பக்கம் -74-
குழுக்களும் படைப்பிரிவுகளும்
சற்று முன் கூறப்பட்ட முரைஸீ போருக்குப் பின் அனுப்பப்பட்ட குழுக்கள்
மற்றும் படைப் பிரிவுகளைப் பற்றி இங்கு நாம் கூறயிருக்கிறோம்:
1) ‘அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்’ படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் ‘தவ்மதுல்
ஜன்தல்’ எனும் பகுதியில் இருக்கும் கல்பு கிளையினரின் ஊர்களுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு
அவ்ஃப் (ரழி) அவர்களுடன் ஒரு படைப்பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். அனுப்பும் போது
அவரை நபி (ஸல்) தனக்கு முன் அமர வைத்து, தனது கரத்தால் அவருக்குத் தலைப்பாகை கட்டிவிட்டார்கள்.
மேலும், போரில் மிக அழகிய முறைகளைக் கையாள வேண்டும் என்று உபதேசம் செய்ததுடன் “அவர்கள்
உமக்கு கீழ்ப்படிந்து விட்டால் அவர்களுடைய தலைவன் மகளை நீர் திருமணம் செய்துகொள்!”
என்றும் கூறினார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அங்கு சென்று மூன்று நாட்கள் தங்கி அந்தக் கூட்டத்தினருக்கு
இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று அக்கூட்டத்தினர் அனைவரும்
இஸ்லாமைத் தழுவினர். அதன் பின் ‘துமாழிர் பின்த் அஸ்பக்’ என்ற பெண்ணை அப்துர் ரஹ்மான்
இப்னு அவ்ஃப் (ரழி) திருமணம் செய்து கொண்டார்கள். இப்பெண்மணி பிரபல்யமான நபித்தோழர்
அபூஸலமாவின் தாயாராவார். இப்பெண்மணியின் தந்தைதான் கல்பு இனத்தவன் தலைவராக இருந்தார்.
2) ‘அலீ இப்னு அபூதாலிப்’ படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் ‘ஃபதக்’ எனும்
ஊரில் உள்ள ஸஅது இப்னு பக்ரு கிளையினரிடம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களை 200 வீரர்களுடன்
நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். இக்கிளையினரில் ஒரு பிரிவினர் கைபரிலுள்ள யூதர்களுக்கு
உதவி செய்ய விரும்புகின்றனர் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதால் அவர்கள்
இப்படையை அனுப்பினார்கள். அலீ (ரழி) இரவில் பயணம் செய்வதும், பகலில் பதுங்கிக் கொள்வதுமாக
தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு நாள் அலீ (ரழி) அக்கூட்டத்தைச் சேர்ந்த
ஒற்றன் ஒருவனைப் பிடித்தார்கள். “யூதப் பகுதியான கைபரில் விளையும் பேரீத்தம் பழங்களில்
ஒரு பெரும் பங்கை யூதர்கள் ஸஅது இப்னு பக்ர் கிளையினருக்கு வழங்கினால், அக்கிளையினர்
யூதர்களுக்கு உதவிடுவார்கள்” என்பதைத் தெரிவிப்பதற்காகத் தன்னை அனுப்பினர் என்பதை,
பிடிப்பட்ட ஒற்றன் ஒப்புக் கொண்டது மட்டுமின்றி, அக்கிளையினர் குழுமியிருந்த இடத்தையும்
காட்டிக் கொடுத்தான். அவர்கள் மீது அலீ (ரழி) போர் தொடுத்து 500 ஒட்டகைகளையும், 2000
ஆடுகளையும் கைப்பற்றினார். அக்கிளையினர் அங்கிருந்து தப்பித்து ‘ளுவுன்’ என்ற இடத்திற்கு
ஓடிவிட்டனர். வபர் இப்னு உலைம் என்பவன் இக்கிளையினருக்குத் தலைமை தாங்கி வந்திருந்தான்.
3) ‘அபூபக்ர் (அ) ஜைது’ படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ரமழான் மாதத்தில் ‘வாதில் குரா’ என்ற
இடத்திற்கு அபூபக்ர் (ரழி) அல்லது ஜைது இப்னு ஹாஸா (ரழி) அவர்களின் தலைமையின் கீழ்
ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். அங்கு வசிக்கும் ஃபஜாரா கிளையினரின் ஒரு
பிரிவினர் நபியவர்களைக் கொலை செய்ய வஞ்சகமாகத் திட்டமிடுகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததை
முன்னிட்டு இப்படையை அனுப்பப்பட்டது.
ஸலமா இப்னு அக்வஉ (ரழி) கூறுகிறார்: நானும் இப்படையில் சென்றிருந்தேன். நாங்கள் ஸுப்ஹு
தொழுகையை முடித்த பின் அவர்களைத் தாக்கினோம். பிறகு அவர்களின் கிணற்றுக்கு அருகில்
நாங்கள் ஒன்று சேர்ந்தோம். இந்தத் தாக்குதலில் எதிரிகளில் பலர் கொல்லப்பட்டனர். சிலர்
தங்கள் பிள்ளைகளுடன் மலையை நோக்கி ஓடுவதைப் பார்த்தேன். அவர்கள் தப்பித்து மலையில்
ஏறிவிடக் கூடாது என்பதற்காக வேகமாக ஓர் அம்பை எடுத்து அவர்களுக்கும் மலைக்கும் நடுவில்
எறிந்தேன் அம்பைப் பார்த்த அவர்கள் நின்று விட்டனர். அக்கூட்டத்தில் பெண் ஒருத்தி இருந்தாள்
அவளது பெயர் உம்மு கிர்ஃபர் அவள் தோல் ஆடை அணிந்திருந்தாள் அவளுக்கு மிக அழகிய மகள்
ஒருத்தி இருந்தாள். நான் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அபூபக்ர் (ரழி) அவர்களிடம்
வந்தேன். அபூபக்ர் (ரழி) எனக்கு அவளின் மகளைப் பரிசாக அளித்தார்கள். ஆனால், நான் அவளைத்
தொடவில்லை. பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற பின் நபியவர்கள் அவளை என்னிடமிருந்து
பெற்று மக்காவிற்கு அனுப்பினார்கள். அவளை குறைஷிகளிடம் கொடுத்து, அங்கு கைதிகளாக இருந்த
முஸ்லிம்களை விடுதலை செய்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
உம்மு கிர்ஃபா என்ற இப்பெண் ஒரு பெரும் தீயவளாக இருந்தாள். இவள் நபி (ஸல்) அவர்களைக்
கொலை செய்வதற்காக தனது குடும்பத்திலிருந்து முப்பது குதிரை வீரர்களைத் தயார் செய்திருந்தாள்.
அந்த முப்பது நபர்களும் கொல்லப்பட்டனர். அவளும் உரிய தண்டனையைப் பெற்றாள்.
4) ‘குர்ஸ்’ படைப் பிரிவு: உகல் மற்றும் உரைனாவைச் சேர்ந்த ஒரு கூட்டம் மதீனாவுக்கு
வந்து தங்களை முஸ்லிம்கள் என்று வெளிப்படுத்திக் கொண்டனர். மதீனாவில் தங்கிய அவர்களுக்கு
அங்குள்ள தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளாததின் காரணமாக நோயுற்றார்கள். நபி (ஸல்) இக்கூட்டத்தினரை
முஸ்லிம்களின் ஒட்டகங்கள் மேயும் இடங்களுக்குச் சென்று அங்கு தங்கி அதன் பாலையும்,
சிறுநீரையும் குடிக்கும்படி கூறினார்கள். அவ்வாறு செய்து அவர்கள் உடல் சுகமடைந்தனர்.
பிறகு அந்தக் கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களின் இடையரைக் கொலை செய்துவிட்டு அங்குள்ள
ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றதுடன் இஸ்லாமிய மார்க்கத்தையும் புறக்கணித்தனர். இவர்களைத்
தேடிப் பிடித்துவர நபி (ஸல்) 20 தோழர்களை குர்ஸ் இப்னு ஜாபிர் ஃபஹ் (ரழி) அவர்களின்
தலைமையின் கீழ் அனுப்பினார்கள்.
இந்த நிகழ்ச்சி ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதத்தில் நடந்தது. அப்போது நபி (ஸல்) அந்த உரைனாவினர்
மீது சாபமிட்டார்கள். “அல்லாஹ்வே! அவர்களின் பாதையை அவர்களுக்கு மறைத்துவிடு, தண்ணீர்
துருத்தியின் வாயை விட அவர்களுக்குப் பாதையை மிக நெருக்கடியாக ஆக்கிவிடு!” என்று பிரார்த்தித்தார்கள்.
பாதையை அல்லாஹ் அவர்களுக்கு மறைத்து விட்டான். எனவே, அவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள்
இலகுவாகப் பிடித்தனர். அவர்களின் கைகள், கால்கள் வெட்டப்பட்டு, கண்களுக்குச் சூடு வைக்கப்பட்டது.
அவர்கள் எவ்வாறு ஒட்டக இடையர்களைக் கொலை செய்தார்களோ அவ்வாறே அவர்களின் செயல்களுக்கு
ஏற்றவாறு இத்தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின் அவர்களை மதீனாவின் வெளியில் விவசாயக்
களத்தில் இதே நிலையில் விடப்பட்டது. அனைவரும் செத்து மடிந்தனர். (ஜாதுல் மஆது)
இந்நிகழ்ச்சி ஸஹீஹுல் புகாரியில் விவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட சம்பவங்களுடன் வரலாற்று ஆசிரியர்கள் மற்றொரு படைப் பிரிவின் நிகழ்ச்சியையும்
குறிப்பிடுகின்றனர். அதாவது: அபூஸுஃப்யான் தன்னை கொலை செய்ய ஒரு கிராம அரபியை அனுப்பியிருக்கிறார்
என்ற செய்தி அறிந்தவுடன் நபியவர்கள் அம்ரு இப்னு உமைய்யா ழம் மற்றும் ஸலமா இப்னு அபூஸலமா
ஆகிய இருத்தோழர்களையும் அபூ ஸுஃப்யானைக் கொலை செய்ய அனுப்பினார்கள். ஆனால், இந்த நோக்கத்தில்
எவரும் வெற்றியடையவில்லை. இந்நிகழ்ச்சி ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதம் நடந்தது.
மேற்கூறப்பட்ட அனைத்து சிறிய பெரிய சம்பவங்கள், அகழ் மற்றும் குறைளா போர்களுக்குப்
பின் நடைபெற்றவையாகும். இவற்றுள் எதிலும் கடுமையானச் சண்டை ஏதும் ஏற்படவில்லை. சில
சம்பவங்களில் சிறிய மோதல்கள் மட்டும் ஏற்பட்டன. சுற்று வட்டார நிலைமைகளை அறிந்து வருவது
அல்லது அடங்காமல் இருந்த கிராம அரபிகளையும் எதிரிகளையும் அச்சுறுத்தி, சட்ட ஒழுங்கை
நிலைநிறுத்துவது ஆகியவையே அனுப்பப்பட்ட படைப் பிரிவுகளின் நோக்கமாக இருந்தது.
நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் பொழுது நமக்குத் தெரியவருவது என்னவெனில், அகழ்
போருக்குப் பின்பு முஸ்லிம்களின் நிலைமை முன்னேற்றம் கண்டது. இஸ்லாமுடைய எதிரிகளின்
நிலைமைகளும் அவர்களின் ஆற்றல்களும் சரியத் தொடங்கின. இதனால் இஸ்லாமிய அழைப்புப் பணியை
அழிக்க வேண்டும், அதன் பலத்தைக் குறைக்க வேண்டும் என்ற கொஞ்ச நஞ்ச ஆசையும் இறைமறுப்பாளர்களுக்கு
எஞ்சியிருக்கவில்லை. ஆகவே, இஸ்லாமின் ஆற்றலை ஏற்று அதற்குப் பணிந்து, அரபு தீபகற்பத்தில்
இஸ்லாம் நிலைபெறுவதை ஏற்றுக் கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது.
இஸ்லாமின் இந்த முன்னேற்றத்தை ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’ மூலம் நாம் மிகத் தெளிவாக விளங்கிக்
கொள்ளலாம்.
ஹுதைபிய்யா (ஹஜ்ரி 6, துல்கஅதா)
உம்ரா
அரபு தீபகற்பத்தில் நிலைமைகள் பெருமளவு முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறின.
சிறிது சிறிதாக மாபெரும் வெற்றிக்கான முன் அறிவிப்புகளும், இஸ்லாமிய அழைப்புப் பணி
முழுமையாக வெற்றியடைவதற்கான அடையாளங்களும் தோன்றின. மக்காவிலுள்ள கண்ணியமிக்க பள்ளி
வாசலில் (அல் மஸ்ஜிதுல் ஹராமில்) கடந்த ஆறு ஆண்டுகளாக இறைவணக்கத்தை நிறைவேற்ற முடியாமல்
இணைவைப்பவர்களால் முஸ்லிம்கள் தடுக்கப்பட்டு வந்தனர் என்பது தெரிந்ததே. இப்போது அப்பள்ளியில்
வணக்க வழிபாடுகள் நிறைவேற்றுவதற்குரிய உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு என்பதை இணைவைப்பவர்கள
ஏற்றுக் கொள்ள வைப்பதற்குரிய முன்னேற்பாடுகள் தொடங்கின.
நபி (ஸல்) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அதாவது, “நபியவர்களும் அவர்களது தோழர்களும்
புனித பள்ளிக்குள் நுழைகிறார்கள். கஅபாவின் சாவியை நபி (ஸல்) பெறுகிறார்கள். அனைவரும்
கஅபாவை வலம் வந்த பின் தங்களது உம்ராவை நிறைவு செய்கிறார்கள். சிலர் மொட்டை அடித்துக்
கொள்கின்றனர். சிலர் முடியைக் குறைத்துக் கொள்கின்றனர்.” தான் கண்ட இந்தக் கனவை நபி
(ஸல்) தங்களது தோழர்களிடம் கூறியபோது அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதே ஆண்டு
அனைவரும் மக்காவிற்குச் செல்வோம் என எண்ணினர். இதற்குப் பின் நபி (ஸல்) தங்களது தோழர்களிடம்
தான் உம்ராவிற்குச் செல்ல இருப்பதாகவும், நீங்களும் அதற்குத் தயாராக வேண்டுமென்றும்
கூறினார்கள்.
முஸ்லிம்களே புறப்படுங்கள்
நபி (ஸல்) மதீனாவில் உள்ள முஸ்லிம்களையும், சுற்று வட்டார முஸ்லிம் கிராமவாசிகளையும்
தன்னுடன் புறப்படுமாறு கூறினார்கள். ஆனால், பெரும்பாலான கிராமவாசிகள் புறப்படுவதில்
தயக்கம் காட்டினார்கள். நபி (ஸல்) தங்களது ஆடைகளைக் கழுவி சுத்தம் செய்து கொண்டதுடன்
பயணத்திற்காகக் ‘கஸ்வா’ என்ற தங்களது ஒட்டகத்தையும் தயார் செய்து கொண்டார்கள். மதீனாவில்
இப்னு உம்மு மக்தூம் அல்லது நுமைலா லைஸி (ரழி) என்பவரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.
ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதத்தின் தொடக்கத்தில் திங்கட்கிழமை நபி (ஸல்) மதீனாவிலிருந்து
புறப்பட்டார்கள். நபியவர்களுடன் அவர்களின் மனைவி உம்மு ஸலமாவும் 1400 அல்லது 1500 தோழர்களும்
புறப்பட்டனர். ஒரு பயணிக்கு அவசியமான ஆயுதத்தைத் தவிர வேறு எந்த ஆயுதங்களையும் நபியவர்கள்
தங்களுடன் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், எடுத்துக் கொண்ட ஆயுதங்களையும் வெளியில்
தெரியாமல் அவைகளின் உறைக்குள் மறைத்து வைத்திருந்தார்கள்.