பக்கம் -85-

போருக்குத் தயாராகுதல், வெற்றிக்கான நற்செய்தி கூறுதல்

கைபருக்குள் நுழையுமுன் அன்றிரவு தங்கிய இடத்தில் “நிச்சயமாக நான் அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசிக்கும் ஒருவரிடம் நாளை கொடியைக் கொடுப்பேன். அவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புகிறார்கள். அல்லாஹ் அவரது கையால் வெற்றியளிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களெல்லாம் காலை விடிந்தவுடன் நபியவர்களிடம் ஒன்று கூடினர். ஒவ்வொருவரும் அந்தக் கொடி தனக்கே கொடுக்கப்பட வேண்டுமென விரும்பினர். ஆனால் நபியவர்கள், “அலீ இப்னு அபீதாலிப்” எங்கே என்று கேட்டார்கள்.

மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண் வலியாக இருக்கிறது” என்றனர். நபி (ஸல்) “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார்கள். அலீ (ரழி) அழைத்து வரப்பட்ட போது அவன் கண்ணில் தனது உமிழ் நீரைத் தடவி அவருக்காக அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அல்லாஹ்வின் அருளால் முற்றிலும் அவர் குணமடைந்து விட்டார். அவரிடம் கொடியைக் கொடுத்த போது அவர் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களும் நம்மைப் போன்று ஆகும் வரை நான் போர் புரியட்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “நீ நிதானத்துடன் சென்று அவர்களது முற்றத்தில் இறங்கு. பின்பு அவர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கொடு. அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையைப் பற்றி எடுத்துச் சொல். அல்லாஹ்வின் மீதாணையாக! உன் மூலமாக அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உமக்குச் சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதை விட மேலானதாகும்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

போர் தொடங்குதல், நாயிம் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

யூதர்கள் முஸ்லிம்களின் படையைப் பார்த்து விட்டு தங்களது நகரத்துக்குள் ஓடி, கோட்டைக்குள் ஒளிந்து கொண்டனர். எதிரிகளைக் கண்டவுடன் தடுப்பு நடவடிக்கையிலும், போருக்கான ஆயத்தங்களிலும் ஈடுபடுவது இயற்கையே. முஸ்லிம்கள் தாக்குதல் நடத்திய முதல் கோட்டை ‘நாயிம்’ என்ற கோட்டையாகும். இது ‘மர்ஹப்’ என்ற வீரமிக்க யூத மன்னனின் கோட்டை. “மர்ஹப் 1000 நபர்களுக்குச் சமமானவன்” என்று கூறப்பட்டு வந்தது. மேலும் இக்கோட்டையில் ராணுவத்தினர் அதிகமாக இருந்தனர். இது இஸ்லாமியப் படையை எதிர்ப்பதற்கு வசதியானதாக, உறுதியானதாக இருந்தது. எனவே, பல வகையிலும் ஏற்றமானதாக விளங்கிய இவ்விடத்தில் இருந்துகொண்டு தாக்குதல் நடத்த யூதர்கள் முதலில் திட்டமிட்டனர்.

இக்கோட்டைக்கருகில் அலீ (ரழி) முஸ்லிம்களுடன் சென்று யூதர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். ஆனால், முஸ்லிம்களின் அழைப்பை யூதர்கள் நிராகரித்துவிட்டு, தங்களது மன்னர் மர்ஹபுடன் சேர்ந்து முஸ்லிம்களை எதிர்க்கப் புறப்பட்டனர். அவன் போர் மைதானத்திற்கு வந்தவுடன் “தன்னுடன் தனியாக சண்டையிட யாராவது தயாரா?” என்று கொக்கத்தான்.

ஸலமா இப்னு அக்வா (ரழி) கூறுகிறார்கள்: “நாங்கள் கைபர் வந்த போது யூதர்களின் அரசன் தனது வாளை ஏந்தியவனாக

நானே மர்ஹப். இது கைபருக்குத் தெரியும்.
போர் உக்கிரமானால் நான் ஆயுதம் ஏந்திய வீர தீரன்.

என்று பாடிக்கொண்டு படைக்கு முன் வந்தான். அப்போது அவனை எதிர்த்துப் போரிட எனது தந்தையின் சகோதரர் ஆமிர் (ரழி),

நான் ஆமிர். கைபருக்குத் தெரியும்!
நான் ஆயுதம் ஏந்திய அஞ்சாநெஞ்சன்.

என்று பாடிக்கொண்டு முன்வந்தார். இருவரும் சண்டையிட்டதில் மர்ஹபின் வாள் ஆமின் கேடயத்தில் ஆழப்பதிந்து விட்டது. அப்போது ஆமிர் (ரழி) கேடயத்திற்குக் கீழிருந்து அவனை வெட்டுவதற்காக முயன்ற போது அவரது வாள் குட்டையாக இருந்ததால் மர்ஹபின் காலில் வெட்டுவதற்குப் பதிலாக இவரது காலில் வெட்டிவிட்டது. பின்பு அதே காயத்திலேயே அவர் மரணித்து விட்டார். இவரைப் பற்றி நபி (ஸல்) “தனது இரு விரல்களையும் ஒன்று சேர்த்தவர்களாக இவருக்கு இரு கூலிகள் உண்டு. நிச்சயமாக இவர் உயிரைப் பொருட்படுத்தாத வீரமிக்க தியாகியாவார். இவரைப் போன்ற வீரமிக்கவர் அரபியர்களில் மிகக் குறைவானவரே” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதற்குப் பின் மர்ஹப் மீண்டும் தன்னுடன் சண்டையிட தனது கவியைப் பாடிக்கொண்டே முஸ்லிம்களை அழைத்தான். அப்போது அவனுடன் சண்டையிட,

“என் அன்னை எனக்கு சிங்கமென பெயர் சூட்டினாள்!

காண அஞ்சும் கானகத்தில் சீறும் சிங்கத்தைப் போன்றவன் நான்!

இன்று மரக்காலுக்குப் பதிலாக ஈட்டியால்

அவர்களுக்கு அளந்து கொடுப்பேன்!”

என்ற பாடியவராக அலீ (ரழி) முன் வந்தார்கள். மர்ஹப் அலீயுடன் மோத, அலீ (ரழி) அவனது தலையைத் துண்டாக்கி விட்டார்கள். பின்பு அவன் மூலமாகவே அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.

அலீ (ரழி) அவர்கள் யூதர்களின் கோட்டைக்கு மிக அருகில் சென்றுவிட்ட போது கோட்டையின் மேலிருந்து ஒருவன் “நீ யார்?” என்றான். அதற்கு “நான் அலீ இப்னு அபீதாலிப்” என்று பதில் கூறினார்கள். அப்போது அந்த யஹுதி “மூஸாவிற்கு இறக்கப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக! நீங்கள் வெற்றி கொள்வீர்கள்” என்றான்.

இதற்குப் பின் மர்ஹபின் சகோதரன் யாசிர் “என்னுடன் சண்டை செய்பவன் யார்?” என்று கொக்கரித்தவனாக படைக்கு முன் வந்தான். ஜுபைர் (ரழி) அவனை எதிர்க்கத் தயாரானார். அதைப் பார்த்த அன்னாரின் தாயார் ஸஃபியா (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது மகனைக் கொன்று விடுவானே” என்று கலங்கினார். அதற்கு நபி (ஸல்) “இல்லை உமது மகன் தான் அவனைக் கொல்வார்” என்று கூறினார்கள். அவ்வாறே ஜுபைர் (ரழி) அவனைக் கொன்றார்கள். இவ்வாறு அன்று முழுவதும் நாயிம் கோட்டையைச் சுற்றிக் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. யூதர்களின் பல தலைவர்கள் கொல்லப்பட்டதால் அவர்களின் வீரம் குறைந்து துவண்டு விட்டனர். எனினும், போர் மிகக் கடுமையாக பல நாட்கள் நீடித்தது. இறுதியில் முஸ்லிம்களை எதிர்க்க முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொண்ட யூதர்கள் அந்தக் கோட்டையிலிருந்து இரகசியமாக வெளியேறி ‘ஸஅப்’ என்ற கோட்டையில் நுழைந்து கொண்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் நாயிம் கோட்டையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தார்கள்.

ஸஅப் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

நாயிம் கோட்டைக்கு அடுத்து இக்கோட்டை மிகவும் பலமுள்ளதாக, வலிமை மிக்கதாக இருந்தது. அல் ஹுபாப் இப்னு அல் முன்திர் அல் அன்ஸா (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் இக்கோட்டையை முஸ்லிம்கள் மூன்று நாட்கள் முற்றுகையிட்டனர். மூன்றாவது நாள் இக்கோட்டையை வெற்றி கொள்வதற்காக நபி (ஸல்) தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்தார்கள்.

இதைப் பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) விவரிக்கிறார்:

அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஸஹ்ம் கிளையினர் நபியவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மிகச் சிரமத்திற்குள்ளாகி விட்டோம். எங்களது கையில் ஒன்றுமே இல்லை” என்று முறையிட்டார்கள். அதாவது, தங்களது இயலாமையையும், பசியையும் இவ்வாறு நபியவர் களிடம் வெளிப்படுத்தினார்கள். இந்த கிளையினர்தான் கோட்டையை வெற்றி கொள்வதற்காக அனுப்பப்பட்ட படைகளில் முக்கியப் பங்காற்றினார்கள். அவர்களின் இந்த கோரிக்கைக்கிணங்க “அல்லாஹ்வே! நிச்சயமாக இவர்களின் நிலைமையை நீ நன்கு அறிந்திருக்கிறாய். அவர்களிடம் எவ்வித ஆற்றலும் இல்லையென்பதையும், அவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை என்பதையும் நீ நன்கறிந்திருக்கிறாய். எனவே, கைபரின் கோட்டைகளில் அதிக செல்வமும் உணவுப் பொருட்களும் நிறைந்த கோட்டையை வெற்றி கொள்ள இவர்களுக்கு உதவுவாயாக” என நபி (ஸல்) பிரார்த்தனை புரிந்தார்கள். நபியவர்களின் இப்பிரார்த்தனைக்குப் பின்பு முஸ்லிம்கள் அக்கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். கைபரிலுள்ள கோட்டைகளில் ‘ஸஅப்’ கோட்டையில்தான் அதிகச் செல்வங்களும் உணவுகளும் இருந்தன.

நபி (ஸல்) இக்கோட்டையின் மீது தாக்குதல் நடத்த முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி அழைத்துச் சென்றார்கள். இதில் அஸ்லம் கிளையினர், படைக்கு முதல் வரிசையில் இருந்தனர். கோட்டைக்கு வெளியில் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடுமையான தாக்குதல் மாலை வரை நீடித்தது. இறுதியாக, சூரியன் மறைவதற்கு சற்று முன் அக்கோட்டையை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர். அக்கோட்டையில் இருந்த மின்ஜசனீக்” கருவிகளையும், இக்கால பீரங்கி போன்ற கருவிகளையும் முஸ்லிம்கள் கைப்பற்றினர். இப்போல் ஏற்பட்ட கடுமையான பசியின் காரணமாக படையில் இருந்த சில வீரர்கள் கழுதையை அறுத்து சமைப்பதற்கு அடுப்பை மூட்டினர். இதை அறிந்த நபி (ஸல்) “நாட்டுக் கழுதைகளை அறுக்க வேண்டாம்” என தடை விதித்தார்கள்.

ஜுபைர் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

நாயிம், ஸஅப் ஆகிய கோட்டைகளை வெற்றி கொண்டதற்குப் பின் நதா பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேறி ஜுபைர் கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். இக்கோட்டை ஒரு மலை உச்சியில் அமைந்திருந்ததுடன், மிக வலிமை மிக்கதாகவும் இருந்தது. அம்மலை மீது குதிரை வீரர்களோ காலாட் படையினரோ ஏறிச் செல்வது சிரமமாக இருந்தது. எனவே, நபி (ஸல்) அவர்கள் அக்கோட்டையை முற்றுகையிடுவதில் ஈடுபட்டார்கள். இந்த முற்றுகை மூன்று நாட்கள் நீடித்தது.

அப்போது யூதர்களில் ஒருவன் நபியவர்களிடம் வந்து “ஓ அபுல் காசிமே! நீங்கள் இவ்வாறு ஒரு மாத காலம் இவர்களை முற்றுகையிட்டாலும் இவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனெனில், இப்பூமிக்கு கீழ் அவர்கள் குடிப்பதற்குத் தேவையான நீர் ஊற்றுகள் இருக்கின்றன. அவர்கள் இரவில் கோட்டையிலிருந்து வெளியேறி தேவையான நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் கோட்டைக்குள் சென்று விடுகின்றனர். எனவே, இவர்கள் தண்ணீர் பிடிக்க வருவதை தடுத்தால் தான் மைதானத்தில் உங்களுடன் போர் செய்ய இறங்குவார்கள்” என்று ஆலோசனைக் கூறினார். அவன் யோசனைக்கிணங்க நபியவர்கள் தண்ணீர் எடுக்க வருவதைத் தடுத்து விட்டார்கள். இதனால் யூதர்கள் கோட்டையிலிருந்து வெளியேறி, முஸ்லிம்களுடன் கடுமையான யுத்தம் புரிந்தார்கள். போரில் சில முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் பத்து யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் கோட்டையை வெற்றி கொண்டனர்.

உபை கோட்டையை வெற்றி கொள்ளுதல்

ஜுபைர் கோட்டையை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின் அங்கிருந்து யூதர்கள் வெளியேறி உபை கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்கள் அக்கோட்டையை முற்றுகையிட்டனர். இரண்டு யூதர்கள் ஒருவர்பின் ஒருவராக “தன்னிடம் சண்டை செய்பவர்கள் யார்?” என்று மைதானத்தில் இறங்கினர். அவ்விருவரையும் முஸ்லிம் வீரர்கள் வெட்டிச் சாய்த்தனர். அதில் இரண்டாவதாக வந்த யஹுதியைச் சிவப்பு தலைப்பாகை உடைய அபூதுஜானா ஸிமாக் இப்னு கரஷா (ரழி) என்ற வீரத்தில் பிரசித்தி பெற்ற நபித்தோழர் வெட்டி வீழ்த்தினார். இரண்டாவது வீரனை வெட்டிய பின் அபூதுஜானா (ரழி) கோட்டைக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் முஸ்லிம் வீரர்களும் அதற்காக முயற்சித்தனர். அந்நேரத்தில் கடுமையான போர் நடைபெற்றது. பின்பு அங்கிருந்து யூதர்கள் தப்பித்து ‘நஜார்’ கோட்டைக்குச் சென்றனர். பிறகு இந்த உபை கோட்டையும் முஸ்லிம்கள் வசமானது.