பக்கம் -83-
ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்த போர் நடவடிக்கைகள்
தூகரத் (அ) காபா போர்
நபி (ஸல்) அவர்களின் சினையுள்ள ஒட்டகங்களை ஃபஸாரா கிளையினர் கொள்ளை அடித்துச் சென்றனர்.
அவர்களை விரட்டிப் பிடிப்பதற்காக நபி (ஸல்) புறப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு நடந்த ஹுதைபிய்யா ஒப்பந்தம், மேலும் ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு நடந்த கைபர்
போர் ஆகிய இரண்டிற்குமிடையில் நடந்த சம்பவம்தான் இந்த ‘தூகரத்’ என்பது. இமாம் புகாரி
(ரஹ்) அவர்கள் இப்போரைப் பற்றிக் குறிப்பிடும் போது “கைபர் போருக்கு மூன்று மாதங்களுக்கு
முன் இது நடைபெற்றது” என்று குறிப்பிடுகிறார்கள். இமாம் முஸ்லிமும் (ரஹ்) ‘ஸலமா இப்னு
அக்வா“வின் மூலம் அறிவிக்கும் ஹதீஸின் ஆதாரத்துடன் இவ்வாறே குறிப்பிடுகிறார்கள். ஆனால்,
அதிகமான வரலாற்றாசிரியர்கள், “இந்தப் போர் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்தது”
என்று குறிப்பிடுகிறார்கள். அது சரியல்ல! மாறாக, இமாம் புகாரியும் இமாம் முஸ்லிமும்
கூறியிருப்பதுதான் மிகவும் ஆதாரப்பூர்வமானது.
இப்போரின் முக்கிய வீரரான ஸலமா இப்னு அக்வா (ரழி) அவர்கள் இப்போரைப் பற்றி கூறுவதாவது:
நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குச் சொந்தமான சினை ஒட்டகங்களை மேய்ப் பதற்காக அதன் மேய்ப்பாளருடன்
தனது அடிமை ரபாஹாவையும் அனுப்பி வைத்தார்கள். அபூ தல்ஹாவின் குதிரையில் நானும் ரபாஹாவுடன்
சென்றேன். மறுநாள் காலையில் ஃபஸாரா கிளையைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவன் அனைத்து
ஒட்டகங்களையும் கொள்ளையடித்துக் கொண்டதுடன், அதனை மேய்த்துக் கொண்டிருந்தவரையும் கொன்று
விட்டான்.
இதைப் பார்த்த நான் உடனே, “இந்தக் குதிரையை அபூ தல்ஹாவிடம் கொடுத்து விட்டு, நபி (ஸல்)
அவர்களுக்கு இந்தச் செய்தியை அறிவித்து விடு” என்று ரபாஹாவிற்கு கூறினேன். பிறகு அங்கிருந்த
ஒரு குன்றின் மீது ஏறி, மதீனாவை நோக்கி ‘யா ஸபாஹா“” என்று மூன்று முறை சப்தமிட்டேன்.
அதற்குப் பின் அங்கிருந்து கொள்ளையர்களை அம்பால் எறிந்து கொண்டே பின்தொடர்ந்தேன்.
“இந்தா வாங்கிக்கொள்! நான் அக்வயின் மைந்தன்.
இன்று தாய்ப் பால் குடித்தோர் நாள்
அல்லது அற்பர்கள் ஓடும் நாள்.”
என்ற பாடியவாறே அவர்களை நான் தாக்கினேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அம்பெறிந்து கொண்டே அவர்களை தப்பித்து முன்னேறுவதிலிருந்து
தடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒரு வீரன் என்னை நோக்கி திரும்பி வந்ததால் நான்
ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டு அம்பெய்து அவனைக் காயப்படுத்துவேன். இதே
நிலையில் அவர்கள் மலைகளுக்கிடையில் உள்ள ஒரு நெருக்கமான பாதையில் சென்றார்கள். நான்
மலையின் மீது ஏறி அவர்களைக் கற்களால் எறிந்தேன். ஒட்டகங்களை ஒவ்வொன்றாக அனைத்தையும்
அவர்கள் விட்டுவிட்டார்கள். மேலும், நான் அவர்களைக் கற்களால் எறிந்து கொண்டே பின்தொடர்ந்தேன்.
தங்களது சுமைகளின் பலுவை குறைப்பதற்காக முப்பதிற்கும் அதிகமான போர்வைகளையும் ஈட்டிகளையும்
கீழே போட்டு விட்டு ஓடினார்கள்.
நான் அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஒன்று சேர்த்து அவற்றின் மீது சில கற்களை வைத்தேன்.
பிறகு, நபியவர்களும் நபித்தோழர்களும் தெரிந்து கொள்வதற்காக அதில் அடையாளமிட்டு விட்டு,
எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் ஒரு மலைக் கணவாயின் குறுகலான இடத்திற்குச்
சென்று மதிய உணவு சாப்பிட அமர்ந்தனர். நான் ஒரு மலை உச்சியில் ஏறி நின்று அவர்களைக்
கவனித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் என்னைப் பார்த்து விட்டார்கள்.
அவர்களிலிருந்து நான்கு நபர்கள் என்னைப் பிடிக்க மலை மீதேறி வந்தார்கள். நான் அவர்களைப்
பார்த்து “உங்களுக்கு நான் யாரென்று தெரியுமா? நான்தான் ஸலமா இப்னு அக்வா. நான் உங்களில்
ஒருவரைக் கொல்ல நாடினால் நிச்சயம் கொன்றே தீருவேன். ஆனால், உங்களில் எவராலும் என்னைக்
கொல்ல முடியாது” என்று கர்ஜித்தவுடன் அவர்கள் என்னருகே வர துணிவின்றி திரும்பி விட்டனர்.
இந்நிலையில் உதவிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்து நபி (ஸல்) அவர்களின் குதிரை வீரர்கள்
தோட்டங்களுக்கிடையே பாய்ந்து வருவதை நான் மலையில் இருந்து பார்த்தேன். அவர்களில் முதலாவதாக
அக்ரம், அவரைத் தொடர்ந்து அபூ கதாதா, அவரைத் தொடர்ந்து மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி)
ஆகியோர் வந்து சேர்ந்தனர்.
முதலில் வந்த அக்ரமுக்கும், எதிரி அப்துர் ரஹ்மானுக்கும் சண்டை மூண்டது. அப்துர் ரஹ்மான்
அக்ரமை ஈட்டியால் குத்திக் கொன்று விட்டான். அதிவிரைவில் அங்கு வந்து சேர்ந்த அபூ கதாதா
(ரழி), அப்துர் ரஹ்மானை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார்.
சில வினாடிகளில் நடந்து முடிந்த இக்காட்சியைப் பார்த்து பயந்துபோன எதிரிகள் புறமுதுகுக்
காட்டி ஓடினர். நான் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடலானேன். இறுதியில் சூரியன் மறைவதற்கு
சற்று முன் ‘தூகரத்’ என்ற தண்ணீருள்ள பள்ளத்தாக்கை நோக்கி தண்ணீர் குடிக்கச் சென்றனர்.
அவர்கள் மிக தாகித்தவர்களாக இருந்தனர். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க விடாமல்
நான் அங்கிருந்தும் அவர்களை விரட்டினேன்.
இந்நிலையில் நபியவர்களும், அவர்களது படையும் இஷா நேரத்தில் என்னை வந்தடைந்தனர். நான்
“அல்லாஹ்வின் தூதரே! இக்கூட்டத்தினர் மிகுந்த தாகித்தவர்களாக இருக்கின்றனர். என்னுடன்
100 வீரர்களை அனுப்புங்கள். நான் அவர்களிடம் இருக்கும் குதிரைகள் அனைத்தையும் அவற்றின்
கடிவாளங்களுடன் பறித்துக் கொண்டு, அவர்களையும் கழுத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு
வந்து உங்களிடம் நிறுத்துகிறேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்), “அக்வாவின் மகனே! நீ நமது
உடைமைகளைப் பெற்றுக் கொண்டாய். எனவே, சற்று கருணைக் காட்டு” என்று கூறிவிட்டு “இப்போது
அக்கூட்டத்தினர் கத்ஃபான் கிளையினரிடம் விருந்து சாப்பிடுகின்றனர்” என்று கூறினார்கள்.
நபியவர்கள் இந்நிகழ்ச்சியைப் பற்றி விமர்சிக்கும் போது “இன்றைய நமது குதிரை வீரர்களில்
மிகச் சிறந்தவர் அபூ கதாதா, நமது காலாட்படைகளில் மிகச் சிறந்தவர் ஸலாமா” என்று கூறினார்கள்.
நபியவர்கள் அக்கூட்டத்தனரிடமிருந்து கிடைத்ததைப் பங்கிடும்போது அதிலிருந்து காலாட்படையைச்
சேர்ந்தவருக்குக் கொடுக்கும் பங்கு, குதிரைப் படையைச் சேர்ந்தவருக்கு கொடுக்கும் பங்கு
என இரண்டு பங்குகளை எனக்குக் கொடுத்தார்கள். நபி (ஸல்) மதீனாவிற்குத் திரும்பிச் செல்லும்
போது தனது ஒட்டகை அழ்பா மீது தன்னுடன் என்னையும் அமரவைத்துக் கொண்டார்கள்.
நபி (ஸல்) மதீனாவிலிருந்து புறப்படும் முன், அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரழி) அவர்களைப்
பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரின் கொடியை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) அவர்களிடம்
கொடுத்தார்கள்.
கைபர் போர் (ஹிஜ்ரி 7, முஹர்ரம்)
“கைபர்’ என்ற ஊர் மதீனாவிலிருந்து வடக்கில் 80 மைல் தொலைவில் கோட்டைகளும் விவசாய நிலங்களும்
அதிகம் உள்ள பெரும் நகரமாக முற்காலத்தில் விளங்கியது. ஆனால், இன்று அது ஒரு கிராமமாக
உள்ளது. அங்குள்ள காற்றும், நீரும் உடல் நலத்திற்குச் சற்றும் ஒவ்வாததாக உள்ளது.
போருக்கான காரணம்
மூன்று பெரிய எதிரிகளில் மிகப் பெரிய மற்றும் அதிகப் பலம் வாய்ந்த எதிரியான குறைஷிகள்
விஷயத்தில் ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கைக்குப் பின் நபியவர்கள் நிம்மதி அடைந்து
விட்டார்கள். எனவே, மற்ற இரண்டு எதிரிகளின் கணக்கைத் தீர்க்க நாடினார்கள். அப்போதுதான்
அப்பகுதியில் அமைதியும், சாந்தியும், சமாதானமும் முழுமையாக நிலவ முடியும். அத்துடன்
இரத்தம் சிந்தும் போர்களிலிருந்து முஸ்லிம்கள் ஓய்வு பெற்று இஸ்லாமிய அழைப்புப் பணியைத்
தொடங்க முடியும்.
சதித்திட்டங்கள் தீட்டுவதற்கும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கும்
கைபர் நகரம் ஒரு மையமாக விளங்கியதால், நபி (ஸல்) அவர்கள் தங்களது கவனத்தை முதலாவதாக
இதன் பக்கம் செலுத்தினார்கள்.
இந்நகரவாசிகள் மேற்கூறிய தன்மையுடையவர்கள் என்பதற்கு சில சான்றுகள்: (1) இவர்கள்தான்
முஸ்லிம்களுக்கு எதிராகக் குறைஷிகளையும் மற்ற அரபிகளையும் ஒன்று திரட்டி அகழ் போர்
ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள். (2) முஸ்லிம்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை
மீறும்படி குரைளா யூதர்களை தூண்டி விட்டவர்கள். (3) இஸ்லாமியச் சமூகத்திற்குள் தன்னை
மறைத்து வாழும் புல்லுருவிகளான நயவஞ்சகர்களுடன் தொடர்பு கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள்.
(4) முஸ்லிம்களின் மூன்றாவது எதிரியான கத்ஃபான் மற்றும் கிராம அரபிகளுடன் தொடர்பு கொண்டு
முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டி விடுபவர்கள். (5) அவர்களும் முஸ்லிம்களுடன்
போர் புரிவதற்கான பல தயாரிப்புகள் செய்து வந்தனர். (இவ்வாறு பல வழிகளில் முஸ்லிம்களைத்
தொடர் சிரமங்களுக்கு ஆளாக்கியதுடன்) (6) நபியைக் கொலை செய்வதற்கு ஒரு திட்டத்தையும்
தீட்டினர்.
ஆக, இவற்றைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் பல படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்கள்.
மேலும், இந்தச் சதிகாரர்களுக்கு தலையாக விளங்கும் ஸலாம் இப்னு அபுல் ஹுகைக், உஸைர்
இப்னு ஜாம் ஆகியோரைக் கொல்வதும் நிர்பந்தமான ஒன்றாயிற்று.
ஆனால், இவை அனைத்தையும் விட பெரிய அளவில் யூதர்களைக் கவனிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது.
எனினும், அதை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போனதற்குக் காரணம் யூதர்களை விட பலமும்
பிடிவாதமும், வம்பும் விஷமமும் கொண்ட குறைஷிகள் முஸ்லிம்களை எதிர்த்து வந்தனர். தற்போது
சமாதான உடன்படிக்கையால் குறைஷிகளின் எதிர்ப்பும், தாக்குதலும் முடிவுக்கு வந்துவிடவே,
யூதர்களின் கணக்கைப் பார்ப்பதற்கான சரியான நேரம் முஸ்லிம்களுக்கு அமைந்தது.
கைபரை நோக்கி...
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: “நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடித்துத்
திரும்பிய பின், மதீனாவில் துல்ஹஜ் மாதம் முழுதும், முஹர்ரம் மாதத்தில் சில நாட்களும்
தங்கி விட்டு கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள்.”
திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்: “பின்வரும் இறைவசனத்தின் மூலம் அல்லாஹ்
வாக்களித்த ஒன்றுதான் கைபர் போர்.
ஏராளமான பொருட்களை (போல்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான்.
இதனை உங்களுக்கு அதி சீக்கிரத்திலும் கொடுத்து விட்டான். (அல்குர்ஆன் 48:20)
இதில் கூறப்பட்டுள்ள ‘இதனை’ என்பது ஹுதைபிய்யா ஒப்பந்தத்தையும் ‘ஏராளமான பொருட்களை’
என்பது கைபரையும் குறிக்கிறது.