பக்கம் -84-
இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை
நயவஞ்சகர்களும் உறுதி குலைந்த நம்பிக்கையாளர்களும் ஹுதைபிய்யாவில் கலந்து கொள்ளாமல்
பின்தங்கி விட்டதால் அவர்கள் விஷயமாக அல்லாஹ் நபிக்கு பின்வருமாறு கட்டளை
பிறப்பித்தான்.
(நபியே! முன்னர் போருக்கு உங்களுடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த
பொருட்களை எடுத்துக் கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில் (உங்களை நோக்கி) “நாங்களும்
உங்களைப் பின்பற்றி வர எங்களை (அனுமதித்து) விடுங்கள்” என்று கூறுவார்கள். இவர்கள்
அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றி விடவே கருதுகின்றார்கள். ஆகவே, நீங்கள் அவர்களை
நோக்கி “நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு
கூறிவிட்டான்” என்றும் கூறுங்கள்! அதற்கவர்கள், (ம்அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை“)
நீங்கள்தான் நம்மீது பொறாமை கொண்டு (இவ்வாறு கூறுகின்றீர்கள்) என்று கூறுவார்கள்.
அன்றி, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்து கொள்ள
மாட்டார்கள். (அல்குர்ஆன் 48:15)
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் கைபருக்குப் புறப்பட்ட போது “போர் புரிய ஆசையுள்ளவர்கள்
மட்டும் புறப்பட வேண்டும்” என அறிவித்தார்கள். ஆகவே, ஹுதைபிய்யா உடன்படிக்கையில்
கலந்த 1400 தோழர்கள் மட்டும் இப்போருக்காகப் புறப்பட்டனர்.
நபி (ஸல்) மதீனாவில் ‘சிபா இப்னு உருஃபுதா அல்கிஃபா’ (ரழி) என்ற தோழரைப்
பிரதிநிதியாக நியமித்தார்கள். ஆனால், “நுமைலா இப்னு அப்துல்லாஹ் அல்லைஸி (ரழி)
என்பவரை நபி (ஸல்) பிரதிநிதியாக நியமித்தார்கள்” என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்)
கூறுகிறார். எனினும் ஆய்வாளர்கள், முந்திய கூற்றையே மிகச் சரியானது என்கின்றனர்.
நபியவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்ட பின் அபூஹுரைரா (ரழி) இஸ்லாமை ஏற்று மதீனா
வந்தார். சிபா உடன் ஸுப்ஹ் தொழுதுவிட்டு (இருவரும் நிலைமைகளை பரிமாறிக் கொண்டவுடன்)
போருக்குச் செல்வதற்கான சாதனங்களை அபூ ஹுரைராவுக்கு சிபா (ரழி) தயார் செய்து
கொடுத்தார்கள். அதற்குப் பின் அபூஹுரைரா (ரழி) அங்கிருந்து புறப்பட்டு
நபியவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது கைபர் போர் முடிவுற்றிருந்தது. நபி
(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுடன் ஆலோசித்து அபூஹுரைராவிற்கும் அவருடன் வந்த
தோழர்களுக்கும் கனீமத்தில் பங்கு கொடுத்தார்கள்.
நயவஞ்சகர்கள் யூதர்களுடன் தொடர்பு கொள்ளுதல்
மதீனாவிலிருந்த நயவஞ்சகர்கள் யூதர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டனர். நயவஞ்சகர்
களின் தலைவன் இப்னு உபை கைபரில் உள்ள யூதர்களுக்குப் பின்வரும் செய்தியை
அனுப்பினான். “முஹம்மது உங்களை நோக்கி வருகிறார் உங்களைத் தற்காத்துக் கொள்ள தயாராக
இருங்கள் முஹம்மதைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் உங்களது எண்ணிக்கையும்
ஆயுதங்களும் அதிகமாக இருக்கின்றன் முஹம்மதின் கூட்டத்தினரோ மிக சொற்பமாக
இருக்கின்றனர் அவர்களிடம் குறைவாகவே ஆயுதங்கள் உள்ளன.”
இந்தச் செய்தியைத் தெரிந்து கொண்ட கைபர்வாசிகள் கினானா இப்னு அபுல் ஹுகைக், ஹவ்தா
இப்னு கைஸ் ஆகிய இருவரையும் கத்ஃபான் கிளையினரிடம் உதவி கேட்டு அனுப்பினர். இந்த
கத்ஃபான் கிளையினர் கைபரிலுள்ள யூதர்களின் ஒப்பந்தத் தோழர்களாகவும் முஸ்லிம்களுக்கு
எதிராக அவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் இருந்தனர். மேலும் “நாங்கள் முஸ்லிம்களை
வெற்றி கொண்டால் கைபரின் விளைச்சல்களில் சபாதியைத் தருகிறோம்” என்று யூதர்கள்
கத்ஃபானியர்களுக்கு வாக்குறுதி அளித்தனர்.
கைபரின் வழியில்...
நபியவர்கள் ‘இஸ்ர்’ என்ற மலை வழியாக ‘சஹ்பா’ சென்று அங்கிருந்து ‘ரஜீஈ’
பள்ளத்தாக்கைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்து கத்ஃபான் கிளையினர் வசிக்குமிடம் ஒரு
நாள் பயண தூரத்திலிருந்தது. அப்போது கத்ஃபான் கிளையினர் யூதர்களுக்கு உதவிட
ஆயத்தமாகி சென்று கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் போய்க் கொண்டிருக்கும் போது
தங்களது ஊரில் பெரும் ஆரவாரத்தை உணர்ந்தனர். முஸ்லிம்கள்தான் தங்களது
குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று எண்ணி தங்களது ஊருக்குத்
திரும்பி விட்டனர். அதற்குப் பிறகு அவர்கள் கைபருக்கு வரவில்லை.
படைக்கு வழிகாட்டிச் சென்று கொண்டிருந்த இரு வழிகாட்டிகளையும் அழைத்து வடக்குப்
பக்கமாக கைபருக்குள் நுழைவதற்கு மிகப் பொருத்தமானப் பாதையைக் காட்டுமாறு நபி (ஸல்)
கூறினார்கள். அப்போதுதான் ஷாம் தேசத்திற்குத் தப்பித்துச் செல்லாமல் யூதர்களைத்
தடுக்க முடியும், கத்ஃபான் கிளையினர் யூதர்களுக்கு உதவிட வருவதையும் தடுக்க
முடியும்.
வழிகாட்டிகளில் ஹுஸைல் என்ற பெயருடையவர் “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு
அந்தச் சரியான வழியைக் காட்டுகிறேன்” என்றுக் கூறி நபியவர்களை அழைத்துச் சென்றார்.
இறுதியாக பல பாதைகள் பிரியும் ஓடத்தை அடைந்தவுடன் “அல்லாஹ்வின் தூதரே! இந்த எல்லா
வழிகளின் மூலமாகவும் நாம் கைபருக்குச் சென்றடையலாம். எந்த வழியில் நான் உங்களை
அழைத்துச் செல்ல” என்று கேட்டார். நபியவர்கள் “ஒவ்வொரு பாதையின் பெயரையும் எனக்குக்
கூறு” என்றார்கள்.
அதற்கவர் ஒரு பாதையைக் குறிப்பிட்டு அதன் பெயர் ‘ஹஜன்’ (சிரமமானது) என்றார்.
நபியவர்கள் “அது வேண்டாம்” என்று மறுத்து விட்டார்கள். அடுத்த பாதையை
சுட்டிக்காட்டி அதன் பெயர் ‘ஷாஸ்’ (பிந்தது) என்றார். அதையும் வேண்டாமென்று மறுத்து
விட்டார்கள். மூன்றாவதாக, ஒரு பாதையைக் காண்பித்து, அதன் பெயர் ‘ஹாதிப்’ (விறகு
பொறுக்குபவர்) என்றார். அதையும் நபி (ஸல்) புறக்கணித்து விட்டார்கள். நான்காவதாக,
“அல்லாஹ்வின் தூதரே! இப்போது நாம் செல்வதற்கு ஒரு வழிதான் மீதம் இருக்கிறது” என்று
ஹுஸைல் கூறினார். நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்து அனைத்தையும் கேட்டுக்
கொண்டிருந்த உமர் (ரழி) அவர்கள் “அந்த வழியின் பெயரென்ன” என்று வினவ, அவர் ‘மர்ஹப்’
(சந்தோஷமானது, வரவேற்கத்தக்கது) என்றார். உடனே நபியவர்கள் அப்பாதையில் அழைத்துச்
செல்லும்படி கூறினார்கள்.
வழியில் நடந்த சில நிகழ்ச்சிகள்
1) ஸலமா இப்னு அக்வா (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்று
கொண்டிருந்தோம். ஓர் இரவில் எனது சகோதரர் ஆமிடம் “எங்களுக்கு உமது கவிதைகளை பாடிக்
காட்டலாமே” என்று ஒருவர் கேட்டார். ஆமிர் நல்ல திறமையான கவிஞராக இருந்தார். உடனே
அவர் தனது வாகனத்திலிருந்து கீழிறங்கி கூட்டத்தினரின் வாகனங்களை,
“அல்லாஹ்வே! நீ இன்றி நாம் நேர்வழி பெறோம்.
தர்மம் செய்திலோம் தொழுதிறோம்.
எங்கள் மீது மன அமைதி இறக்குவாயாக!
எதிர்கொள்ளும் போது பாதங்களை நிலைநிறுத்துவாயாக!
இவர்கள் எமக்கு அநீதமிழைக்கின்றார்கள்.
அவர்கள் குழப்ப நினைத்தால் அதற்கு நாம்
அனுமதியோம் அனுமதியோம்”
நபி (ஸல்) “வாகனங்களை அழைத்துச் செல்லும் இவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு
“ஆமிர் இப்னு அக்வா” என்று மக்கள் கூறினர். “அல்லாஹ் அவருக்குக் கருணை காட்டட்டும்”
என்று நபி (ஸல்) கூறினார்கள். ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! உங்களின் பிரார்த்தனையால்
அவருக்கு வீரமரணம் (ஷஹாதத்) கடமையாகி விட்டதே. அவர் இன்னும் சிறிது காலம்
வாழ்ந்தால் எங்களுக்குப் பலனாக இருக்குமே!” என்று கூறினார். அதாவது நபியவர்கள்
போரின்போது யாருக்காவது குறிப்பிட்டு பிரார்த்தனை செய்தால் அவர் அப்போல்
கொல்லப்படுவார் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள். அவ்வாறே கைபர் போரிலும் நடந்தது.
2) கைபருக்கு அருகிலுள்ள ‘ஸஹ்பா’ என்ற இடத்தில் அஸ்ர் தொழுகை நடத்தினார்கள். தொழுத
பிறகு, மக்களிடம் அவர்கள் வைத்திருக்கும் உணவுகளைக் கொண்டுவரச் சொன்னார்கள்.
மக்களிடம் சத்துமாவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தச் சத்துமாவை விரிப்பில்
பரப்பி வைத்து நபியவர்களும் தோழர்களும் சாப்பிட்டனர். பின்பு மஃரிப் தொழுகைக்காக
நபி (ஸல்) தயாரானார்கள். புதிதாக ஒழுச் செய்யாமல் வாய் மட்டும் கொப்பளித்து விட்டு
நபி (ஸல்) அவர்களும் மக்களும் மஃரிப் தொழுகையில் ஈடுபட்டனர். பின்பு அந்த
இடத்திலேயே இஷா தொழுகையையும் நிறைவேற்றினார்கள்.
3) கைபருக்கு அருகில் சென்றவுடன் தங்களது படையை நிறுத்தி நபி (ஸல்) அல்லாஹ்விடம்
பிரார்த்தித்தார்கள்:
“அல்லாஹ்வே! ஏழு வானங்கள் மற்றும் அதற்குக் கீழ் உள்ளவற்றின் இறைவனே! ஏழு பூமிகள்
மற்றும் அவற்றுக்கு மேலுள்ளவற்றின் இறைவனே! ஷைத்தான்கள் மற்றும் அவை வழி
கெடுத்தவற்றின் இறைவனே! காற்றுகள் மற்றும் அவை வீசி எறிந்தவற்றின் இறைவனே!
நிச்சயமாக நாங்கள் இந்த ஊரிலுள்ள நன்மையையும், இந்த ஊரில் வசிப்பவர்களில் உள்ள
நன்மையையும், இந்த ஊரில் இருப்பவற்றில் உள்ள நன்மையையும் உன்னிடம் கேட்கிறோம்.
நிச்சயமாக இந்த ஊரிலுள்ள தீங்கை விட்டும், இந்த ஊரில் வசிப்பவர்களில் உள்ள தீங்கை
விட்டும், இந்த ஊரில் இருப்பவற்றில் உள்ள தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல்
தேடுகிறோம். பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) இந்த ஊருக்குள் நுழைகிறோம்” என்று
கூறினார்கள்.
கைபரின் எல்லையில் இஸ்லாமியப் படை
போருக்கு முந்திய இரவு கைபருக்கு மிக அருகாமையிலேயே முஸ்லிம்கள் இரவைக்
கழித்தார்கள். எனினும், யூதர்களால் முஸ்லிம்களின் வருகையைத் தெரிந்துகொள்ள
முடியவில்லை. பொதுவாக, நபியவர்கள் படையை அழைத்துச் செல்வது இரவு நேரமாக இருந்தால்
காலை வரை காத்திருந்து அதிகாலையில் அக்கூட்டத்தினரைத் தாக்குவார்கள். அன்றிரவு
ஸுப்ஹு தொழுகையை அதன் நேரம் வந்தவுடன் நல்ல இருட்டாக இருக்கும் போதே
நிறைவேற்றிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்கள். கைபர்வாசிகள் விவசாயச் சாதனங்களை
எடுத்துக் கொண்டு தங்களின் வயல்களுக்குப் புறப்பட்டனர். இஸ்லாமியப் படைகள் வருவது
அவர்களுக்குத் தெரியாது. கொஞ்ச தூரம் வந்தவுடன் இஸ்லாமியப் படையை அவர்கள் பார்த்து
அதிர்ச்சி அடைந்தனர். “ஆ! முஹம்மது வந்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக!
முஹம்மதும் அவரது படையும் வந்துவிட்டது” என்று கூறிக்கொண்டே ஊருக்குள் ஓடினர்.
நபியவர்கள் “அல்லாஹு அக்பர்! கைபர் நாசமாகி விட்டது. அல்லாஹு அக்பர்! கைபர்
நாசமாகிவிட்டது. நாம் ஒரு கூட்டத்தினரின் ஊருக்குச் சென்றால் அச்சமூட்டி எச்சரிக்கை
செய்யப்பட்ட அக்கூட்டத்தினரின் அந்தப் பொழுது மிகக் கெட்டதாகவே அமையும்” என்று
கூறினார்கள்.
கைபரின் கோட்டைகள்
கைபர் இரண்டு பகுதிகளாக இருந்தது. ஒரு பகுதியில் ஐந்து கோட்டைகள் இருந்தன. மற்றொரு
பகுதியில் மூன்று கோட்டைகள் இருந்தன. முதல் ஐந்து கோட்டைகளாவன. 1) நா”, 2) ஸஅப்
இப்னு முஆது, 3) ஜுபைர், 4) உபை, 5) நிஸார். இந்த ஐந்தில் முதல் மூன்று கோட்டைகள்
‘நிதா’ என்ற இடத்தில் இருக்கின்றன. மற்ற இரண்டு கோட்டைகள் ‘ஷக்’ என்ற இடத்தில்
இருக்கின்றன. கைபரின் மற்றொரு பகுதிக்கு ‘கதீபா’ என்று கூறப்படும். அதில் மற்ற
மூன்று கோட்டைகளும் இருந்தன. அவை: 1) கமூஸ், 2) வத்தீஹ், 3) சுலாளிம். மேலும்
கைபரில் இவையல்லாத பல கோட்டைகளும் இருந்தன. ஆனால், அவைகள் மிகச் சிறியவையே.
மேற்கூறப்பட்ட எட்டு கோட்டைகளைப் போன்று அவை மிக பலம் வாய்ந்ததுமில்லை
உறுதிமிக்கதுமில்லை.
கைபரின் இரண்டு பகுதிகளில் முந்திய பகுதியில்தான் மிகக் கடுமையான போர் நடந்தது.
மூன்று கோட்டைகளைக் கொண்ட இரண்டாவது பகுதியில் போர் வீரர்கள் அதிகமாக இருந்தும்
சண்டையின்றியே அவை முஸ்லிம்கள் வசம் வந்தன.
இஸ்லாமியப் படை முகாமிடுதல்
நபி (ஸல்) அவர்கள் படைக்கு முன் சென்று அப்படை முகாமிடுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு
செய்தார்கள். ஆனால் ‘ஹுபாப் இப்னு அல்முன்திர்’ (ரழி) என்ற தோழர், “அல்லாஹ்வின்
தூதரே! இந்த இடம் அல்லாஹ் உங்களைத் தங்க வைத்த இடமா? அல்லது உங்கள் யோசனைக்கிணங்க
தங்கியுள்ளீர்களா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “இல்லை! இது எனது யோசனையே”
என்றார்கள்.
அவர் “அல்லாஹ்வின் தூதரே! நாம் தங்கியிருக்கும் இந்த இடம் ‘நத்தா’ என்ற கோட்டைக்கு
மிக அருகில் உள்ளது. கைபரின் போர் வீரர்கள் அனைவரும் அதில்தான் இருக்கின்றனர்.
அவர்கள் நமது செயல் திட்டங்களைத் தெரிந்து கொள்வார்கள். நம்மால் அவர்களது
நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியாது. போன்போது அவர்களது அம்புகள் நாம் இருக்கும்
இடம் வரை வரும். ஆனால், நமது அம்புகள் அவர்களைச் சென்றடையாது. இரவிலும் அவர்கள்
நம்மைத் தாக்கக்கூடும். மேலும், இந்த இடம் பேரீச்சம் மரங்களின் மத்தியிலும்,
தாழ்வாகவும், சதுப்பு நிலமாகவும் உள்ளது. எனவே, எந்தவித இடையூறும் இல்லாத நல்ல
இடத்தை நாம் முகாமிடுவதற்கு தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) “நீங்கள் நல்ல ஆலோசனை கூறினீர்கள்” என்று கூறிவிட்டு வேறோர்
இடத்திற்கு தங்கள் முகாமை மாற்றிக் கொண்டார்கள்.