பக்கம் -82-
5) பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்
பஹ்ரைன் நாட்டு ஆளுநர் ‘அல்முன்திர் இப்னு ஸாவி’ என்பவருக்கு இஸ்லாமின் பக்கம் அழைப்புக்
கொடுத்து நபி (ஸல்) கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தை அலா இப்னு ஹள்ரமி என்ற தோழர்
மூலம் அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்பு அவர்
நபியவர்களுக்குப் பதில் எழுதினார். “அல்லாஹ்வின் தூதரே! உங்களது கடிதத்தை பஹ்ரைன் நாட்டு
மக்களுக்கு முன் நான் படித்துக் காட்டினேன். அவர்களில் சிலர் இஸ்லாமால் கவரப்பட்டு
அதை விரும்பி ஏற்றுக் கொண்டனர். எனது நாட்டில் மஜுஸிகளும் யூதர்களும் இருக்கின்றனர்.
எனவே, நான் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு நடக்க வேண்டும்? என எனக்குக் கட்டளை பிறப்பியுங்கள்”
என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு நபி (ஸல்) அவர்களும் பின்வரும் பதில் எழுதியனுப்பினார்கள்.
“அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, முன்திர் இப்னு ஸாவிக்கு எழுதிக் கொள்வது. உங்களுக்கு
ஈடேற்றம் உண்டாகட்டும்! உங்களுக்கு முன் நான் அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர
வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. முஹம்மது அவனது அடிமையும் அவனது தூதருமாயிருக்கின்றார்
என்று நான் சாட்சி கூறுகிறேன். இதற்குப் பின் உங்களுக்கு நான் அல்லாஹ்வை நினைவூட்டுகிறேன்.
யாரொருவர் நன்மையை நாடுகிறாரோ அந்த நன்மையின் கூலி அவரையே சாரும். யார் நான் அனுப்பும்
தூதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து, அவர்கள் கூறும் விஷயங்களைப் பின்பற்றுகிறாரோ
அவர் எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தவராவார். யார் அவர்களுக்கு நன்மை செய்கிறாரோ அவர்
எனக்கு நன்மை செய்தவராவார். நான் அனுப்பிய தூதர்கள் உங்களைப் பற்றி நல்லதையே கூறினார்கள்.
நீங்கள் உங்களது கூட்டத்தினருக்குச் செய்த பரிந்துரையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இஸ்லாமை
ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர்கள் முஸ்லிமாக மாறும் போது அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும்
அப்படியே கொடுத்து விடுங்கள். அவர்களில் குற்றமிழைத்திருந்தவர்களை நான் மன்னித்து விட்டேன்.
எனவே, நீங்களும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சீர்திருத்தம் செய்து
கொண்டிருக்கும் காலமெல்லாம் நாம் உங்களை உங்களது பதவியிலிருந்து அகற்ற மாட்டோம். யார்
தனது யூத அல்லது மஜூஸி மதத்தில் நிலையாக இருந்து விடுகிறாரோ அவர் ஜிஸ்யா (வரி) செலுத்த
வேண்டும்.” இவ்வாறு அதில் குறிப்பிட்டார்கள்.
6) யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்
இவர் பெயர் ‘ஹவ்தா இப்னு அலீ’ ஆகும். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு எழுதிய கடிதத்தின்
வாசகமாவது:
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹவ்தா இப்னு அலீக்கு எழுதிக் கொள்வது. நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு
ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம்
வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ்
உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.”
இக்கடிதத்தை அனுப்புவதற்கு நபி (ஸல்) ஸலீத் இப்னு அம்ர் அல் ஆமி (ரழி) அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
ஸலீத் (ரழி) இந்த முத்திரையிட்ட கடிதத்தை எடுத்துக் கொண்டு ஹவ்தாவிடம் வந்தபோது, அவர்
ஸலீதை வரவேற்று தனது விருந்தினராகத் தங்க வைத்தார். ஸலீத் (ரழி) அவருக்கு அக்கடிதத்தைப்
படித்துக் காட்டினார். அவர் அதற்குச் சிறிய அளவில் மறுப்பு தெரிவித்து விட்டு பதில்
ஒன்றை எழுதினார். அதில், “நீர் அழைக்கும் விஷயம் எவ்வளவு அழகானது, அற்புதமானது - பொதுவாக
அரபிகள் எனக்குப் பயந்து நடக்கிறார்கள். உமது அதிகாரத்தில் எனக்கும் சில பங்கைக் கொடுத்தால்
நான் உம்மைப் பின்பற்றுகிறேன்” என்று கூறினார்.
இக்கடிதத்துடன் ஸலீத்துக்கு வெகுமதிகளையும் அன்பளிப்புகளையும் கொடுத்து ‘ஹஜர்’ என்ற
இடத்தில் நெய்யப்பட்ட உயர்ந்த ஆடைகளையும் அவருக்கு அணிவித்தார்.
இவையனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸலீத் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்த செய்தியைக்
கூறினார். நபி (ஸல்) அக்கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு “அவன் பூமியில் சிறுபகுதியைக்
கேட்டாலும் கொடுக்க மாட்டேன். அவனும் நாசமாகி விட்டான். அவனது அதிகாரத்திற்கு உட்பட்டதும்
நாசமாகி விட்டது” என்றார்கள். நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டு திரும்பிய போது ‘ஹவ்தா’
இறந்துவிட்ட செய்தியை ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். அப்போது நபி (ஸல்), “நிச்சயமாக யமாமாவில்
தன்னை நபி என்று கூறும் ஒருவன் உருவாகுவான். அவன் எனது மரணத்துக்குப் பின் கொல்லப்படுவான்”
என்றார்கள். ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! அவனை யார் கொல்வார்? என்று கேட்டார். அதற்கு
நபியவர்கள் “நீரும் உமது தோழர்களும்” என்றார்கள். பின்னாளில் நபி (ஸல்) கூறியவாறே நடந்தது.
7) ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்
இவர் பெயர் ‘ஹாரிஸ் இப்னு அபூ ஷமீர் அல்கஸ்ஸானி’ ஆகும். நபி (ஸல்) இவருக்கு எழுதிய
கடிதமாவது:
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர் வழியைப் பின்பற்றி,
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!
தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று
நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.”
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார்.
இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு “என்னிடமிருந்து
எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்” என்று கர்ஜித்தான்.
இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. கடுங்கோபம் கொண்ட அவன் கைஸர் மன்னரிடம் நபியவர்கள்
மீது போர் தொடுக்க அனுமதி கேட்டான். ஆனால், கைஸர் அவனைத் தடுத்து விட்டார். இதற்குப்
பின் கடிதம் கொண்டு வந்த ஷுஜாஃ இப்னு வஹபுக்கு அன்பளிப்பாக ஆடைகளையும் வழிசெலவுகளையும்
கொடுத்து அழகிய முறையில் ஹாரிஸ் அனுப்பி வைத்தான்.
8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்
நபியவர்கள் ஓமன் நாட்டு அரசர் ‘ஜைஃபர்’ மற்றும் அவரது சகோதரர் ‘அப்து“க்குக் கடிதம்
அனுப்பினார்கள். அதன் வாசகமாவது:
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது.
நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய
அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.
நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப் பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை
அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை
உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள்
இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள்
இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும்
என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள்.
எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.”
இக்கடிதத்தை அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கொண்டு சென்றார். இப்போது நாம் இந்த நிகழ்ச்சியை
குறித்து அம்ர் (ரழி) கூறுவதைக் கேட்போம்.
“நான் ஓமன் சென்று முதலில் அப்தை சந்தித்தேன். ஏனெனில், அப்துதான் இருவரில் சாந்த குணமும்
புத்திசாலித்தனமும் உடையவர். நான் அவரிடம் சென்று, நான் அல்லாஹ்வின் தூதரால் உமக்கும்
உமது சகோதரருக்கும் அனுப்பப்பட்ட தூதுவனாவேன்” என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.
அதற்கவர் “எனது சகோதரர்தான் வயதிலும் ஆட்சியிலும் என்னைவிட முந்தியவர். எனவே, நான்
உன்னை அவரிடம் அனுப்பி வைக்கிறேன். முதலில் அவர் உன் கடிதத்தை படிக்கட்டும் என்று கூறிவிட்டு
“நீ எதன் பக்கம் அழைக்கிறாய்?” என்றார்.
அம்ர்: நான் உன்னை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர்
யாருமில்லை. அவனைத் தவிர வணங்கப்படும் அனைத்தையும் விட்டு நீர் விலகிக் கொள்ள வேண்டும்.
நிச்சயமாக முஹம்மது, அல்லாஹ்வின் அடிமை, அவனது தூதர் என்று நீர் சாட்சி கூறவேண்டும்.
அப்து: அம்ரே! நிச்சயமாக நீர் உனது கூட்டத்தினரின் தலைவருடைய மகன். உனது தந்தை என்ன
செய்தார்? அவர் நாங்கள் பின்பற்றுவதற்குத் தகுதியானவர்தான்.
அம்ர்: முஹம்மதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் மரணித்து விட்டார். அவர் இஸ்லாமை ஏற்று நபி
(ஸல்) அவர்களை உண்மைப்படுத்தியிருக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். (ஆனால் நடக்கவில்லை)
நானும் எனது தந்தையின் கொள்கையில்தான் இருந்தேன். இறுதியாக அல்லாஹ் எனக்கு இஸ்லாமிய
நேர்வழியைக் காட்டினான்.
அப்து: நீர் எப்போது அவரைப் பின்பற்ற ஆரம்பித்தாய்?
அம்ர்: சமீபத்தில் தான்.
அப்து: நீர் எங்கிருக்கும் போது இஸ்லாமை ஏற்றுக் கொண்டாய்?
அம்ர்: நான் நஜ்ஜாஷியிடமிருக்கும் போது இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். அவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு
விட்டார்.
அப்து: அப்போது அவரது கூட்டத்தினர் அவன் ஆட்சிக்கு என்ன செய்தனர்?
அம்ர்: அவரது ஆட்சியை ஏற்று அவரைப் பின்பற்றியே நடந்தனர்.
அப்து: அவைத் தலைவர்களும் பாதிரிகளுமா அவரைப் பின்பற்றினார்கள்?
அம்ர்: ஆம்!
அப்து: அம்ரே! நீர் சொல்வதை நன்கு யோசித்துச் சொல். ஏனெனில் பொய்யை விட ஒருவனை கேவலப்படுத்தக்
கூடிய குணம் எதுவும் இருக்க முடியாது.
அம்ர்: நான் பொய் கூறவுமில்லை. அதை எங்களின் மார்க்கம் ஆகுமானதாக கருதவுமில்லை.
அப்து: அநேகமாக ஹிர்கலுக்கு நஜ்ஜாஷி இஸ்லாமானது தெரிந்திருக்காது.
அம்ர்: இல்லை. ஹிர்கலுக்குத் தெரியும்.
அப்து: அது ஹிர்கலுக்கு தெரியுமென்பதை நீர் எவ்வாறு அறிந்து கொண்டீர்?
அம்ர்: அதாவது, நஜ்ஜாஷி இதற்கு முன் ஹிர்கலுக்குக் கப்பம் கட்டி வந்தார். ஆனால், அவர்
எப்போது இஸ்லாமை ஏற்று முஹம்மதை உண்மைப்படுத்தினாரோ அப்போது “அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
ஹிர்கல் என்னிடம் ஒரு திர்ஹமைக் கேட்டாலும் நான் அதைக் கொடுக்க மாட்டேன்” என்று கூறிவிட்டார்.
இவ்வார்த்தை ஹிர்கலுக்கு எட்டியபோது அவருடன் இருந்த அவரது சகோதரர் ‘யன்னாக்’ என்பவன்
“உமது அடிமை உமக்குக் கப்பம் கட்டாமல் உமது மார்க்கத்தை விட்டு விட்டு வேறொருவரின்
புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதற்கு நீ விட்டு விடுகிறாயா?” என்று கேட்டான். அதற்கு
ஹிர்கல் “ஒருவர் ஒரு மார்க்கத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும்போது அவரை நான் என்ன செய்ய
முடியும்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது ஆட்சியின் மீது எனக்குப் பிரியமில்லையெனில்
அவர் செய்தது போன்றுதான் நானும் செய்திருப்பேன்” என்றார்.
அப்து: அம்ரே! நீர் என்ன சொல்கிறாய் என்பதை நன்கு யோசித்துக் கொள்!
அம்ர்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் உண்மைதான் சொல்கிறேன்.
அப்து: அவர் எதை செய்யும்படி ஏவுகிறார்? எதை செய்வதிலிருந்து தடுக்கிறார்?
அம்ர்: அல்லாஹ்வுக்கு வழிபடவேண்டுமென ஏவுகிறார். அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கிறார்.
(பெற்றோருக்கு) உபகாரம் செய்யவும், உறவினர்களைச் சேர்த்து வாழவும் சொல்கிறார். அநியாயம்
செய்வது, அத்துமீறுவது, விபசாரம் செய்வது, மது அருந்துவது, கற்கள், சிலைகள், சிலுவைகள்
ஆகியவற்றை வணங்குவது போன்ற அனைத்திலிருந்தும் தடுக்கிறார்.
அப்து: ஆஹா! அவர் அழைக்கும் விஷயம் எவ்வளவு நல்லதாக இருக்கிறது. எனது சகோதரர் இவர்
விஷயத்தில் எனது பேச்சை ஏற்றுக் கொண்டால் நாங்கள் இருவரும் நேரடியாக முஹம்மதிடம் வந்து
அவரை நம்பிக்கை கொண்டு அவரை உண்மைப்படுத்துவோம். ஆனால், எனது சகோதரர் தனது பதவி மீது
ஆசை கொண்டவர். அதை அவர் பிறருக்கு விட்டுக் கொடுத்து விட்டு அவருக்கு (கட்டுப்பட்டு)
வாலாக இருப்பதை விரும்ப மாட்டார்.
அம்ர்: நிச்சயமாக உமது சகோதரர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் தூதர் அவரையே
அவரது கூட்டத்தினருக்கு அரசராக நியமித்து விடுவார்கள். மேலும், அந்தக் கூட்டத்தினரின்
செல்வந்தர்களிடமிருந்து தர்மத்தைப் பெற்று அக்கூட்டத்தினரின் ஏழைகளுக்கே திரும்ப கொடுத்து
விடுவார்கள்.
அப்து: இது மிக அழகிய பண்பாடாயிற்றே. தர்மம் என்றால் என்ன?
அம்ரு: நபியவர்கள் பொருட்களில் இன்னின்னவற்றில் ஏழைவரி கொடுக்க வேண்டுமென கடமையாக்கி
இருக்கிறார்கள். அதுபோல் ஆடு, மாடு, ஒட்டகங்களிலும்.
அப்து: அம்ரே! இலைதழைகளைத் தின்று தண்ணீரைக் குடித்து வாழும் எங்களது கால்நடைகளிலுமா
(தர்மம்) ஏழைவரி வசூலிக்கப்படும்?
அம்ர்: ஆம்! அவ்வாறுதான்.
அப்து: எனது கூட்டத்தினர் உங்களை விட்டும் தூரமாக இருக்கிறார்கள். அவர்களிடம் படைபலமும்
அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் இதற்குக் கட்டுப்படுவார்கள் என்று நான் எண்ணவில்லை.
அம்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் அப்துடைய வீட்டில் இவ்வாறு பல நாட்கள் தங்கியிருந்தேன்.
ஒவ்வொரு நாளும் அவர் தனது சகோதரரிடம் சென்று என்னிடம் கேட்ட செய்தியைக் கூறுவார். பின்பு
ஒரு நாள் அப்தின் சகோதரர் என்னை அழைக்க நான் அவரிடம் சென்றேன். அவரது பணியாட்கள் எனது
புஜத்தைப் பிடித்தவர்களாக நின்றனர். “அவரை விட்டு விடுங்கள்” என்று அவர் கூற, அவர்கள்
என்னை விட்டு விட்டனர். அங்கிருந்த இருக்கையில் அமரச் சென்ற போது அந்தப் பணியாட்கள்
என்னை உட்கார விடாமல் தடுத்தனர். சரிஎன, நான் அப்தை நோக்கினேன். அவர் என்னிடம் “உமது
தேவை என்னவென்று சொல்” என்றார்.
நான் அப்தின் சகோதரரிடம் முத்திரையிடப்பட்ட கடிதத்தைக் கொடுத்தேன். அதை வாங்கி முத்திரையைப்
பிரித்து இறுதி வரை படித்தார். பின்பு தனது சகோதரரிடம் கொடுக்கவே அவரும் அவ்வாறே படித்துப்
பார்த்தார். ஆனால், அவரை விட அவன் சகோதரர் அப்துதான் மிகவும் இரக்கமுள்ளவராக இருந்தார்.
பின்பு அப்தின் சகோதரர் என்னிடம் “குறைஷிகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று என்னிடம்
சொல்ல மாட்டாயா?” என்றார். அதற்கு நான் “குறைஷிகள் அவரைப் பின்பற்றி விட்டனர். மார்க்கத்தில்
ஆசையுடன் சிலர் அவரை ஏற்றுக் கொண்டனர். எதிர்த்தவர்கள் வாளினால் அடக்கப்பட்டனர்” என்றேன்.
அதற்கவர் “அவருடன் யார் இருக்கிறார்கள்?” என்றார். அப்போது நான் மக்களெல்லாம் இஸ்லாமை
விரும்பியே ஏற்றிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த நேர்வழியாலும், பகுத்தறிவாலுமே
இதுவரை தாங்கள் வழிகேட்டில்தான் இருந்து வந்ததை அறிந்து கொண்டனர்.
“இப்போதுள்ள இந்தச் சிரமமான நிலையில் உன்னைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத்
தெரியவில்லை. நீர் இன்று இஸ்லாமை ஏற்று அவரைப் பின்பற்றவில்லை என்றால் நபி (ஸல்) அவர்களின்
வீரர்கள் நாளை ஒரு நாள் உன்னிடம் வந்து சேருவார்கள். உமது ஆட்சியெல்லாம் அழியத்தான்
போகிறது. எனவே, நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்! ஈடேற்றம் அடைவாய்! நபி (ஸல்) உனது கூட்டத்தினருக்கு
உன்னையே ஆளுநராக நியமிப்பார்கள். குதிரைகளும் வீரர்களும் உம்மிடம் வரமாட்டார்கள்” என்று
கூறினேன். அப்போது அவர் “என்னை இன்று விட்டுவிடு நாளை என்னிடம் திரும்ப வா” என்றார்.
இதற்குப் பின் நான் அப்திடம் சென்றேன். அவர் “அம்ரே! எனது சகோதரருக்கு ஆட்சி மோகம்
இல்லையென்றால் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்வார் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார்.
மறுநாள் நான் அப்தின் சகோதரரிடம் சென்றேன். ஆனால், அவர் எனக்கு அனுமதியளிக்க மறுத்து
விட்டார். எனவே, நான் திரும்ப அப்திடம் வந்து “என்னால் உனது சகோதரரிடம் செல்ல முடியவில்லை”
என்றேன். அவர் என்னை அவன் சகோதரரிடம் நேரடியாக அனுப்பி வைத்தார்.
அவர் என்னிடம் “நீ எனக்குக் கொடுத்த அழைப்பு விஷயமாக யோசித்துப் பார்த்தேன். எனது கையிலுள்ள
ஆட்சியை வேறு எவருக்கேனும் நான் கொடுத்து விட்டால் அரபிகளில் மிக பலவீனனாக கருதப்படுவேன்.
மேலும், அவரது வீரர்கள் இங்கு வரை வந்து சேரவும் முடியாது. அப்படி வந்தாலும் இதுவரை
அவர்கள் சந்தித்திராத போரைச் சந்திக்க நேரிடும்” என்று கூறினான். இதனைக் கேட்டு “சரி!
நாளை நான் இங்கிருந்து புறப்படுகிறேன்” என்றேன். நான் நாளை நிச்சயமாக புறப்பட்டு விடுவேன்
என்பதை தெரிந்து கொண்டவுடன், அப்து தனது சகோதரரிடம் சென்று “நம்மால் அவரை வெல்ல முடியாது.
அவர் யாருக்கெல்லாம் தூதனுப்பினாரோ அவர்கள் அனைவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
எனவே, நாமும் அவரை ஏற்றுக் கொள்வதுதான் நமக்கு நல்லது” என்று கூறினார்.
மறுநாள் விடிந்தபோது அப்தின் சகோதரர் என்னை வரவழைத்து அவரும் அவரது சகோதரரும் இஸ்லாமை
ஏற்றுக்கொண்டு, நபி (ஸல்) அவர்களை உண்மையாளராக ஏற்றுக் கொண்டார்கள். அங்கு ஜகாத் (ஏழை
வரி) வசூலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். என்னை எதிர்த்தவர்களை அடக்க எனக்கு
உதவியும் செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முன் பின் தொடர்களை நாம் ஆராயும் போது இதுதான் இறுதியாக நபி (ஸல்)
அனுப்பிய கடிதமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அநேகமாக மக்காவை வெற்றிக் கொண்ட
பிறகு இக்கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பல அண்டை நாட்டு மன்னர்களுக்கு இக்கடிதங்களின் மூலம் இஸ்லாமிய அழைப்பை
எடுத்து வைத்தார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டனர் சிலர் மறுத்து விட்டனர்.
என்றாலும் நிராகரித்தவர்கள் எப்போதும் நபியவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தனர்.
நபியவர்களின் பெயரும் மார்க்கமும் அவர்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டது.