பக்கம் -77-

அபூஜந்தல் மீது கொடுமை

இவ்வாறு ஒப்பந்தம் எழுதிக் கொண்டிருக்கும் போது சுஹைல் இப்னு அயின் மகன் அபூ ஜந்தல் (ரழி) மக்காவின் கீழ்புறமாக வெளியேறி கையில் விலங்குகளுடன் முஸ்லிம்களுக்கு மத்தியில் வந்து விழுந்தார். அவரைப் பார்த்த சுஹைல் “இது நான் உம்மிடம் நிறைவேற்றக் கோரும் முதல் விஷயமாகும். இவனை நீ திருப்பி அனுப்பிவிட வேண்டும்” என்று கூறினார். நபியவர்கள் “நாம் இன்னும் இப்பத்திரத்தை எழுதி முடிக்கவில்லையே” என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நீர் அப்படி செய்யவில்லை என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் எவ்விஷயத்திலும் உம்மிடம் உடன்படிக்கை செய்து கொள்ள மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தான். அதற்கு நபியவர்கள், “இக்கோரிக்கையை நீ எனக்கு நிறைவேற்றிக் கொடு” என்று கூறினார்கள். ஆனால், அவன் “நான் ஒருக்காலும் நிறைவேற்றித் தரமாட்டேன்” என்று முரண்டு பிடித்தான். நபியவர்கள் “இல்லை நீ எனக்கு நிறைவேற்றியே ஆகவேண்டும்” என்று கூறினார்கள். ஆனால், அவன் “அது என்னால் முடியாது” என்று முற்றிலுமாக மறுத்து விட்டான். பிறகு அபூ ஜந்தலின் முகத்தில் அறைந்து அவரது கழுத்தைப் பிடித்து இணைவைப்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்க சுஹைல் இழுத்துச் சென்றான்.

முஸ்லிம்களை விட்டு பிரியும் போது அபூஜந்தல் மிக உரத்தக் குரலில் “முஸ்லிம்களே! நான் இணைவைப்பவர்களிடமா திரும்ப கொண்டு போகப்படுகிறேன்? எனது மார்க்கத்தில் என்னை அவர்கள் சோதிக்கின்றனரே!” என்று கதறினார். “அபூ ஜந்தலே! சகித்துக் கொள். நன்மையை நாடிக்கொள். உனக்கும் உன்னுடன் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடுதலையையும் மகிழ்ச்சியையும் நிச்சயமாக அல்லாஹ் தருவான். நாங்கள் இக்கூட்டத்தினருடன் சமாதான உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதை நிறைவேற்றுவது எங்கள் மீது கடமை. அவர்களும் அல்லாஹ்வின் பெயர் கூறி இந்த உடன்படிக்கையைச் செய்திருக்கிறார்கள். எனவே, நாங்கள் மோசடி செய்ய முடியாது” என்று நபியவர்கள் கூறினார்கள்.

உமர் (ரழி) அபூ ஜந்தலுக்கு அருகில் சென்று “அபூ ஜந்தலே! இவர்கள் இணைவைப்பவர்கள்! இவர்களின் உயிர் நாயின் உயிருக்கு சமமானது” என்று கூறியவராக தனது வாளின் கைப்பிடியை அபூ ஜந்தலுக்கு அருகில் கொண்டு சென்றார்கள்.

உமர் (ரழி) கூறுகிறார்கள்: அவர் எனது வாளை எடுத்து தனது தந்தையைக் கொன்று விடுவார் என நான் ஆதரவு வைத்தேன். ஆனால், அவர் தந்தையின் மீதுள்ள பாசத்தால் கொல்லாமல் விட்டுவிட்டார். இதே நிலையில் ஒப்பந்தப் பத்திரமும் எழுதி முடிக்கப்பட்டது.

உம்ராவை முடித்துக் கொள்வது

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை முடித்தவுடன் தங்களது தோழர்களிடம் எழுந்து சென்று “குர்பானி பிராணியை அறுத்து பலியிடுங்கள்” என்றார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட அதற்கு முன் வரவில்லை. நபி (ஸல்) மூன்று முறை கூறியும் எவரும் எழுந்து செல்லவில்லை. ஆகவே, நபி (ஸல்) தனது மனைவி உம்மு ஸலமாவிடம் சென்று மக்கள் நடந்து கொண்டதைக் கூறினார்கள். உம்மு ஸலமா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் குர்பானியை நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் சென்று யாரிடமும் பேசாமல் உங்களது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து உங்களது தலைக்கு மொட்டை அடித்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். நபியவர்கள் தனது மனைவி கூறியவாறே எழுந்து சென்று யாரிடமும் பேசாமல் தனது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து மொட்டை அடித்துக் கொண்டார்கள்.

இதைப் பார்த்த மக்கள் எழுந்து தங்களது குர்பானி பிராணிகளை அறுத்துவிட்டு ஒருவர் மற்றவருக்கு மொட்டையிட ஆரம்பித்தார்கள். ஏழு பேர்களுக்கு ஓர் ஒட்டகம், ஏழு பேர்களுக்கு ஒரு மாடு என்பதாக அறுத்தார்கள். நபியவர்கள் அபூ ஜஹ்லுக்கு சொந்தமாக இருந்த ஓர் ஆண் ஒட்டகத்தை அறுத்தார்கள். அதன் மூக்கில் வெள்ளியினாலான ஒரு வளையம் இருந்தது. இணைவைப்பவர்களுக்குக் கோபமூட்டுவதற்காக நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். பின்பு நபி (ஸல்) அவர்கள் மொட்டையடித்துக் கொண்டவர்களுக்கு மூன்று முறை பாவமன்னிப்புடைய பிரார்த்தனை செய்தார்கள். தலை முடியை குறைத்துக் கொண்டவர்களுக்கு ஒருமுறை பிரார்த்தித்தார்கள். நோயின் காரணமாக தலைமுடியை முன்கூட்டியே சிரைத்துக் கொண்டவர்கள் அதற்குப் பரிகாரமாக நோன்பு வைத்துக் கொள்ளலாம் அல்லது தர்மம் அல்லது குர்பானி கொடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் கூறப்பட்ட இறைவசனம் இந்த பிரயாணத்தின் போது கஅப் இப்னு உஜ்ரா (ரழி) என்ற நபித்தோழன் விஷயத்தில் இறக்கப்பட்டது.

பெண்களைத் திரும்ப அனுப்ப மறுத்தல்

முஸ்லிமான சில பெண்கள் ஹிஜ்ரா செய்து முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்களின் உறவினர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின்படி அவர்களைத் தங்களிடம் திரும்ப அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். “ஒப்பந்தத்தில் ஆண் என்ற சொல்லையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, பெண்கள் இதில் கட்டுப்படமாட்டார்கள்” என்று காரணம் காட்டி நபியவர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இது விஷயமாகத்தான் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்தப் பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பி விடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல அவர்கள் இவர்களுக்கு (கணவர் களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களைத் திருமணம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்களுடைய பெண்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாதிருந்தால்) நம்பிக்கை கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்காமல்) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம் கேட்கலாம்.) இது அல்லாஹ் வினுடைய கட்டளை. உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 60:10)

மேலும்,

நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, “அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபசாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை என்றும், தங்களுடைய கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவதில்லை” என்றும், உம்மிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களுக்காக) அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனுமாயிருக்கின்றான். (அல்குர்ஆன் 60:12)

என்ற வசனத்தின் மூலம் ஹிஜ்ரா செய்து வந்த பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்தார்கள். “யார் திருமறையில் கூறப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களிடம் நான் உங்களது ஹிஜ்ராவை ஏற்றுக் கொண்டேன்” என்று கூறுவார்கள். அவர்களைத் திரும்ப அனுப்ப மாட்டார்கள்.

இந்த வசனத்தில் இறக்கப்பட்ட சட்டத்தின்படி முஸ்லிம்கள் மக்காவிலிருந்த தங்களது இணைவைக்கும் மனைவிகளை விவாகரத்து செய்தனர். அன்றைய தினத்தில் உமர் (ரழி) இணைவைக்கும் தனது இரு மனைவிகளை விவாகரத்து செய்தார்கள். அவ்விருவல் ஒருவரை முஆவியாவும் இன்னொருவரை ஸஃப்வானும் மணம் முடித்துக் கொண்டனர். (அதுவரை முஆவியாவும் ஸஃப்வானும் இஸ்லாமைத் தழுவவில்லை.)

ஒப்பந்த அம்சங்களின் விளைவுகள்

இதுவரை ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கையை நாம் பார்த்தோம். எவர் ஒருவர் இந்த அம்சங்களையும் அதன் பின்விளைவுகளையும் நன்கு ஆழமாக சிந்தித்துப் பார்ப்பாரோ அவர் இந்த உடன்படிக்கை முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றிதான் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வார். அதாவது, குறைஷிகள் முஸ்லிம்களின் எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை எப்படியாவது வேரோடு அழித்து விட வேண்டுமென்பதிலேயே குறிக்கோளாக இருந்தனர். என்றாவது ஒரு நாள் அந்நோக்கம் நிறைவேறும் என்று எதிர் பார்த்திருந்தனர். முடிந்தளவு தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்தி இஸ்லாமிய அழைப்புப் பணி மக்களை சென்றடையாமல் தடுத்தனர். அரபு தீபகற்பத்தில் அனைத்து அரபுகளின் உலக விஷயங்களுக்கும், மதக் காரியங்களுக்கும் தலைமைபீடமாக இருந்தனர்.

இறுதியாக, இவர்கள் சமாதான ஒப்பந்தத்திற்குப் பணிந்து வந்ததே முஸ்லிம்களின் ஆற்றலை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கும், இனி முஸ்லிம்களை எதிர்க்க குறைஷிகளிடம் ஆற்றல் இல்லை என்பதற்கும் தெளிவான ஆதாரமாகிவிட்டது. ஒப்பந்தத்தின் மூன்றாவது அம்சத்தின் மூலம் குறைஷிகள் தங்களது உலக ரீதியான மற்றும் மத ரீதியான தலைமைத்துவத்தை மறந்து விட்டனர். இனி தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களுக்கு பெரும் சுமையாகி விட்டது என்பதையும் நன்றாக விளங்கிக் கொள்ளலாம். ஏனைய மக்கள் மற்றும் அரபு தீபகற்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டாலும் அதைப் பற்றி குறைஷிகள் இனி கவலைப்பட மாட்டார்கள். அதற்கு ஒரு முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார்கள். அது விஷயத்தில் எத்தகைய தலையீடும் செய்யமாட்டார்கள் என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இது குறைஷிகளைக் கவனித்துப் பார்க்கும் போது மிகப்பெரிய தோல்வியும், முஸ்லிம்களைக் கவனித்துப் பார்க்கும்போது மிகப் பெரும் வெற்றியாகவும் அமைந்தது என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்!

முஸ்லிம்களுக்கும் அவர்களின் எதிரிகளுக்குமிடையே நடந்த போர்களின் நோக்கங்களும் குறிக்கோள்களும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை பொருட்களைச் சூறையாடுவதோ, உயிர்களை அழிப்பதோ, மக்களைக் கொன்று குவிப்பதோ அல்லது இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும்படி எதிரியை நிர்ப்பந்திப்பதோ அல்ல. மாறாக, இப்போர்களின் மூலம் முஸ்லிம்களின் ஒரே குறிக்கோள் என்னவெனில், மார்க்கம் மற்றும் கொள்கை விஷயத்தில் மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

(நபியே!) உங்கள் இறைவனால் அருளப்பட்ட இ(ந்த வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம் விரும்பியவர் நிராகரித்து விடலாம். (அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை.) (அல்குர்ஆன் 18:29)

தாங்கள் நாடும் நோக்கத்திற்கும் மக்களுக்கும் மத்தியில் எந்த சக்தியும் குறுக்கிடக் கூடாது என்பதுவே ஆகும். ஆம்! முழுமையாக அந்நோக்கம் இந்த எளிமையான சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்தது. ஒருவேளை மாபெரும் போர் நடந்து அதில் முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நோக்கம் இந்தளவு நிறைவேறுமா என்பது சந்தேகமே. அல்லாஹ்வின் அருளால் இச்சுதந்திரத்தால் முஸ்லிம்களுக்கு அழைப்புப் பணியில் பெரும் முன்னேற்றமும் வெற்றியும் கிடைத்தது. இந்த ஒப்பந்தத்திற்கு முன் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரமாக இருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது, முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரமாக ஆகியது.

இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சம் (பத்து ஆண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்வது) முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் இரண்டாவது பகுதியாகும். அதாவது, முஸ்லிம்கள் குறைஷிகளுடன் ஒருபோதும் தாங்களாக போரைத் தொடங்கியதில்லை. மாறாக, எப்போதும் குறைஷிகள்தான் முதலில் போரைத் தொடங்கினர். அல்லாஹ் தனது திருமறையில்:

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்முடைய) தூதரை (ஊரை விட்டு) வெளியேற்றவும் விரும்பி முயற்சித்த மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். (அல்குர்ஆன் 9:13)

என்று குறிப்பிடுகின்றான்.

முஸ்லிம்கள் எடுத்த இராணுவ நடவடிக்கைகளின் நோக்கம் என்னவெனில், குறைஷிகள் தங்களது வம்புத்தனத்தை விட்டும், அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுப்பதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும் அனைவருடனும் சமாதானமாக நடந்து கொள்ள வேண்டும் ஒவ்வொருவரும் தங்களது வழியில் செயல்பட அனுமதிக்க வேண்டும் ஒருவர் மற்றவர் விஷயத்தில் குறுக்கிடக் கூடாது என்பதுதான்.

பத்து ஆண்டுகள் போர் நிறுத்தம் என சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதால் குறைஷிகளின் வம்புத்தனம், அகம்பாவம், அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுத்தல் ஆகிய அனைத்திற்கும் ஒரு முடிவு கட்டப்பட்டது. மேலும், போரை இதுநாள் வரை முதலாவதாக ஆரம்பித்து வந்தவர்கள் இப்போது தோற்று விட்டனர் கோழையாகி விட்டனர் வலுவிழந்து விட்டனர் பின்வாங்கி விட்டனர் என்பதற்கு ஒப்பந்தத்தின் இவ்வம்சம் தெளிவான ஆதாரமாகி விட்டது.

ஒப்பந்தத்தின் முதல் அம்சம் (வரும் ஆண்டு மக்காவிற்கு வந்து மூன்று நாட்கள் தங்கலாம், இந்த ஆண்டு திரும்பி செல்ல வேண்டும்) இந்த அம்சம் இதுநாள் வரை முஸ்லிம்களைக் குறைஷிகள் சங்கைமிக்க அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுத்து வந்ததற்கு ஒரு முடிவாக அமைந்தது. ஆகவே, இதுவும் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியே ஆகும். இந்த அம்சத்தில் குறைஷிகளுக்கு சாதகமான, ஆறுதலான எதுவும் இருக்கவில்லை. ஆம்! அந்த ஆண்டு மட்டும் முஸ்லிம்களை மக்காவிற்கு வரவிடாமல் தடுக்க முடிந்ததைத் தவிர வேறெந்த சாதகமும் அவர்களுக்கு இருக்கவில்லை.

இவ்வாறு மூன்று அம்சங்களைக் குறைஷிகள் முஸ்லிம்களுக்குச் சாதகமாகக் கொடுத்தனர். இதற்கு மாற்றமாக நான்காவது அம்சத்தில் இடம்பெற்ற, அதாவது மக்காவிலிருந்து யாராவது தப்பித்து மதீனா வந்தால் அவர்களைத் திரும்ப மக்காவிற்கு அனுப்பி விடவேண்டும். ஆனால், மதீனாவிலிருந்து யாராவது தப்பித்து மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்ற ஒரே ஒரு அம்சத்தைத்தான் அவர்கள் தங்களுக்கு சாதகமாக பெற்றுக் கொண்டனர். ஆனால், இதுவும் அவர்களுக்கு உண்மையில் சாதகமானதோ, பயன் தருவதோ கிடையாது. இது ஒரு அற்பமான விஷயம். ஏனெனில், எந்த ஓர் உண்மை முஸ்லிமும் அல்லாஹ்வை விட்டோ, அவனது தூதரை விட்டோ, மதீனாவை விட்டோ விலகிச் செல்ல மாட்டார். அப்படி சென்றாலும் அதில் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் இடையூறும் இல்லை.

இஸ்லாமை விட்டு உள்ளரங்கமாகவோ, வெளிரங்கமாகவோ வெளியேறியவன் மட்டுமே முஸ்லிம்களை விட்டும் விலகிச் சென்று நிராகரிப்பாளர்களுடன் சேர்ந்து கொள்வான். அப்படி ஒருவன் மார்க்கத்திலிருந்து வெளியேறி விட்டால் முஸ்லிம்களுக்கு அவனிடம் எந்தத் தேவையும் இல்லை. அவன் இஸ்லாமிய சமூகத்தை விட்டு பிரிந்து சென்று விடுவது, அதிலிருப்பதை விட மிகச் சிறந்ததே. இதைத்தான் நபியவர்கள் “யாரொருவர் நம்மிடமிருந்து விலகி அவர்களிடம் சென்று விடுவாரோ அல்லாஹ் அவரைத் தூரமாக்கி விடுவானாக” என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மக்காவில் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட ஒருவரால் மதீனாவிற்கு வர இயலாது என்றாலும் அல்லாஹ்வின் பூமி விசாலமானது என்பதால் அவர் வேறு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மதீனாவாசிகள் இஸ்லாமைப் பற்றி தெரியாமல் இருந்த போதே முஸ்லிம்கள் ஹபஷா சென்று தங்கவில்லையா? இதைத்தான் நபியவர்கள் “யார் அவர்களிலிருந்து நம்மிடம் வருகிறாரோ, அதாவது இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் வெகு விரைவில் நல்ல சூழ்நிலையையும் கஷ்டத்திலிருந்து விடுதலையும் தருவான்” என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இதுபோன்ற தற்காப்பு உடன்படிக்கையைக் குறைஷிகள் ஏற்படுத்திக் கொண்டது (மக்காவில் இருந்து மதீனாவிற்கு வந்தவரை திருப்பி அனுப்பிவிட வேண்டும். மதீனாவிலிருந்து மக்காவிற்கு வந்தவர் திரும்பி அனுப்பப்பட மாட்டார் என்பது) வெளிப்படையாக பார்க்கும் போது குறைஷிகளுக்கு இது கண்ணியமானதாகத் தெரிந்தாலும், உண்மையில் குறைஷிகள் எவ்வளவு நடுக்கத்திலும், சோர்விலும் தங்களது சிலை வணக்கத்திற்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து அச்சத்திலும் இருக்கின்றனர் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

தங்களின் மதக் கட்டமைப்பு அழியும் அபாயத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். ஆகவேதான், இதுபோன்ற ஒரு தற்காப்பு அம்சத்தை தங்கள் உடன்படிக்கையில் இடம்பெறச் செய்தனர். முஸ்லிம்களிடமிருந்து குறைஷிகளிடம் சேர்ந்து கொண்டவரை திருப்பி கேட்க மாட்டோம் என்று நபி (ஸல்) அவர்கள் பெருந்தன்மையாக கூறியது தனது மார்க்கத்தின் மீதும், அதை பின்பற்றியவர்கள் மீதும் தான் வைத்திருந்த முழுமையான நம்பிக்கைக்கு ஆதாரமாகும். எனவே, இதுபோன்ற நிபந்தனைகளைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் சிறிதளவும் அஞ்சவில்லை.