பக்கம் -76-

அல்லாஹ்வின் ஏற்பாடு

போர் வெறிபிடித்த குறைஷி வாலிபர்கள் தங்களின் தலைவர்கள் சமாதான உடன்படிக்கையில் ஆர்வமாக இருப்பதை விரும்பவில்லை. உடனே, அதைத் தடுக்க வேண்டுமென ஆலோசித்தனர். அதன்படி இரவில் முஸ்லிம்களின் கூடாரத்திற்குள் புகுந்து போரைத் தூண்டும் சதி செயல்களைச் செய்ய முடிவெடுத்தனர். இம்முடிவை நிறைவேற்றுவதற்கு எழுபது அல்லது எண்பது நபர்கள் புறப்பட்டு ‘தன்யீம்’ மலை வழியாக முஸ்லிம்களின் கூடாரத்தை நோக்கி முன்னேறினர். ஆனால், நபியவர்கள் நியமித்த பாதுகாப்புப் படையின் தளபதியான முஹம்மது இப்னு மஸ்லமா, வந்த எதிரிகள் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தார். எனினும், நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தில் ஆர்வம் கொண்டு அனைவரையும் மன்னித்து விடுதலை செய்து விட்டார்கள். இது குறித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்:

மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்களுடைய கைகளையும் அவர்களை விட்டும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:24)

குறைஷிகளை சந்திக்க முஸ்லிம் தூதர்...

இந்நேரத்தில் நபி (ஸல்) தனது நிலையையும், தனது நோக்கத்தையும் உறுதியாகத் தெளிவுபடுத்திக் கூறவும், குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமரை அழைத்தார்கள். ஆனால், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு துன்பம் ஏற்பட்டால் எனக்காக கோபப்படும் அதீ இப்னு கஅப் கிளையைச் சேர்ந்த எவரும் அங்கில்லை. எனவே, உஸ்மான் இப்னு அஃப்ஃபானை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்” என்றார் உமர் (ரழி). நபியவர்கள் உஸ்மானை அழைத்து “நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக வரவில்லை உம்ராவிற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். மேலும், மக்காவிலிருக்கும் முஸ்லிம்களை சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மக்காவில் ஓங்கச் செய்வான். ஆகவே, யாரும் இறை நம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியமேற்படாது என்றும் அவர்களுக்கு சொல்லுங்கள்!” என்றார்கள்.

உஸ்மான் (ரழி) அங்கிருந்து புறப்பட்டு ‘பல்தஹ்’ என்ற இடத்தை அடைந்த போது, அங்கிருந்த குறைஷிகள் “உஸ்மானே! நீர் எங்கு செல்கின்றீர்!” என்றனர். அதற்கு உஸ்மான் (ரழி) சில விஷயங்களைக் கூறி அதை சொல்வதற்காகத்தான் நபியவர்கள் என்னை அனுப்பினார்கள் என்றார். அதற்கு குறைஷிகள், “நீர் கூறியதை நாங்கள் கேட்டு விட்டோம். நீர் உமது நோக்கத்தை நிறைவேற்ற செல்லலாம்” என்றனர். அவையில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல்ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரழி) அவர்களை வரவேற்றார். மேலும், தனது குதிரைக்குக் கடிவாளமிட்டு, அதில் தனக்குப் பின்னால் உஸ்மானை அமரச் செய்து, அவருக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்குள் அழைத்து வந்தார். மக்கா வந்தவுடன் நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் குறைஷித் தலைவர்களிடம் உஸ்மான் (ரழி) விவரித்தார். உஸ்மான் பேசி முடித்தவுடன் குறைஷிகள் “நீங்கள் கஅபாவை வலம் வந்து கொள்ளுங்கள்” என்றனர். ஆனால், “நபி (ஸல்) கஅபாவை வலம் வரும் வரை நான் வரமாட்டேன்” என்று உஸ்மான் மறுத்துவிட்டார்.

கொலை செய்தி பரவுதல், உடன்படிக்கை வாங்குதல்

உஸ்மானைக் குறைஷிகள் மக்காவில் தடுத்து வைத்துக் கொண்டனர். இச்சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்த பின் உஸ்மானை அனுப்பலாம் என்ற எண்ணத்தில் குறைஷிகள் தடுத்து வைத்திருக்கலாம். ஆனால், உஸ்மான் (ரழி) கொலை செய்யப்பட்டு விட்டார் என்று மக்காவிற்கு வெளியில் செய்தி பரவியது. அவ்வாறே முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பரவியது. இந்தச் செய்தி கிடைத்தவுடன் “குறைஷிகளிடம் போர் புரியாமல் நாம் இவ்விடத்தை விட்டு நகரமாட்டோம்” என்று நபியவர்கள் கூறினார்கள். மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். உத்தமத் தோழர்கள் உயிர் கொடுக்கவும் காத்திருந்தனர். “போரிலிருந்து பின்வாங்க மாட்டோம்” என்று மிக உற்சாகத்துடன் உடன்படிக்கை செய்யலானார்கள். தோழர்களின் ஒரு கூட்டம் “மரணம் வரை போர் புரிவோம்” என்று நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்.

அஸத் குடும்பத்தைச் சேர்ந்த அபூஸினான் என்பவர்தான் நபி (ஸல்) அவர்களிடம் முதன் முதலில் உடன்படிக்கை செய்தார். “மரணிக்கும் வரை போர் புவேன்” என்று மூன்று முறை ஸலமா இப்னு அக்வா ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்பு இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார். அந்த அளவு அறப்போர் புரியவும், அதில் உயிர் நீக்கவும் பேராவல் கொண்டிருந்தார்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி “இந்த கை உஸ்மான் சார்பாக” என்றார்கள். அதாவது, உஸ்மான் உயிருடன் இருந்தால் அவரும் இதில் கலந்து கொள்வார் என்பதை அறிவிக்கும் விதமாக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர் என்ற செய்தி குறைஷிகளுக்குத் தெரிய வரவே, இனியும் உஸ்மானை தடுத்து வைத்திருப்பது உசிதமல்ல தாமதப்படுத்தாமல் உடனடியாக அவரை முஸ்லிம்களிடம் அனுப்பிட வேண்டும் நமது முடிவைப் பிறகு தூதுவர் மூலம் சொல்லி அனுப்பிக் கொள்ளலாம் என்று ஆலோசனை செய்து உஸ்மானை அனுப்பி விட்டனர். உடன்படிக்கை செய்யும் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. உஸ்மானும் எவ்வித ஆபத்துமின்றி அங்கு வந்து சேர்ந்தார். உஸ்மான் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். ஜத்துப்னு கைஸ் என்ற நயவஞ்சகனைத் தவிர வேறு எவரும் இவ்வுடன்படிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை.

நபியவர்கள் ஒரு மரத்திற்குக் கீழ் இவ்வுடன்படிக்கையை வாங்கினார்கள். அப்போது உமர் (ரழி) நபியின் கையைத் தாங்கிப் பிடித்திருந்தார்கள். மஅகில் இப்னு யஸார் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபியவர்களுக்கு நிழல் தருமாறு பிடித்திருந்தார்கள். இவ்வுடன்படிக்கையைத் தான் ‘பைஅத்துர் ழ்வான்’ (அங்கீகரிக்கப்பட்ட இறை பொருத்தத்திற்குரிய உடன்படிக்கை) என்று இஸ்லாமிய வரலாற்றில் கூறப்படுகிறது. இது குறித்தே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்.

அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து உடன்படிக்கை செய்த நம்பிக்கை யாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். (அல்குர்ஆன் 48:18)

சமாதான ஒப்பந்தம்

நிலைமை மோசமாவதை அறிந்து கொண்ட குறைஷிகள், சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சுஹைல் இப்னு அம்ர் என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். மேலும், அந்த ஒப்பந்தத்தில் கீழ்காணும் முக்கிய அம்சத்தை இடம்பெறச் செய்தனர். அதாவது, உம்ரா செய்ய மக்காவிற்குள் வராhமல் முஸ்லிம்கள் கண்டிப்பாக திரும்பிவிட வேண்டும். காரணம், முஹம்மது மக்காவுக்குள் எங்களை பலவந்தப்படுத்தி நுழைந்து விட்டார் என்று அரபிகள் நாளை ஏளனமாகப் பேசிவிடக் கூடாது.

குறைஷிகளின் இறுதி தூதராக சுஹைல், நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார். சுஹைலைப் பார்த்ததும் நபியவர்கள் (சுஹைல் என்பதின் பொருள் இலகுவானது. ஆகவே) “உங்களது காரியம் உங்களுக்கு இலகுவாகி விட்டது. குறைஷிகள் இவரை அனுப்பியதிலிருந்து அவர்கள் சமாதானத்தை நாடிவிட்டனர் என தெரிந்து கொள்ளலாம்” என்று முஸ்லிம்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். பின்பு இருவரும் சமாதானத்திற்கான அம்சங்களை முடிவு செய்தனர்.

அந்த அம்சங்களாவன:

1) நபியவர்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும். மக்காவிற்குள் நுழையக் கூடாது. அடுத்த வருடம் முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித தொந்தரவும் கொடுக்கப்பட மாட்டாது.

2) பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்வித தீங்கும் செய்யக் கூடாது.

3) யாரொருவர் முஹம்மதுடைய ஒப்பந்தத்திலும் உடன்படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். குறைஷிகளின் ஒப்பந்தத்திலும் உடன் படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். எந்த ஒரு கிளையினரும் இந்த இரு வகுப்பால் ஒருவருடன் சேர்ந்து கொள்கிறாரோ அவர் அந்த வகுப்பாரையே சேர்ந்தவராவார். அதற்குப் பின் அந்தக் கிளையினருடன் யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அது அந்த வகுப்பினர் அனைவர் மீதும் அத்துமீறியதாகும்.

4) குறைஷிகளில் யாராவது தனது பாதுகாவலரான நெருங்கிய உறவினன் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவரை முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.

இவற்றை எழுதுவதற்காக நபியவர்கள் அலீயை அழைத்து வாசகங்களைக் கூற அலீ (ரழி) எழுத ஆரம்பித்தார்கள். முதலாவதாக “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் -அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்-” என்று கூறினார்கள். அதைக் கேட்ட சுஹைல் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ரஹ்மான் என்றால் யார்? என்று எங்களுக்குத் தெரியாது. எனவே, பிஸ்மிக்கல்லாஹும்ம -அல்லாஹ்வே உனது பெயரால்-” என்று எழுதும்படி கூறினார். அதை ஏற்று நபியவர்கள் அலீயிடம் அவ்வாறே எழுதச் சொன்னார்கள். பின்பு “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்” என்று எழுதும்படி அலீயிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள். ஆனால், சுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நீர் அல்லாஹ்வின் தூதர் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாம் உம்மை அவனது வீட்டிலிருந்து தடுத்திருக்க மாட்டோம். உம்மிடம் போர் செய்திருக்க மாட்டோம். எனவே, முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று எழுதுங்கள்” என்று கூறினார்.

அதற்கு நபியவர்கள், “நீங்கள் என்னை பொய்யன் என்று கூறினாலும் சரியே! நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர்தான் என்று கூறிவிட்டு அலீயிடம் ‘ரஸூலுல்லாஹ்’ என்ற சொல்லை அழித்துவிட்டு முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்று எழுதும்படி கூறினார்கள். ஆனால், அலீ (ரழி) அவர்கள் இந்தச் சொல்லை அழிப்பதற்கு மறுத்துவிடவே நபி (ஸல்) அவர்களே தங்களது கையால் அதை அழித்தார்கள். பின்பு ஒப்பந்தப் பத்திரம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்டது. சமாதான உடன்படிக்கை முடிந்தவுடன் குஜாஆ கிளையினர் நபி (ஸல்) அவர்களின் ஒப்பந்தத்தில் சேர்ந்து கொண்டனர். அவர்கள் அப்துல் முத்தலிபின் காலத்திலிருந்தே ஹாஷிம் கிளையினரின் ஒப்பந்தத் தோழர்களாகவே விளங்கினர். இதை நாம் இந்நூலின் ஆரம்பத்திலும் கூறியிருக்கிறோம். பக்ர் கிளையினர் குறைஷிகளின் உடன்படிக்கையில் சேர்ந்து கொண்டனர்.