பக்கம் -73-
முதலாவது: நபி (ஸல்) அவர்களின் இத்திருமணம் ஐந்தாவது திருமணமாக இருந்தது.
குர்ஆன் நான்கு பெண்களை மட்டும் திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்று அனுமதித்திருக்க
நபி (ஸல்) எப்படி ஐந்தாவது திருமணம் செய்தார்கள்?
இரண்டாவது: ஜைனப் (ரழி) நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனின் மனைவியாக இருந்தார். எனவே
அரபுகளின் கலாச்சாரப்படி ஜைனபைத் திருமணம் முடித்தது மாபெரும் குற்றமாகும்.
இது விஷயத்தில் பெரும் பொய்க் கதைகளையும் கற்பனைகளையும் நயவஞ்சகர்கள் புனைந்தனர். அதாவது,
முஹம்மது ஒருமுறை திடீரென ஜைனபைப் பார்த்து விட்டார். அப்போது ஜைனபின் அழகில் மயங்கி
ஜைனபின் மீது காதல் கொண்டார். இதை அறிந்த அவரது வளர்ப்பு மகன் முஹம்மதுக்காகத் தனது
மனைவியை விட்டுக் கொடுத்து விட்டார் என்று கூறினர். இந்தக் கட்டுக் கதையை அவர்கள் எந்தளவு
பரப்பினார்கள் என்றால், இன்று வரை அதன் தாக்கம் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் நூற்களில் காணக்
கிடைக்கிறது. இந்த பொய்ப் பிரச்சாரம் இறை நம்பிக்கையில் குறையுள்ளவர்களைப் பெரிதும்
பாதித்தது. ஆகவே, உள்ளங்களில் ஏற்பட்ட சந்தேக நோய்களைக் குணப்படுத்தும் விதமாக பல தெளிவான
வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் இறக்கி வைத்தான். இது பொய்ப் பிரச்சாரம் என்று அல்லாஹ்
அத்தியாயம் அஹ்ஜாபின் தொடக்கத்திலேயே இவ்வாறு கூறுகின்றான்:
நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும்
(பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும்
ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:1)
இதுவரை நாம் கூறியது முஸ்தலக் போருக்கு முன்னர் நயவஞ்சகர்கள் புரிந்த தில்லு முல்லுகளின்
சுருக்கமான ஒரு கண்ணோட்டமாகும். இவை அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் மிகப் பொறுமையுடனும்,
நளினத்துடனும், நுட்பத்துடனும் எதிர்கொண்டு சகித்து வந்தார்கள். மற்ற முஸ்லிம்கள் அந்நயவஞ்சகர்களின்
தீங்கிலிருந்து தங்களைத் தற்காத்து வந்தனர் அல்லது அவர்களின் தீங்குகளைச் சகித்து வந்தனர்.
ஏனெனில், இந்நயவஞ்சகர்கள் ஒவ்வோர் ஆண்டும் பலமுறை இழிவுக்குள்ளாகிறார்கள் அவர்களது
உள்ளத்தின் இரகசியங்களைக் குர்ஆனில் வெளிப் படுத்தப்பட்டு கேவலத்திற்கு உள்ளாகிறார்கள்
என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ அவர்கள் கஷ்டத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர்
என்பதை அவர்கள் காண வில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விடுவதுமில்லை நல்லுணர்ச்சி
பெறுவதுமில்லை. (அல்குர்ஆன் 9:126)
முஸ்தலக் போரில் நயவஞ்சகர்கள்...
முஸ்தலக் போரில் நயவஞ்சகர்களும் முஸ்லிம்களுடன் கிளம்பி இருந்ததால் அல்லாஹ் திருமறையிலே
சுட்டிக்காட்டும்...
அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதனையும்) உங்களுக்கு அதிகரிக்கச்
செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டுபண்ணி
இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் இத்தகைய
அநியாயக்காரர்களை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:47)
இக்கூற்றுக்கு ஒப்பாகவே அவர்கள் நடந்து கொண்டனர். தீங்கு செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட
இவர்கள் முஸ்லிம்களின் அணியில் பெரும் பிணக்கையும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக மிக
இழிவான பழியையும் உருவாக்கினர். அதன் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.
1) நயவஞ்சகர்களின் கூற்று:
நாம் மதீனாவிற்குத் திரும்பினால் இழிவானவர்களைக் கண்ணியமானவர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்ற
வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் போர் முடித்துத் திரும்பும் போது ‘உரைஸிஃ’ என்ற இடத்தில் தங்கியிருந்தார்கள்.
அப்போது தண்ணீர் நிரப்பிக் கொள்ளும் ஓர் இடத்தில் முஹாஜிர்களில் ஜஹ்ஜாஹ் அல் கிஃபா
என்பவரும், அன்சாரிகளில் கினான் இப்னு வபர் அல் ஜுஹ்னி என்பவரும் சண்டை செய்து கொண்டனர்.
அப்போது ஜுஹ்னி “அன்சாரிகளின் கூட்டமே! உதவிக்கு வாருங்கள்” என்றார். ஜஹ்ஜாஹ் “முஹாஜிர்களின்
கூட்டமே! உதவிக்கு வாருங்கள்” என்றார். இக்கூச்சலைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நான்
உங்களுக்கு மத்தியில் இருக்கும்போது இவ்வாறு அறியாமைக்கால வார்த்தைகளையா பயன்படுத்துகிறீர்கள்?
இதை விட்டு விடுங்கள். அது மிக அசுத்தமானது!” என்று எச்சரித்தார்கள்.
இந்தச் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூலுக்கு எட்டியது. இதனால் அவன் கோபமடைந்தான்.
அவனுடன் அவனது இனத்தவரில் சிலர் இருந்தனர். அவர்களில் மிகச் சிறிய வயதுடைய ஜைதுப்னு
அர்கம் என்பவரும் இருந்தார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை “இப்படியா அவர்கள் செய்தார்கள்!
நமக்கு வெறுப்பூட்டி விட்டார்கள். நமது ஊருக்கு வந்த வந்தேறிகள் நம்மையே மிகைத்து விட்டார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நமக்கும் அவர்களுக்குமுள்ள உதாரணம்: ‘உனது நாயை நல்ல கொழுக்க
வளர்ப்பாயாக! அது இறுதியில் உன்னையே தின்றுவிடும்’ (வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது)
என்பதுதான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியமானவர்கள்
இழிவானவர்களை அங்கிருந்து வெளியேற்றியே ஆக வேண்டும்” என்று கூறினான். மேலும், தனக்கு
முன் இருந்தவர்களை (அன்சாரிகளை) நோக்கி, “பார்த்தீர்களா! இது நீங்கள் உங்களுக்கே தேடிக்
கொண்டது. அவர்களை உங்கள் ஊரில் தங்க வைத்து உங்களது பொருட்களை பங்கு வைத்துக் கொடுத்தீர்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டால்
அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்” என்று கூறினான்.
ஜைது இப்னு அர்கம் தனது தந்தையின் சகோதரரிடம் இச்செய்தியைக் கூற, அவர் நபி (ஸல்) அவர்களிடம்
கூறினார். அங்கு உமரும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இதைக் கேட்ட உமர் (ரழி)
அவர்கள் “நபியே! அப்பாத் இப்னு பிஷ்ருக்குக் கட்டளையிடுங்கள். அவர் அவனைக் கொன்று விடட்டும்”
என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உமரே! அப்படி எவ்வாறு செய்ய முடியும்? முஹம்மது
தமது தோழர்களைக் கொல்கிறார் என்று மக்கள் பேசுவார்கள். எனவே, அவ்வாறு செய்யக் கூடாது.
நீர் அனைவரையும் இங்கிருந்து புறப்படுவதற்கு அறிவிப்புச் செய்!” என்று கூறினார்கள்.
பொதுவாக நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் பயணிக்க மாட்டார்கள். மக்கள் நபி(ஸல்) அவர்களின்
கட்டளைக்கிணங்க பயணத்தைத் தொடங்கினர். அப்போது உஸைது இப்னு ஹுழைர் (ரழி) அவர்கள் நபி
(ஸல்) அவர்களை சந்தித்து வாழ்த்துக் கூறி, “நபியே! நீங்கள் வழக்கத்துக்கு மாற்றமான
நேரத்தில் பயணிக்கிறீர்களே!” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “இப்னு உபை
கூறிய செய்தி உமக்கு தெரியாதா?” என்று கேட்டார்கள். அதற்கு உஸைது (ரழி), “அவன் என்ன
கூறினான்?” என்று கேட்டார். “அவன் மதீனாவிற்குத் திரும்பினால் அதிலுள்ள கண்ணியவான்கள்
இழிவானவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உஸைது (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பினால் அவனை மதீனாவிலிருந்து வெளியேற்றலாம்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவன் இழிவானவன். நீங்கள்தான் கண்ணியமானவர்கள்” என்று கூறிவிட்டு
“அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவனுடன் சற்று மிருதுவாக நடந்து கொள்ளுங்கள். அவனது கூட்டத்தினர்
அவனைத் தங்களது தலைவராக்க நினைத்த போது அல்லாஹ் உங்களை எங்களிடம் கொண்டு வந்தான். எனவே,
நீங்கள்தான் அவனது பதவியைப் பறித்துக் கொண்டீர்கள் என்று அவன் எண்ணுகிறான்” என்று ஆறுதல்
கூறினார்கள்.
அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்துக் கொண்டு மாலைவரை பயணித்தார்கள். பயணத்தில்
எங்கும் ஓய்வெடுக்காமல் அன்று இரவிலிருந்து மறுநாள் முற்பகல் வரை தொடர்ந்து பயணம் செய்தார்கள்.
அதற்குப் பின் மக்களுக்கு ஓய்வெடுக்க அனுமதி கொடுத்தார்கள். கடுமையான களைப்பின் காரணமாக
மக்கள் இறங்கியவுடன் அயர்ந்து தூங்கி விட்டார்கள். இவ்வாறு நபி (ஸல்) செய்ததற்குக்
காரணம், மக்கள் வேறு எந்த பேச்சிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக இருக்கலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் ஜைதுப்னு அர்கம் இச்செய்தியைக் கூறிவிட்டார் என்ற விவரம் அப்துல்லாஹ்
இப்னு உபைக்கு தெரியவந்தது. உடனே அவன் நபியவர்களைச் சந்தித்து தான் அப்படி எதுவும்
பேசவில்லை என்று சத்தியம் செய்து கூறினான். நபி (ஸல்) அவர்களுடன் இருந்த சில அன்சாரிகள்,
“அல்லாஹ்வின் தூதரே! ஜைது சிறுவர். அவர் சரியாக விளங்கி இருக்கமாட்டார். இப்னு உபை
கூறிய சொல்லை அச்சிறுவர் சரியாக நினைவில் வைக்கத் தெரியாது. எனவே, இப்னு உபை கூறுவதை
நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றனர்.
இது தொடர்பாக ஜைது இப்னு அர்கம் அவர்களே கூறுகிறார்கள்: “மக்கள் என்னை பொய்யர் என்று
கூறியதால் எனக்கு இதுவரை ஏற்பட்டிராத பெரும் கவலை ஏற்பட்டு நான் எனது வீட்டிலேயே உட்கார்ந்து
கொண்டேன். அந்நிலையில் எனது கூற்றை உண்மைப்படுத்தி குர்ஆனில் அத்தியாயம் 63ல் ஒன்று
முதல் எட்டு வரை உள்ள வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.
ஜைது இப்னு அர்கம் (ரழி) கூறுகிறார்கள்: “இந்த வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்
இறக்கி வைத்தவுடன் அவர்கள் என்னை அழைத்து இவற்றைக் ஓதிக்காண்பித்து அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி
விட்டான்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நயவஞ்சகனான அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஒரு மகன் இருந்தார். அவரது பெயரும் அப்துல்லாஹ்தான்.
இவர் சிறப்புமிக்க நபித்தோழர்களில் ஒருவராக விளங்கினார். இவர் தனது தந்தையின் செயல்களைப்
பற்றி தெரிந்தவுடன் அவனிடமிருந்து விலகிக் கொண்டார். முஸ்லிம்கள் மதீனாவுக்குத் திரும்பிய
போது மதீனாவின் நுழைவாயிலில் தனது வாளை உருவியவராக இவர் நின்று கொண்டார். அவரது தந்தை
இப்னு உபை அங்கு வந்த போது தனது தந்தை என்று கூட பார்க்காமல் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
நபி (ஸல்) உன்னை அனுமதிக்காத வரை நீ இங்கிருந்து செல்ல முடியாது. நிச்சயமாக நபியவர்கள்தான்
கண்ணியமிக்கவர், நீதான் இழிவானவன்” என்று கூறி அவனைத் தடுத்து விட்டார். நபி (ஸல்)
அங்கு வந்து அவனுக்கு மதீனாவிற்குள் செல்ல அனுமதி அளிக்கவே அப்துல்லாஹ் (ரழி) அவனுக்கு
வழிவிட்டார்கள். மேலும், அவர் இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட போதே “அல்லாஹ்வின் தூதரே!
நீங்கள் அவனைக் கொல்ல வேண்டும் என்று விரும்பினால் அதைச் செய்ய எனக்குக் கட்டளையிடுங்கள்!
நான் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவனது தலையை உங்களிடம் கொண்டு வருகிறேன்.” என்று
நபி (ஸல்) அவர்களிடம் கூறியிருந்தார். (இப்னு ஹிஷாம்)
2) அவதூறு சம்பவம்:
இப்போல்தான் இட்டுக்கட்டப்பட்ட அச்சம்பவம் நடைபெற்றது. அதன் சுருக்கமாவது:
நபி (ஸல்), பயணத்தில் மனைவிமார்களில் யாரை உடன் அழைத்துச் செல்வது என சீட்டுக் குலுக்கிப்
போடுவது வழக்கம். அவ்வாறே இப்பயணத்தில் ஆயிஷா (ரழி) அவர்களின் பெயர் வரவே, அவரைத் தன்னுடன்
அழைத்துச் சென்றார்கள். போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது படைகளுடன் ஓர் இடத்தில்
தங்கினார்கள். அங்கு ஆயிஷா (ரழி) தங்களது சுய தேவைக்காக வெளியே சென்று விட்டுத் திரும்பி
வந்தார்கள். அவர்கள் பயணத்தில் வரும் போது தனது சகோதரி ஒருவரிடமிருந்து கழுத்து மாலை
ஒன்றை இரவல் வாங்கி வந்திருந்தார். அவர்கள் சென்ற இடத்தில் அந்த மாலை விழுந்து விட்டது.
அது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் தங்களின் கூடாரத்திற்கு வந்த பிறகு அது தவறியது
தெரிய வரவே, அதைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் சென்றதை யாரும் பார்க்கவில்லை. நிலைமை
இவ்வாறு இருக்க நபியவர்கள் தங்கள் தோழர்களுக்குப் பயணத்தைத் தொடர கட்டளையிட்டார்கள்.
ஆயிஷா (ரழி) அமர்ந்து வந்த தொட்டியை ஒட்டகத்தின் மீது ஏற்றுவதற்காக வந்தவர்கள் ஆயிஷா
(ரழி) அதில் இருக்கிறார் என்றெண்ணி அதை ஒட்டகத்தின் மீது ஏற்றிவிட்டார்கள். ஏற்றி வைத்தவர்கள்
இரண்டுக்கும் மேற்பட்டவர்களாக இருந்ததால் தொட்டி எடை குறைந்திருந்ததை அறிந்து கொள்ள
முடியவில்லை. மேலும், ஆயிஷா (ரழி) வாலிபப் பெண்ணாக இருந்ததால் உடல் பருமன் இல்லாமல்
மெலிந்தவராக இருந்தார். ஒருவர் அல்லது இருவர் கஜாவா பெட்டியைத் தூக்கியிருந்தால் ஆயிஷா
(ரழி) அதில் இல்லாததை உணர்ந்திருக்க முடியும்.
இதற்குப் பின் அனைவருமே அங்கிருந்து பயணித்து விட்டனர்.
மாலையைத் தேடிச் சென்ற ஆயிஷா (ரழி) அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு தனது இருப்பிடம்
திரும்பிய போது அங்கு ஒருவரும் இருக்கவில்லை. தன்னைக் காணவில்லை என்று தெரிந்தவுடன்
தேடி வருவார்கள் என்று எண்ணி ஆயிஷா (ரழி) அங்கேயே தங்கி விட்டார்கள். அல்லாஹ் தனது
காரியத்தில் மிகைத்தவன். அர்ஷுக்கு மேலிருந்து கொண்டு தான் நாடியபடி அனைத்தையும் நிர்வகிக்கின்றான்.
ஆயிஷா (ரழி) கண்ணயர்ந்து தூங்கி விட்டார்கள். அப்போது அங்கு வந்த ஸஃப்வான் இப்னு முஅத்தல்
(ரழி) “இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிவூன். அல்லாஹ்வின் தூதரின் மனைவியாயிற்றே!” என்று
உரக்கக் கூறினார். இதைக் கேட்ட ஆயிஷா (ரழி) விழித்தெழுந்தார்கள். ஸஃப்வான் (ரழி) படையின்
பிற்பகுதியில் தங்கியிருந்தார் அவர் அதிகம் தூங்குபவராக இருந்தார். ஆயிஷா (ரழி) அவர்களை
“ஜாப்ம் (பர்தா) உடைய சட்டம் வருவதற்கு முன் பார்த்திருந்ததால் இப்போது பார்த்தவுடன்
அறிந்து கொண்டார். தனது ஒட்டகத்தை இழுத்து வந்து அவர்களுக்கருகில் உட்கார வைத்தவுடன்
அதன்மீது ஆயிஷா (ரழி) ஏறிக் கொண்டார்கள். அன்னை ஆயிஷாவிடம் வேறு எவ்வித பேச்சும் ஸஃப்வான்
(ரழி) பேசவில்லை. ஆயிஷா (ரழி) ‘இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்’ என்பதைத் தவிர ஸஃப்வானிடமிருந்து
வேறு எந்த சொல்லையும் கேட்கவில்லை.
ஸஃப்வான் (ரழி) அவர்கள் ஒட்டகத்தை இழுத்தவராக நபி (ஸல்) அவர்களின் சமூகம் வந்து சேர்ந்தார்.
அப்போது முஸ்லிம்களின் படை மதிய நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். இக்காட்சியைப்
பார்த்த மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பாணியில் தங்களின் பண்பிற்கேற்ப பேசினார்கள்.
அப்போதுதான் அல்லாஹ்வின் எதிரியான தீயவன் இப்னு உபை தனது குரோதத்தையும், நயவஞ்சகத்தையும்
வெளிப்படுத்தினான். ஓர் அவதூறான கதையைப் புனைந்து, அதை மக்களுக்கு மத்தியில் இரகசியமாகவும்,
பகிரங்கமாகவும் பரப்பினான். அவனது நண்பர்களும் அவனுடன் இக்காரியத்தில் ஈடுபட்டனர்.
முஸ்லிம்கள் மதீனா திரும்பியதற்குப் பின் கதையை புனைவதில் பாவிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.
நபியவர்களோ எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். பின்பு அல்லாஹ்விடமிருந்து
அறிவிப்பு வருவது தாமதமாகிவிடவே, ஆயிஷாவைப் பிரிந்து விடும் விஷயத்தில் தங்களது தோழர்களிடம்
ஆலோசனை செய்தார்கள். ஆயிஷா (ரழி) பிரிந்து விட்டு வேறொருவரை மணந்து கொள்ள அலீ (ரழி)
மறைமுகமாக ஆலோசனை சொன்னார்கள். உஸாமா இப்னு ஜைதும் (ரழி) மற்ற தோழர்களும் “எதிரிகளின்
பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம். ஆயிஷாவைப் பிரிந்து விடாதீர்கள்” என்று ஆலோசனைக் கூறினார்கள்.
நபி (ஸல்) மிம்பன் மீது ஏறி அப்துல்லாஹ் இப்னு உபையிடம் தங்களது மன வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.
இது அவ்ஸ் கிளையினரின் தலைவர் உஸைது இப்னு ஹுளைருக்குக் கோபத்தை மூட்டியது. அவர் அப்துல்லாஹ்
இப்னு உபையைக் கொல்ல வேண்டும் என்ற தனது கருத்தைத் தெரிவித்தார்கள். ஆனால், இப்னு உபையின்
கிளையைச் சேர்ந்த கஸ்ரஜினன் தலைவர் ஸஅது இப்னு உபாதாவிற்கு தனது இனத்தவரை இவ்வாறு கூறியது
வெறுப்பை மூட்டியது. இதனால் இரு கிளையினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நபி
(ஸல்) அவ்விரு கிளையினரையும் சமாதானப்படுத்தினார்கள்.
போரிலிருந்து திரும்பியவுடன் ஒரு மாத காலமாக ஆயிஷா (ரழி) உடல் நலம் குன்றியிருந்தார்.
தன்னைப் பற்றி பேசப்பட்டு வந்த பொய்யான கதையை ஆயிஷா (ரழி) அறிந்திருக்கவில்லை. உடல்நலக்
குறைவு ஏற்பட்டால் எந்தளவு நபியவர்கள் பரிவு காட்டு வார்களோ அந்தப் பரிவை நபி (ஸல்)
அவர்களிடம் இப்போது அன்னை ஆயிஷா (ரழி) பார்க்கவில்லை.
சற்று உடல் நலம் தேறியது. ஓர் இரவு ‘உம்மு மிஸ்தஹ்’ என்ற தோழியுடன் சுயதேவையை நிறைவேற்றுவதற்காக
இரவில் வெளியில் சென்றார்கள். அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைப் பற்றி மதீனாவில் உலா வரும்
வதந்திகளில் உம்மு மிஸ்தஹுடைய மகனும் பங்கு பெற்றுள்ளார். இந்தக் கவலையும் சிந்தனையும்
உம்மு மிஸ்தஹை அதிகம் பாதிப்படைய வைத்தது. ஆயிஷா (ரழி) அவர்களுடன் சென்று கொண்டிருக்கும்
போது தனது மகனுக்கு அவதூறு விஷயத்தில் தொடர்புள்ளது என்று எவ்வாறு அவர்களிடம் கூறுவது?
இதே குழப்பத்தில் மனம் உழன்று கொண்டிருக்கும் போது உம்மு மிஸ்தஹ் (ரழி) தன்னுடைய ஆடையால்
தடுக்கிக் கீழே விழுந்தார், அப்போது தன்னை அறியாமலேயே அவர்கள் தனது மகனைத் திட்டினார்கள்.
“நீ கீழே விழுந்ததற்கு உன் மகனை ஏன் திட்டுகிறாய்?” என்று ஆயிஷா (ரழி) வினவிய போது,
உம்மு மிஸ்தஹ் (ரழி) ஆயிஷா (ரழி) அவர்களைப் பற்றி மக்களிடையே பரப்பப்பட்ட அவதூறுகளைக்
கூறினார்.
உம்மு மிஸ்தஹ் (ரழி) செய்தியைக் கூறிய உடனேயே, ஆயிஷா (ரழி) வீட்டிற்குத் திரும்பினார்கள்.
தனது பெற்றோர்களிடம் சென்று செய்தியை உறுதியாக தெரிந்துவர நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி
கேட்டார்கள். நபி (ஸல்) அனுமதி பெற்று, பெற்றோர்களைச் சந்தித்து உண்மை நிலவரத்தைத்
தெரிந்து கொண்டவுடன் ஆயிஷா (ரழி) வேதனை பொறுக்க முடியாமல் அழுதார்கள். இரண்டு இரவும்
ஒரு பகலும் தூங்காமல் அழுது கொண்டேயிருந்தார்கள். அவர்களது இந்த அழுகை அன்னாரின் ஈரலைப்
பிளந்துவிடுமளவுக்கு இருந்தது.
அப்போதுதான் நபி (ஸல்) அங்கு வந்து இறைவனைப் புகழ்ந்து துதித்துவிட்டு “ஆயிஷாவே! உன்னைப்
பற்றி எனக்கு இவ்வாறெல்லாம் செய்தி கிடைத்தது. நீ குற்றமற்றவளாக இருந்தால் அல்லாஹ்
உன்னை அப்பழியிலிருந்து நிரபராதியாக ஆக்குவான் உண்மையில் நீ பாவம் செய்திருந்தால் அல்லாஹ்விடம்
மன்னிப்புக் கேள் அவனிடம் பாவமீட்சி பெற்றுக்கொள். ஏனெனில், நிச்சயமாக அடியாரின் தனது
பாவத்தை ஒப்புக்கொண்டு அல்லாஹ்விடம் பாவமீட்சிக் கோரினால் நிச்சயமாக அல்லாஹ் அவனது
பாவங்களை மன்னித்து விடுவான்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தையைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள் தனது அழுகையை நிறுத்தி,
பெற்றோர் ஒவ்வொருவரிடமும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதில் அளிக்குமாறு கூறினார்கள்.
ஆனால், அவர்களுக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியவில்லை. அப்போது ஆயிஷா (ரழி) “நான்
நிலைமை என்னவென்று நன்கு தெரிந்து கொண்டேன். இந்தச் செய்தியை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டதால்
அது உங்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து விட்டது. அது உண்மை என்று நீங்கள் நம்பியும்
விட்டீர்கள்! அல்லாஹ்வுக்குத் தெரியும் நான் குற்றமற்றவள் என்று! நான் உங்களுக்கு என்னைப்
பற்றி குற்றமற்றவள் என்று கூறினால் நீங்கள் அது விஷயத்தில் என்னை நம்ப மாட்டீர்கள்!
நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், நான் இவ்விஷயத்தை ஒப்புக் கொண்டால்
மட்டும் நீங்கள் என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கும் உங்களுக்கும்
யூஸுஃப் நபியின் தந்தை யஅகூப் (அலை) கூறிய,
ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் அல்லாஹ்விடம்
உதவி தேடுகிறேன்”. (அல்குர்ஆன் 12:18)
என்ற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தையைக் கூற எனக்குத் தெரியவில்லை.
பின்பு தன் முகத்தைத் திருப்பி சாய்ந்து படுத்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் நபி
(ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி அருளப்பட்டது. அது முடிந்தவுடன் நபி (ஸல்) சிரித்தவர்களாக
“ஆயிஷாவே! அல்லாஹ் உன்னை நிரபராதி ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா
(ரழி) அவர்களின் தாயார் “ஆயிஷாவே! நபியிடம் எழுந்து செல்” என்று கூறினார்கள். அதற்கு
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களிடம் எழுந்து செல்ல மாட்டேன். மேலும் நான்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் புகழவுமாட்டேன்” என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரழி), தான் நிரபராதி என்பதாலும், தன்னை நபி (ஸல்) நேசிக்கிறார்கள் என்பது உறுதியாகத்
தெரிந்திருந்ததாலும் இவ்வாறு கூறினார்கள்.
இந்தப் பொய்யான சம்பவம் தொடர்பாக அல்லாஹ் குர்ஆனின் 24 ஆம் அத்தியாயத்தில் 11லிருந்து
20 வரை உள்ள வசனங்களை இறக்கினான்.
இந்த சம்பவத்தை இட்டுகட்டியவர்களில் - மிஸ்தஹ், ஹஸ்ஸான், ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோருக்கு
80 கசையடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், இவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்த அப்துல்லாஹ்
இப்னு உபையை அடிக்கவில்லை. இவன்தான் இதற்கு மூல காரணமாவான். இவனைத் தண்டிக்காமல் விட்டதற்குக்
காரணம் என்னவெனில், உலகத்தில் யார் மீது தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு விடுகிறதோ அவர்கள்
மறுமையில் தண்டிக்கப்பட மாட்டார்கள். ஆனால், மறுமையில் மகத்தான தண்டனை இவனுக்கு உண்டென
அல்லாஹ் குர்ஆனில் இவனைப் பற்றி எச்சரிக்கை செய்து விட்டான். எனவே, இவ்வுலகில் இவனுக்கு
தண்டனை நிறைவேற்றப்படவில்லை அல்லது எந்த நலனைக் கருதி நபி (ஸல்) இவனை முன்பு கொலை செய்யாமல்
விட்டுவிட்டார்களோ அதே நலனைக் கருதி இந்த தண்டனையையும் நிறைவேற்றாமல் விட்டிருக்கலாம்.
(ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
ஒரு மாதத்திற்குப் பின் இந்தப் பிரச்சனையால் உண்டான சந்தேகம் மற்றும் குழப்பங்கள் மதீனாவை
விட்டு முற்றிலுமாக அகன்றன. நயவஞ்சகர்களின் தலைவன் இப்னு உபை பெரும் கேவலமடைந்தான்.
இந்த இழிவுக்குப் பின் சமூகத்தில் அவன் தலையை நிமிர்த்த முடியவில்லை.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: இச்சம்பவத்திற்குப் பின் இப்னு உபை ஏதாவது பேசினால்
அவனது கூட்டத்தினரே அவனைக் கண்டித்து அடக்கி விடுவார்கள். இதைப் பார்த்த நபியவர்கள்
உமர் (ரழி) அவர்களிடம் “உமரே நீர் என்ன கருதுகிறீர்? நீர் என்னிடம் அவனைக் கொலை செய்ய
வேண்டும் என்று கூறிய அன்றே நான் இவனைக் கொலை செய்திருந்தால் அவனது கூட்டத்தினர் என்
மீது மிகுந்த கோபம் அடைந்திருப்பார்கள். ஆனால், இன்று அவனது கூட்டத்தனரிடம் அவனைக்
கொலை செய்து விடுங்கள் என்று நான் கூறினால் அவர்கள் அவனைக் கொலை செய்து விடுவார்கள்”
என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இவ்வார்த்தையைக் கேட்ட உமர் (ரழி) “அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதருடைய செயல் எனது செயலைவிட நேர்த்திமிக்கது என்பதை
இப்போது நான் உறுதியாக தெரிந்து கொண்டேன்” என்றார்கள். (இப்னு ஹிஷாம்)