பக்கம் -75-

மக்காவை நோக்கி

நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் ‘துல் ஹுலைஃபா’ என்ற இடத்தில் தாங்கள் அழைத்து வந்த குர்பானி பிராணிகளுக்கு மாலையிட்டு அடையாளமிட்டார்கள். தாங்களும் உம்ராவிற்காக ஆடை அணிந்து கொண்டார்கள். எவரும் தங்களிடம் போர் செய்யக் கூடாது தானும் போருக்காகப் புறப்படவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்து அவர்களை அச்சமற்றவர்களாக ஆக்கினார்கள்.

மக்கா குறைஷிகளின் நிலையை அறிந்து, தன்னிடம் தெரிவிப்பதற்காக குஜாஆ கிளையைச் சேர்ந்த ஒற்றர் ஒருவரை நபி (ஸல்) நியமித்து, தனக்கு முன் அவரை அனுப்பி வைத்தார்கள். நபி (ஸல்) ‘உஸ்ஃபான்’ என்ற இடத்தில் இருக்கும் போது அங்கு நபியவர்களின் ஒற்றர் வந்து “கஅப் இப்னு லுவை என்பவன் உங்களை எதிர்ப்பதற்காகவும், அல்லாஹ்வின் இல்லத்தை விட்டும் உங்களைத் தடுப்பதற்காகவும் கினானா குடும்பத்தைச் சேர்ந்த வீரர்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கிறான்” என்ற அதிர்ச்சி தரும் தகவலைக் கூறினார். அதைக் கேட்ட நபியவர்கள் தங்களது தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.

“ஒன்று, நம்மை எதிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் குறைஷிகளுக்கு உதவியாக இருக்கும் கினானாவினன் குடும்பத்தார்களை நாம் சிறை பிடிப்போம். அதனால் அவர்கள் போருக்கு வராமல் பின்வாங்கி, குடும்பத்தை இழந்த துக்கத்தில் மூழ்கலாம். அல்லது அவர்கள் தப்பித்து வேறு எங்காவது சென்றாலும் நம்மை எதிர்க்க வந்தவர்களை அல்லாஹ் முறியடித்ததாக ஆகிவிடும். இரண்டாவது, நாம் அல்லாஹ்வின் வீட்டை நோக்கிப் புறப்படுவோம். யார் நம்மை தடுக்க வருகிறார்களோ அவர்களிடத்தில் நாம் சண்டையிடுவோம்.”

“இவ்விரண்டில் உங்களது கருத்து என்ன?” என்று நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள். நாம் உம்ரா செய்வதற்காக வந்திருக்கிறோம். எவரிடத்திலும் போர் செய்வதற்காக வரவில்லை. அல்லாஹ்வின் இல்லத்திலிருந்து எவராவது நம்மைத் தடுத்தால் நாம் அவர்களிடத்தில் சண்டையிடுவோம்” என்று கூறினார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) புறப்படுங்கள் என்று கட்டளையிட, முஸ்லிம்கள் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள்.

தடுக்க முயற்சித்தல்

நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட குறைஷிகள் அவசர ஆலோசனை சபையைக் கூட்டி, எப்படியாவது முஸ்லிம்களை கஅபத்துல்லாஹ்விற்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். கினானா கிளையினரை புறக்கணித்து விட்டு நபியவர்கள் மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த போது, கஅப் கிளையைச் சேர்ந்த ஒருவர் “குறைஷிகள் ‘தூ துவா’ என்ற இடத்தில் வந்து தங்கியிருக்கின்றனர். மேலும், காலித் இப்னு வலீத் 200 குதிரை வீரர்களுடன் ‘குராவு கமீம்’ என்ற இடத்தில் மக்காவை நோக்கி செல்லும் முக்கிய வழியில் போர் புரிவதற்காகத் தயாராக இருக்கிறார்” என்று அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். முஸ்லிம்களைத் தடுக்க வேண்டுமென்று காலித் பெரும் முயற்சி செய்தார். தனது குதிரைப் படையை முஸ்லிம்கள் பார்க்கும் தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். அப்போது முஸ்லிம்கள் ளுஹர் தொழுகையைத் தொழுதார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த காலித், “தொழுகையில் ருகூவு ஸுஜூதில் இருக்கும்போது நம்மை இவர்கள் கவனிக்கவில்லை அந்த நேரத்தில் நாம் தாக்கியிருந்தால் இவர்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்திருக்கலாம். எனவே, இவர்கள் அஸர் தொழும் போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றெண்ணி காத்திருந்தார். ஆனால், அஸ்ர் தொழுகைக்கு முன் ‘ஸலாத்துல் கவ்ஃப்’ அச்சமுள்ள நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கி விட்டான். முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் தொழுது கொள்ளவே காலிதின் நோக்கம் நிறைவேறாமல் போனது.

மாற்று நடவடிக்கை

தங்களுடைய வழியில் காலித் படையுடன் நிற்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் தன்யீம் வழியாக மக்கா செல்லும் முக்கிய நேரான பாதையை விட்டுவிட்டு வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். மலைகளுக்கிடையில் கற்களும், பாறைகளும் நிறைந்த கரடு முரடான பாதை வழியே, அதாவது வலப்பக்கம் ‘ஹம்ஸ்’ என்ற ஊரின் புறவழியான ‘ஸனிய்யத்துல் முரார்’ வழியாக ஹுதைபிய்யா செல்லும் வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். இவ்வழி கீழ்ப்புறமாக மக்கா செல்லும் வழியாகும். தான் நின்று கொண்டிருந்த வழியை புறக்கணித்து விட்டு இஸ்லாமியப் படை வேறு வழியில் செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காலித் குறைஷிகளை எச்சரிப்பதற்காக மக்காவிற்கு விரைந்தார்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து ‘ஸனிய்யத்துல் முரார்’ என்ற இடத்தை அடைந்தவுடன் அவர்களது வாகனம் அங்கு மண்டியிட்டு உட்கார்ந்து விட்டது. மக்கள் அதை மிரட்டியும் அது எழுந்திருக்காமல் பிடிவாதம் பிடித்தது. அப்போது நபி (ஸல்) “எனது ஒட்டகம் ‘கஸ்வா’ முரண்டு பிடிப்பதில்லை! அது அத்தகைய குணமுடையதுமல்ல! என்றாலும் யானைப் படைகளைத் தடுத்த அல்லாஹ் இதையும் தடுத்து விட்டான் எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ் மேன்மைபடுத்தியவற்றைக் கண்ணியப்படுத்தும் வகையில் எந்த ஒரு திட்டத்தை குறைஷிகள் என்னிடம் கேட்டாலும் நான் அவர்களுக்கு அத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன்” என்று கூறிவிட்டு தனது ஒட்டகத்தை அதட்டவே அது குதித்தெழுந்தது. நபியவர்கள் தனது பாதையைத் திருப்பி ஹுதைபிய்யாவின் இறுதியிலுள்ள ‘ஸமது’ என்ற கிணற்றுக்கு அருகில் தங்கினார்கள். அங்கு மக்களின் தேவையை விட குறைவாகவே தண்ணீர் இருந்தது. ஆனால், மக்கள் அங்கு வந்து இறங்கியவுடனேயே தண்ணீரை எல்லாம் இறைத்து காலி செய்து விட்டார்கள். தங்களின் தாகத்தை நபியவர்களிடம் முறையிட்டனர். நபியவர்கள் தங்களது அம்பு கூட்டிலிருந்து ஓர் அம்பை எடுத்து அந்தக் கிணற்றில் வைக்கும்படி கூறினார்கள். அவ்வாறே வைக்கப்பட்டவுடன் மக்களின் தாகம் தீரும் அளவுக்கு அந்தக் கிணற்றில் தண்ணீர் ஊறிக் கொண்டிருந்தது.

நடுவர் வருகிறார்

நபியவர்கள் அங்கு தங்கி சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது குஜாஆ கிளையைச் சேர்ந்த சிலருடன் ‘புதைல் இப்னு வர்கா அல் குஜாயீ’ என்ற முக்கியப் பிரமுகர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார். திஹாமா மாநிலத்தைச் சேர்ந்த மக்களில் குஜாஆ கிளையினர்தான் நபி (ஸல்) அவர்களின் இரகசியத்திற்கு உரித்தான மக்களாகவும், நன்மையை நாடுபவர்களாகவும் இருந்தனர். “கஅப் இப்னு லுவை ஹுதைபிய்யாவின் கிணறுகள் உள்ள ஓர் இடத்தில் வாலிப ஒட்டகங்களுடன் தங்கியிருக்கிறார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உங்களுடன் போர் புரிய வேண்டும் நீங்கள் கஅபாவிற்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கின்றனர். நான் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு உங்களிடம் வந்திருக்கிறேன்” என்று புதைல் கூறினார்.

நபியவர்கள் அவரிடம்: “நாங்கள் எவரிடமும் சண்டை செய்வதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் உம்ரா செய்வதற்காகத்தான் வந்திருக்கிறோம். நிச்சயமாகக் குறைஷிகளுக்குப் போரின் காரணமாக கடுமையான சேதமும் நஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நான் அவர்களுக்குப் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து தருவேன். அவர்கள் எனக்கும் மற்ற மக்களுக்குமிடையில் குறுக்கிடக் கூடாது. (அதாவது, நான் மக்களுக்கு இஸ்லாமை எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் தடையாக இருக்கக் கூடாது). விரும்பினால் மற்ற மக்களைப் போல அவர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் சிறிது காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஏற்றுக் கொள்ளாமல், ‘போர்தான் புரிவோம்!’ என்று பிடிவாதம் பிடித்தால், எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இம்மார்க்கத்திற்காக எனது கழுத்து துண்டாகும் வரை அல்லது அல்லாஹ் இம்மார்க்கத்தை நிலை நிறுத்தும் வரை நான் அவர்களிடம் போர் புவேன்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இப்பதிலைக் கேட்ட புதைல் “நீங்கள் கூறியதை நான் குறைஷிகள் முன் வைக்கிறேன்” என்று கூறி குறைஷிகளை சந்தித்தார். “குறைஷிகளே! நான் அந்த மனிதரிடம் இருந்து உங்களிடம் வந்திருக்கிறேன். அவர் கூறும் விஷயத்தையும் கேட்டு வந்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் நான் அதை உங்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கிறேன்” என்றார். ஆனால், அவர்களில் சில அறிவீனர்கள், “அவர் சார்பாக நீ எங்களுக்கு எதையும் சொல்ல வேண்டாம். அது எங்களுக்குத் தேவையுமில்லை” என்று பேசினார்கள். ஆனால், சில அறிவாளிகள் “நீர் கேட்டு வந்ததை எங்களிடம் சொல்” என்றனர். நபியவர்களிடம் கேட்டு வந்ததை அவர் கூறவே, குறைஷிகள் ‘மிக்ரஸ் இப்னு ஹப்ஸ்’ என்பவனை நபியவர்களிடம் பேசிவர அனுப்பினர். அவன் வருவதைப் பார்த்த நபியவர்கள், “அவன் ஒரு மோசடிக்காரன்” என்று கூறினார்கள். அவன் நபியவர்களிடம் பேசிய போது புதைலுக்குக் கூறிய விஷயத்தையே அவனிடமும் கூறினார்கள். அவன் குறைஷிகளிடம் திரும்பி, தான் கேட்டு வந்த செய்தியைக் கூறினான்.

குறைஷிகளின் தூதர்கள்

கினானா கிளையைச் சேர்ந்த ஹுளைஸ் இப்னு அல்கமா என்பவர் “நான் அவரைச் சந்தித்து வருகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள்” என்று குறைஷிகளிடம் கூறினார். அவர்கள் அனுமதி தரவே அவர் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரைப் பார்த்து நபியவர்கள் “இவர் இன்னவர், இவர் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட மற்றும் ஹஜ், உம்ராவுக்காக அழைத்து வரப்பட்ட கால்நடைகளைக் கண்ணியப்படுத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன் குர்பானி பிராணிகளை நிறுத்துங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். உடனே முஸ்லிம்கள் குர்பானி பிராணிகளை வரிசையாக நிறுத்தி தல்பியா” கூறியவர்களாக அவரை வரவேற்றனர். இதைப் பார்த்த அவர் “சுப்ஹானல்லாஹ்! இவர்களை அல்லாஹ்வின் வீட்டிலிருந்து தடுப்பது முறையல்ல” என்று கூறிவிட்டு தனது தோழர்களிடம் திரும்பி “நான் மாலையிடப்பட்டு அடையாள மிடப்பட்ட குர்பானிக்கான ஒட்டகங்களைப் பார்த்தேன். அவர்களைத் தடுப்பது எனக்கு சரியான தாகத் தெரியவில்லை” என்று கூறினார். இதற்குப் பின் அவருக்கும் குறைஷிகளுக்குமிடையில் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

அங்கு வீற்றிருக்த உர்வா இப்னு மஸ்வூத் ஸகஃபி என்பவர், “இவர் உங்களுக்கு நல்ல கருத்தைக் கூறினார். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு அனுமதி தாருங்கள். நானும் அவரிடம் சென்று பேசி வருகிறேன்” என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசினார். அப்போது நபி (ஸல்) புதைலுக்கு கூறியதையே அவருக்கும் கூறினார்கள். அப்போது “முஹம்மதே! போர்தொடுத்து உனது இனத்தாரை வேரோடு அழிக்க வேண்டுமென்று நீ விரும்புகின்றாயா? உனது குடும்பத்தாருடன் போர் புரிவது நல்ல பழக்கமாகுமா? அரபிகளில் எவராவது தனது இனத்தாரை உனக்கு முன்பு வேரோடு வெட்டிச் சாய்த்தார் என்று நீ கேள்விப்பட்டதுண்டா? நீ விரும்பியபடி உனக்கு போரில் வெற்றி கிடைக்காமல் அதற்கு மாற்றமாக நீ தோல்வியடைந்தால், உன்னுடன் இருக்கும் இந்த வீணர்களான அற்பர்கள் உன்னை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன்” என்று உர்வா கூறினார்.

உர்வாவின் பேச்சு அபூபக்ர் (ரழி) அவர்களுக்குச் சினமூட்டியது. “நீ லாத்தின் மர்மஸ்தானத்தைச் சப்பு! நாங்களா இவரை விட்டுவிட்டு ஓடி விடுவோம்?” என்று கர்ஜித்தார்கள். அதற்கு உர்வா “இவர் யார்?” என்றார். “அபூபக்ர்” என கூடியிருந்தோர் கூறினர். அதற்கு உர்வா “எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீ எனக்கு ஓர் உதவி செய்திருக்கிறாய். நான் அதற்கு எந்தப் பகரமும் செய்யவில்லை. அப்படி மட்டும் இல்லையென்றால் நான் உனக்கு நல்ல பதில் கூறியிருப்பேன்” என்றார். மேலும், நபியவர்களிடம் உர்வா பேசும் போது ஒவ்வொரு பேச்சுக்கும் நபியவர்களின் தாடியைப் பிடித்துப் பிடித்து பேசினார். நபி (ஸல்) அவர்களின் அருகில் முகீரா இப்னு ஷுஃபா (ரழி) நின்றிருந்தார்கள். அவரது கையில் உறையிடப்பட்ட வாள் ஒன்று இருந்தது. நபியவர்களின் தாடியை உர்வா பிடிக்கும் போதெல்லாம் அந்த உறையிடப்பட்ட வாளைக் கொண்டு உர்வாவின் கையில் அடித்து “நபியவர்களின் தாடியை விட்டு உனது கையை அகற்றிக் கொள்” என்று கூறினார்.

உர்வா தனது தலையை உயர்த்தி “இவர் யார்” என்றார். மக்கள் “முகீரா இப்னு ஷுஃபா” என்றனர். “ஓ வாக்குத் தவறியவனே! நீ செய்த மோசடிக் குற்றத்திற்கு நான்தானே பரிகாரம் செய்தேன்” என்று முகீராவை உர்வா பழித்தார். இவ்வாறு உர்வா கூறக் காரணம்: முகீரா இஸ்லாமை ஏற்பதற்கு முன் ஒரு கூட்டத்தினருடன் நட்பு வைத்திருந்தார். சமயம் பார்த்து அவர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்து விட்டார். அதற்கு சிறிது காலத்திற்குப் பின்பு நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் “நீர் முஸ்லிமாவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நீ கொள்ளை அடித்த பொருட்களுக்கு நான் பொறுப்பல்ல” என்று கூறிவிட்டார்கள். இக்குற்றத்திற்குரிய பரிகாரத்தை உர்வாதான் நிறைவேற்றினார் ஏனெனில் முகீராவுடைய தந்தை, உர்வாவின் சகோதரராவார்.

பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் நபித்தோழர்களையும் அவர்கள் நபியவர்களுக்குச் செய்யும் கண்ணியத்தையும் நன்கு கவனித்து உர்வா பிரமிப்படைந்தார். அங்கிருந்து தனது நண்பர்களிடம் வந்த பின் இது குறித்து அவர் தனது இனத்தவர்களிடம் விமர்சித்தார். “எனது கூட்டத்தினரே! நான் பல அரசர்களிடம் சென்றிருக்கின்றேன். கைஸர், கிஸ்ரா, நஜ்ஜாஷி என பல மன்னர்களை பார்த்திருக்கின்றேன். ஆனால், முஹம்மதின் தோழர்கள் முஹம்மதைக் கண்ணியப்படுத்துவது போன்று எந்த ஓர் அரசனின் தோழர்களும் தங்கள் அரசரைக் கண்ணியப் படுத்துவதை நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் ஏதாவது ஒரு கட்டளையிட்டால் அதை உடனடியாக அவர்கள் செய்கிறார்கள். அவர் ‘உழு’ செய்யும் தண்ணீரைப் பிடிப்பதற்குக் கூட போட்டியிட்டுக் கொள்கின்றனர். அவர் பேசினால் அனைவரும் அமைதியாகி விடுகின்றனர். அவர் மீதுள்ள கண்ணியத்தால் அவரை அவர்கள் நேருக்கு நேர் கூர்ந்து பார்ப்பதில்லை. ஆக, நான் உங்களுக்கு முன் நேரான ஒரு திட்டத்தை சமர்ப்பித்து விட்டேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி உர்வா தனது பேச்சை முடித்தார்.