை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
அவர் ஹாரிஸ் இப்னு அபூ ழிராரை வழியில் சந்தித்து விபரமறிந்து நபியவர்களிடம் திரும்பி
செய்தியைக் கூறினார்.
செய்தி உண்மைதான் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டவுடன் நபியவர்கள் தோழர்களைப் புறப்படுவதற்கு
ஆயத்தமாக்கினார்கள். ஷஅபான் பிறை 2ல் மதீனாவிலிருந்து நபியவர்கள் கிளம்பினார்கள். இதுவரை
எப்போதும் கலந்துகொள்ளாத நயவஞ்சகர்களின் ஒரு கூட்டம் நபியவர்களுடன் புறப்பட்டது. நபி
(ஸல்) இப்போருக்குச் செல்லும் போது மதீனாவில் ஜைதுப்னு ஹாஸாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.
சிலர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது அபூதர் என்றும் கூறுகின்றனர். மற்றும் சிலர் நுமைலா
இப்னு அப்துல்லாஹ் என்றும் கூறுகின்றனர்.
ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் இஸ்லாமியப் படையின் செய்தியை அறிந்து வருவதற்காக ஓர் ஒற்றனை
அனுப்பினான். முஸ்லிம்கள் அவனைக் கைது செய்து கொன்று விட்டனர். ஹாரிஸ் இப்னு ழிராருக்கும்
அவனுடன் இருந்தவர்களுக்கும் “நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஒற்றர்களைக் கொன்று விட்டார்கள்.
மேலும், தங்களை நோக்கி விரைந்து வருகிறார்கள்” என்ற செய்தி கிடைத்தவுடன் அவர்களுக்குக்
கடுமையான அச்சம் ஏற்பட்டது. இதனால் பல அரபுக் கிளையினர் அவர்களின் படையிலிருந்து விலகிச்
சென்று விட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் ‘முரைஸீ’ என்ற இடத்தை வந்தடைந்தார்கள். இங்குதான் எதிரிகள் தங்கியிருந்தனர்.
இது கடற்கரைக்கு அருகில் ‘குதைத்’ என்ற ஊர் ஓரத்தில் உள்ள கிணறாகும். அங்கு நபியவர்கள்
தங்களது தோழர்களை வரிசையாக நிற்கவைத்து முஹாஜிர்களுக்குரிய கொடியை அபூபக்ர் (ரழி) அவர்களிடமும்,
அன்சாரிகளுக்குரிய கொடியை ஸஅது இப்னு உபாதா (ரழி) அவர்களிடமும் கொடுத்தார்கள். பின்பு
இரு படையினரும் சிறிது நேரம் அம்பெறிந்து சண்டை செய்து கொண்டனர். அதற்குப் பின் நபியவர்கள்
கட்டளையிடவே தோழர்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாக எதிரிகள் மீது பாய்ந்தனர். அல்லாஹ்வின்
அருளால் முஸ்லிம்களுக்கு வெற்றியும் இணைவைப்பவர்களுக்குத் தோல்வியும் கிடைத்தது. போருக்கு
வந்திருந்த எதிரிகளின் பெண்களையும், பிள்ளைகளையும், ஆடுகள் மற்றும் ஏனைய கால்நடைகளையும்
முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். இப்போல் எதிரிகளால் முஸ்லிம்களில் எவரும் கொலை செய்யப்படவில்லை.
ஆனால், அன்சாரி ஒருவர் ஒரு முஸ்லிமை எதிரிப் படையில் உள்ளவர் என்று எண்ணி தவறாகக் கொலை
செய்து விட்டார்.
இப்போரைப் பற்றி இவ்வாறுதான் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், அறிஞர்
இப்னுல் கய்” (ரஹ்) இதற்கு மாற்றமாகக் கூறுகிறார். அவர் கூறுவதாவது: இப்படையெடுப்பில்
சண்டை ஏதும் நடைபெறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் முஸ்தலக் கிளையினர் மீது தாக்குதல்
நடத்த வந்தார்கள். முஸ்தலக் கிளையினர் கொள்ளையிடுவதற்காக தங்கள் ஊரை விட்டு வெளியில்
சென்றிருந்தனர். நபியவர்கள் அவர்களின் குடும்பங்களையும் பொருட்களையும் கைப்பற்றிக்
கொண்டு திரும்பினார்கள். இவ்வாறுதான் ஸஹீஹுல் புகாரியிலும் வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இக்கூட்டத்தின் தலைவர் ஹாரிஸின் மகள் ஜுவைரியாவும் இருந்தார்.
இவரை ஸாபித் இப்னு கைஸ் (ரழி) தனது பங்கில் பெற்றார். இவரை உரிமை விடுவதற்காக இவரிடம்
ஓர் ஈட்டுத் தொகை பேசி ஸாபித் (ரழி) ஒப்பந்தம் செய்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள்
ஜுவைரியாவின் சார்பாக அத்தொகையைக் கொடுத்து விட்டார்கள். பின்பு ஜுவைரியாவைப் பெண்
பேசி திருமணம் செய்து கொண்டார்கள். நபியவர்களின் திருமணத்தின் காரணமாக முஸ்தலக் கிளையைச்
சேர்ந்த நூறு குடும்பத்தினரை முஸ்லிம்கள் உரிமையிட்டனர். ஏனெனில், இப்போது இந்த கைதிகளெல்லாம்
நபியவர்களின் மாமனார் குடும்பத்தைச் சேர்ந்தவர் களாயிற்றே! அவர்களை எப்படி நாம் அடிமைகளாக
வைத்திருப்பது என்று நபித்தோழர்கள் காரணம் கூறினார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
இப்போரில் ஏற்பட்ட ஏனைய சம்பவங்களின் தலையாய காரணமாக இருந்தவன் நயவஞ்ச கர்களின் தலைவன்
அப்துல்லாஹ் இப்னு உபையும் அவனது கூட்டாளிகளுமே. ஆகவே, இஸ்லாமியச் சமுதாயத்தில் இந்நயவஞ்சகர்களின்
செயல்பாடுகள் பற்றி முதலில் சற்று தெரிந்து கொள்வது அவசியமாகும்.
நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள்
அப்துல்லாஹ் இப்னு உபை இஸ்லாமின் மீதும் முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நபி (ஸல்) அவர்களின்
மீதும் எல்லையற்ற எரிச்சல் கொண்டிருந்தான். அதற்குக் காரணம் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு
கிளையினரும் இவனைத் தலைவனாக்கி மணிமகுடம் சூட்டுவதற்குத் தயாராக இருந்த சமயத்தில் நபி
(ஸல்) வருகை தர, அவர்கள் அனைவரும் இவனைப் புறக்கணித்து விட்டு நபி (ஸல்) அவர்களின்
பக்கம் திரும்பிவிட்டனர். இதனால் நபியவர்கள்தான் தனது ஆட்சியை பறித்துக் கொண்டார்கள்
என்று இவன் மனம் புழுங்கிக் கொண்டிருந்தான்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும் முன்பும்,
ஏற்றுக் கொண்ட பின்பும் இந்த பகைமையையும் கசப்பையும் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டிருந்தான்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு உபாதா (ரழி) அவர்களை நலம் விசாரிப்பதற்காக கழுதையின்
மீது சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வழியில் ஒரு சபையில் அப்துல்லாஹ் இப்னு உபை
அமர்ந்திருந்தான். அவனைக் கடந்து செல்லும்போது “முஹம்மதே! எங்களின் மீது புழுதியைக்
கிளப்பாதீர்” என்று கூறினான். நபி (ஸல்) அவர்கள் அச்சபையில் நின்று குர்ஆன் ஓதிக் காண்பித்தார்கள்.
அதற்கு அவன் “நீ உனது வீட்டில் உட்கார்ந்து கொள்! எங்களது சபையில் வந்து எங்களைத் தொந்தரவு
செய்யாதே” என்று நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கூறினான். இது அவன் இஸ்லாமை ஏற்றுக்
கொள்வதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியாகும். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு
ஹிஷாம்)
பத்ர் போருக்குப் பின் இவன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டான். ஆனால், வாயளவில் தான் ஏற்றுக்கொண்டான்
மனப்பூர்மாக அல்ல. ஆகவே, இவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களுக்கும்
எதிரியாகவே இருந்து வந்தான். இஸ்லாமியச் சமுதாயத்தை பிரிப்பதற்கும், இஸ்லாமை பலவீனப்படுத்துவதற்கும்
எப்போதும் சிந்தனை செய்து வந்தான். இஸ்லாமின் எதிரிகளுடன் தோழமை கொண்டிருந்தான். கைனுகா
யூதர்களின் விஷயத்தில் இவன் குறுக்கிட்டது போன்றே உஹுத் போரில் இவன் செய்த மோசடி, முஸ்லிம்களைப்
பிரிப்பதற்காக செய்த சூழ்ச்சி, முஸ்லிம்களின் அணிகளுக்கு மத்தியில் அவன் ஏற்படுத்திய
குழப்பங்கள், சலசலப்புகள் பற்றி இதற்கு முன்பு நாம் கூறியிருக்கின்றோம்.
இவன் இஸ்லாமை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டபின் முஸ்லிம்களை மிக அதிகமாக ஏமாற்றி, அவர்களுக்கு
வஞ்சகம் செய்து வந்தான். நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜுமுஆ பேருரைக்காக மிம்பரில்
ஏறி அமர்ந்தவுடன் இவன் எழுந்து “இவர்தான் அல்லாஹ்வின் தூதர்! இதோ... இவர் உங்களுக்கு
மத்தியில் இருக்கிறார் இவர் மூலம் அல்லாஹ் உங்களுக்கு கண்ணியத்தையும் மதிப்பையும் வழங்கியிருக்கின்றான்
இவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள் இவருக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள் இவன் பேச்சை செவி
தாழ்த்தி கேளுங்கள் இவருக்கு கீழ்ப்படியுங்கள்” என்று கூறிவிட்டு அமர்ந்து கொள்வான்.
அதற்குப் பின் நபி (ஸல்) எழுந்து பிரசங்கம் செய்வார்கள்.
இந்த நயவஞ்சகனின் வெட்கங்கெட்ட தன்மைக்கு இதை உதாரணமாகக் கூறலாம்: இவன் உஹுத் போரில்
செய்த மோசடிகள் அனைவருக்கும் தெரிந்ததே. நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரிலிருந்து மதீனாவிற்குத்
திரும்பியப் பின் ஒரு நாள் வெள்ளிக்கிழமையன்று பிரசங்கத்திற்காக எழுந்தார்கள். அப்போது
அவன், தான் வழக்கமாக சொல்லி வந்ததைச் சொல்வதற்காக எழுந்தான். ஆனால், முஸ்லிம்கள் அவனது
ஆடையைப் பிடித்திழுத்து “அல்லாஹ்வின் எதிரியே! உட்காரடா... உனக்கு இதைக் கூறுவதற்கு
எந்த தகுதியுமில்லை. நீ செய்ய வேண்டிய அழிச்சாட்டியங்களை எல்லாம் செய்து விட்டாய்”
என்று கூறினார்கள். அதற்கவன் “நான் என்ன கெட்டதையா கூறினேன்! அவரது காரியத்தில் அவரைப்
பலப்படுத்தவே நான் எழுந்தேன்” என்று கூறியவனாக மக்களின் பிடரிகளை தாண்டிக் கொண்டு பள்ளியைவிட்டு
வெளியேறினான். பள்ளியின் வாயிலில் அன்சாரி ஒருவர் அவனைப் பார்த்து “உனக்கு நாசம் உண்டாகட்டும்!
நீ நபியவர்களிடம் திரும்பிச் செல். அவர்கள் உனக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவார்கள்”
என்றார். அதற்கவன் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எனக்காக பாவ மன்னிப்புத் தேட
வேண்டும் என்று எனக்கு எவ்வித ஆசையுமில்லை” என்றான். (இப்னு ஹிஷாம்)
மேலும், நளீர் இன யூதர்களுடன் அவன் தொடர்பு வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக
எப்போதும் சதித்திட்டம் தீட்டி வந்தான். இவன் நளீர் இன யூதர்களுக்கு கூறியதைப் பற்றி
அல்லாஹ் இவ்வாறு விவரிக்கிறான்:
(நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களிலுள்ள
நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை நோக்கி “நீங்கள் (உங்கள் இல்லத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால்
நாங்களும் உங்களுடன் வெளியேறி விடுவோம். உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு எதிராக) நாங்கள்
ஒருவருக்கும், ஒரு காலத்திலும் வழிப்பட மாட்டோம். (எவரும்) உங்களை எதிர்த்து போர் புரிந்தால்,
நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவி புரிவோம்” என்றும் கூறுகின்றனர். ஆனால், நிச்சயமாக
அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகின்றான். (அல்குர்ஆன் 59:11)
மேலும், இவனும் இவனது தோழர்களும் அகழ் போரில் இறைநம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பல
குழப்பங்களையும், திடுக்கங்களையும், சஞ்சலங்களையும் ஏற்படுத்தினர். இதைப் பற்றி அத்தியாயம்
அஹ்ஸாபில் 12லிருந்து 20 வரையிலுள்ள வசனங்களில் அல்லாஹ் தெளிவாக கூறுகின்றான்.
இஸ்லாமின் எதிரிகளான யூதர்கள், நயவஞ்சகர்கள், இணைவைப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் இஸ்லாமின்
வெற்றிக்கு என்ன காரணமென்பது நன்கு தெரிந்திருந்தது. அதாவது, இஸ்லாமின் வெற்றி பொருளாதாரப்
பெருக்கத்தினாலோ, ஆயுதங்கள், படைகள் மற்றும் போர் சாதனங்கள் ஆகியவை அதிகமாக இருந்ததினாலோ
அல்ல. மாறாக, இஸ்லாமியச் சமுதாயத்திடமும் மற்றும் இஸ்லாமில் இணைந்த ஒவ்வொருவரிடமும்
இருக்கும் உயர்ந்த பண்புகளும், நற்குணங்களும், முன்மாதிரியான தன்மைகளும்தான் இஸ்லாமின்
வெற்றிக்குக் காரணமாக இருக்கின்றன என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்துடன்
இந்த அனைத்து தன்மைகளுக்கும் காரணமாகவும் ஊற்றாகவும் விளங்கக்கூடியவர் நபி (ஸல்) அவர்கள்தான்
என்பதும் இவர்களுக்குத் தெரியும். அதுபோன்றே இந்த மார்க்கத்தை ஆயுதங்களாலும் ஆற்றலாலும்
அழிக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டதால் நேரடிப் போருக்குத் துணிவின்றி
மறைமுகச் சூழ்ச்சிப் போருக்கு வித்திட்டனர். இம்மார்க்கத்தின் பண்பாடு மற்றும் கலாச்சார
ரீதியாக இம்மார்க்கத்திற்கு எதிராகப் பொய் பிரச்சாரங்களை பரப்ப வேண்டும் இந்த பொய்
பிரச்சாரத்திற்கு முதல் இலக்காக நபி (ஸல்) அவர்களை ஆக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
முஸ்லிம்களின் அணியில் நயவஞ்சகர்களும் கலந்திருந்ததுடன் அந்த நயவஞ்சகர்கள் மதீனாவாசிகளாகவும்
இருந்ததால் முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிட்டு விளையாடுவது
எதிரிகளுக்குச் சாத்தியமாக இருந்தது. எனவே, இந்தப் பொய் பிரச்சாரத்தைப் பரப்புவதற்குரிய
பொறுப்பை நயவஞ்சகர்களே ஏற்றுக் கொண்டனர். இதில் இவர்களின் தலைவனாக இருந்த இப்னு உபை
முக்கியப் பங்கு வகித்தான்.
இவர்களது இந்தத் திட்டம் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது. அதாவது, நபி (ஸல்)
அவர்களின் வளர்ப்பு மகன் ஜைதுப்னு ஹாஸா (ரழி) தன் மனைவி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களைத்
தலாக் விட்டதற்குப் பின் அவரை நபி (ஸல்) திருமணம் செய்து கொண்டார்கள். அரபுகள் தங்களின்
கலாச்சாரப்படி வளர்ப்பு மகனைப் பெற்ற மகனைப் போல் கருதினர். மகனின் மனைவியைத் தலாக்கிற்குப்
பின் தந்தை மணம் முடிப்பது எவ்வாறு குற்றமான செயலாக கருதப்பட்டு வந்ததோ அதேபோல் வளர்ப்பு
மகனின் மனைவியையும் வளர்ப்புத் தந்தை திருமணம் முடிப்பதை குற்றமாகவே கருதினர். ஆகவே,
நபி (ஸல்) ஜைனபை திருமணம் முடித்துக் கொண்டதும் நயவஞ்சகர்கள் நபியவர்களுக்கெதிராக சர்ச்சையைக்
கிளப்புவதற்கு இரண்டு வழிகளைக் கையாண்டனர்.