பக்கம் -88-

அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும் (ஹிஜ்ரி 7)

தாதுர் ரிகா

இஸ்லாமிற்கு எதிரான மூன்று மாபெரும் ராணுவங்களில் பலம் வாய்ந்த இரண்டு ராணுவங்களை முற்றிலும் முறியடித்ததற்குப் பின் மூன்றாவது எதிரியின் பக்கம் தங்களது கவனத்தை முழுமையாகத் திருப்பினார்கள். நஜ்தின் கிராமப்புறங்களில் பரவியிருந்த நாடோடி வம்பர்களான அரபிகளே அந்த மூன்றாவது எதிரிகள். அந்த அரபிகள் சந்தர்ப்பங்களையும் அவகாசங்களையும் எதிர்பார்த்திருந்து அவ்வப்போது மதீனாவின் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது, திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நாடோடிகள் ஒரு குறிப்பிட்ட ஊரிலோ நகரத்திலோ வசிக்கவில்லை. இவர்களது இல்லங்கள் பெரும் கோட்டைகளோ அரண்களோ இல்லை. மாறாக, முகவரியின்றி, பாலை வனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த காரணத்தால் இவர்களை அடக்குவதோ, இவர்களின் அட்டூழியத்தை அணைப்பதோ, முந்திய இரு எதிரிகளை அடக்கியதைவிட சற்றுச் சிரமமாகவே இருந்தது. ஆகவே, அவர்களை அச்சுறுத்தும் படி தாக்குதல்கள் நடத்துவது அவசியமாயிற்று. அதைத் தவிர வேறு நடவடிக்கை ஏதும் அவர்களுக்குப் பலனளிப்பதாக இல்லை. அதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது பலமுறை திடீர் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த அரபிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக நபியவர்கள் எடுத்த ஒரு போர் நடவடிக்கைக்கு “தாதுர் ரிகா” என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் நான்காம் ஆண்டு நடந்தது என்று கூறுகின்றனர். ஆனால், இப்போல் அபூ மூஸா அஷ்அரி (ரழி) மற்றும் அபூஹுரைரா (ரழி) கலந்து கொண்டதிலிருந்து இப்போர் கைபர் போருக்கு பின்னர்தான் நடந்தது என்று உறுதியாக சொல்ல முடிகிறது. ஆகவே, ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில்தான் இது நடந்திருக்க வேண்டும்.

இப்போர் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது: கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த அன்மார், ஸஅலபா மற்றும் முஹாப் ஆகிய இம்மூன்று கிளையினரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்கத் தயாராகின்றனர் என்று நபியவர்களுக்குத் தெரிந்தவுடன் 400 அல்லது 700 தோழர்களை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். மதீனாவில் அபூதர் அல்லது உஸ்மானைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். தங்களது படையுடன் அவர்களது ஊர்களுக்குள் நீண்ட தூரம் வரை நபி (ஸல்) ஊடுருவிச் சென்றார்கள். மதீனாவிலிருந்து இரண்டு நாட்கள் பிரயாண தூரமுள்ள ‘நக்ல்’ என்ற இடத்தை அடைந்தார்கள். அங்குக் கத்ஃபான் கிளையினரின் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்து ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக ஆகி, ஒருவர் மற்றவரை அச்சுறுத்திக் கொண்டனர். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. எனினும், நபி (ஸல்) அன்றைய பொழுது ‘ஸலாத்துல் கவ்ஃப்“” முறைப்படி அனைத்து தொழுகைகளையும் தொழ வைத்தார்கள்.

ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: (படை இரண்டாக பிரிக்கப்பட்டது) தொழுகைக்கு இகாமத் சொல்லப்படவே நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரிவினருக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்தினார்கள். இரண்டு ரக்அத்துகளை முடித்துக் கொண்டு அப்பிரிவினர் பாதுகாப்பிற்குச் சென்றுவிட, மற்றொரு பிரிவினர் பிந்திய இரண்டு ரக்அத்தில் நபியுடன் சேர்ந்து தொழுதனர். ஆக, நபி (ஸல்) நான்கு ரக்அத்தும், மற்ற இரண்டு பிரிவினரும் இரண்டு இரண்டு ரக்அத்துகள் தொழுதனர் (ஸஹீஹுல் புகாரி)

அபூ மூஸா அஷ்அ (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இப்போருக்காக புறப்பட்டோம். ஓர் ஒட்டகத்தில் ஆறு நபர்கள் வீதம் மாறி மாறி சவாரி செய்தோம். இதனால் எங்களது கால்கள் வெடித்து விட்டன. எனது கால்களிலும் வெடிப்பு ஏற்பட்டு நகங்கள் எல்லாம் பெயர்ந்து விட்டன. அதனால் துண்டுத் துணிகளை எடுத்து எங்களது கால்களைச் சுற்றிக் கொண்டோம். எனவேதான் இப்போருக்குப் பெயர் ‘தாதுர் கா’ (துண்டுத் துணிகள் உடையது) என்று அழைக்கப்பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘தாத்துர் கா’ போருக்கு சென்றிருந்தோம். ஓர் அடர்த்தியான நிழல் தரும் மரத்தருகில் வந்த போது அதில் நபி (ஸல்) ஓய்வு எடுப்பதற்காக ஏற்பாடு செய்தோம். மக்கள் பிரிந்து சென்று ஆங்காங்கிருந்த மற்ற மர நிழல்களில் ஓய்வெடுக்க, நபி (ஸல்) அவர்கள் ஒரு மரநிழலில் தங்கினார்கள். அம்மரத்தில் தனது வாளைத் தொங்க விட்டுவிட்டு அதன் நிழலில் தூங்கினார்கள். நாங்களும் சிறிது தூங்கினோம். ஒரு முஷ்ரிக் அங்கு வந்து நபியின் வாளை உருவிக் கொண்டார். நபி (ஸல்) கண் விழித்து பார்த்தபோது “நீ எனக்குப் பயப்படுகிறாயா?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) “இல்லை” என்றார்கள். அவர் “யார் உன்னை என்னிடமிருந்து பாதுகாக்க முடியும்!” என்றார். நபியவர்கள் “அல்லாஹ்” என்றார்கள். இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் நபியவர்களிடம் சென்ற போது அங்கு கிராமவாசி ஒருவர் உட்கார்ந்திருந்தார். நபியவர்கள் “நான் தூங்கிக் கொண்டிருந்த போது எனது வாளை இவர் எடுத்துக் கொண்டார். நான் விழித்துப் பார்த்தபோது அது அவரது கையில் உருவப்பட்ட நிலையில் இருந்தது. இவர் “உன்னை என்னிடமிருந்து யார் பாதுகாப்பார்?” என்று கேட்டார். “அல்லாஹ்” என்று நான் கூறினேன். இதோ... அவர் உட்கார்ந்து இருக்கிறார் என்று நபி (ஸல்) கூறினார்கள். அவரைத் தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். (முக்தஸர் ஸீரத்திர்ரஸூல்)

இச்சம்பவத்தைப் பற்றி வரும் மற்றொரு அறிவிப்பில் வருவதாவது, “அல்லாஹ்” என்று நபி (ஸல்) பதில் கூறியவுடன் அவரது கையிலிருந்து வாள் வீழ்ந்துவிட்டது. அதை நபி (ஸல்) எடுத்துக் கொண்டு “என்னிடமிருந்து உன்னை யார் பாதுகாப்பார்?” என்று கேட்டார்கள். அவர் “வாளை எடுத்தவர்களில் சிறந்தவராக நீங்கள் இருங்கள்” என்றார். “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சான்று கூறுவாயா?” என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டார்கள். அவர் “நான் உங்களிடம் போர் செய்யவோ, உங்களிடம் போர் புரியும் கூட்டத்தினருடன் சேரவோ மாட்டேன் என்று நான் உங்களிடம் ஒப்பந்தம் செய்கிறேன்” எனக் கூறினார். நபி (ஸல்) அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். அவர் தனது கூட்டத்தனரிடம் சென்று “நான் மக்களில் சிறந்தவரிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறினார். (ஃபத்ஹுல் பாரி, முக்தஸர் ஸீரத்திர்ரஸூல்)

“இந்த கிராமவாசியின் பெயர் கவ்ரஸ் இப்னு ஹாரிஸ்” என்று ஸஹீஹுல் புகாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிஞர் வாகிதியின் நூலில் “இந்த கிராமவாசியின் பெயர் துஃஸூர் இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்து வேற்றுமைக்கு ஸஹீஹுல் புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர் “இரண்டும் வெவ்வேறு நிகழ்ச்சிகளாக இருக்கலாம்” என்று விளக்கம் அளிக்கிறார். அல்லாஹ்வே மிக அறிந்தவன். (ஃபத்ஹுல் பாரி)

இப்போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் இணைவைப்பாளர் ஒருவன் மனைவியை முஸ்லிம்கள் சிறை பிடித்தனர். அவளது கணவன் “அதற்குப் பகரமாக ஒரு நபித்தோழரைக் கொல்வேன்” என்று நேர்ச்சை செய்து கொண்டு, இரவில் முஸ்லிம்கள் இருந்த இடம் நோக்கி வந்தான். நபி (ஸல்) முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவும் எதிரிகளைக் கண்காணிப்பதற்காகவும் அப்பாது இப்னு பிஷ்ர், அம்மார் இப்னு யாஸிர் (ரழி) ஆகிய இரு வீரர்களை நியமித்தார்கள். அப்பாது (ரழி) தொழுகையில் ஈடுபட்டார்கள். (அம்மார் (ரழி) தூங்கி விட்டார்) அப்போது அவன் அப்பாத் (ரழி) அவர்களை நோக்கி அம்பெறிந்தான். அவர் அதை பிடுங்கி எறிந்துவிட்டு தொழுகையை முறிக்காமல் தொடர்ந்தார்கள். இவ்வாறு மூன்று அம்புகள் எறிந்தும் தொழுகையை முறிக்கவில்லை. இறுதியாக ஸலாம் கொடுத்த பின்னர் தனது தோழரை எழுப்பினார். அவர் “ஸுப்ஹானல்லாஹ்! என்னை நீங்கள் எழுப்பியிருக்கலாமே?” என்றார். அதற்கு அவர் “நான் ஒரு சூராவை ஓதிக்கொண்டு இருந்தேன். அதை உடனே முறிப்பதை விரும்பவில்லை” என்றார். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

வம்பர்களாக இருந்து வந்த கிராமப்புற அரபுகளின் உள்ளங்களில் இப்போர் பெரும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது. இப்போருக்குப் பின் நபி (ஸல்) அனுப்பிய படையெடுப்புகளின் விவரங்களை நாம் அலசிப்பார்க்கும் போது இப்போருக்குப் பின் கத்ஃபான் கிளையினர் முற்றிலும் துணிவை இழந்து, சிறிது சிறிதாகப் பணிந்து, இறுதியில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்தக் கிராமவாசிகளில் பல குடும்பத்தினர், நபி (ஸல்) அவர்களுடன் மக்காவை வெற்றி கொள்ள வந்தனர். அதற்குப் பிறகு ஹுனைன் போரிலும் கலந்து கொண்டனர். அதன் கனீமத்தும் இவர்களுக்குக் கிடைத்தது. மக்கா வெற்றிக்குப் பின் இவர்களிடம் ஜகாத் வசூல் செய்ய நபி (ஸல்) தங்களது ஆட்களை அனுப்பினார்கள். அவர்களும் ஜகாத்தை நிறைவேற்றினார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம்.

ஆகவே, இதன் மூலம் அகழ் போரில் கலந்து கொண்ட மூன்று எதிரி ராணுவங்களையும் நபி (ஸல்) தோற்கடித்து விட்டார்கள். மதீனாவிலும், சுற்றுப்புறங்களிலும் அமைதியும் பாதுகாப்பும் நிலவியது. இதற்குப் பின் சில பகுதிகளில் கோத்திரங்கள் சிலவற்றால் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளைத் தீர்க்க முஸ்லிம்கள் ஆற்றல் பெற்றனர். உள்ளுக்குள் பிரச்சனைகள் முடிவடைந்து, நிலைமைகள் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக மாறுமளவு முன்னேறிவிட்டதால் இப்போருக்குப் பின் பல பெரிய நாடுகளையும், நகரங்களையும் வெற்றி கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.

இப்போரிலிருந்து திரும்பிய பின் மதீனாவில் நபி (ஸல்) ஹிஜ்ரி 7, ஷவ்வால் வரை தங்கி இருந்தார்கள். அக்காலக் கட்டத்தில் பல படைப் பிரிவுகளை நபி (ஸல்) பல இடங்களுக்கு அனுப்பினார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:

1) காலிப் இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு

ம்குதைத்’ என்ற இடத்தில் வசிக்கும் ‘முலவ்விஹ்’ என்ற கூட்டத்தார், பஷீர் இப்னு சுவைத் (ரழி) எனும் நபித்தோழன் அன்பர்களைக் கொன்று விட்டனர். அக்கூட்டத்தாரைப் பழி தீர்க்க ஹிஜ்ரி 7, ஸஃபர் அல்லது ரபிஊல் அவ்வல் மாதத்தில் காலிப் இப்னு அப்துல்லாஹ் (ரழி) தலைமையில் குதைத் நோக்கி ஒரு படையை நபி (ஸல்) அனுப்பினார்கள்.

இப்படை இரவு நேரத்தில் சென்று அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்றுவிட்டு கால்நடைகளை ஓட்டி வந்தனர். விழித்துக் கொண்ட எதிரிகள் பெரும் படையை திரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கப் பின்தொடர்ந்தனர். மிகச் சமீபத்தில் எதிரிகள் வந்துவிட்ட பொழுது கடுமையான மழை ஒன்றை அல்லாஹ் இறக்கினான். சிறிது நேரத்தில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதும் எதிரிகளிடமிருந்து முஸ்லிம்கள் தப்பித்து மதீனா வந்து சேர்ந்தனர்.

2)ஹிஸ்மா படைப் பிரிவு

ஹிஜ்ரி 7, ஜுமாதல் ஆகிராவில் இப்படை அனுப்பப்பட்டது. “அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்” என்ற தலைப்பின் கீழ் இப்படையெடுப்பின் விவரங்கள் கூறப்பட்டு விட்டன.

3) உமர் இப்னு கத்தாப் படைப் பிரிவு

ஹிஜ்ரி 7, ஸஅபான் மாதத்தில் முப்பது நபர்களுடன் உமர் (ரழி) அவர்களை ‘துர்பா’ என்ற இடத்துக்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படை இரவில் பயணிப்பதும் பகலில் மறைந்திருப்பதுமாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்தது. துர்பாவில் வசித்து வந்த ஹவாஸின் கிளையினருக்கு இச்செய்தி எட்டியவுடன் இடங்களைக் காலி செய்து தப்பித்து ஓடிவிட்டனர். உமர் (ரழி) தங்கள் படையுடன் அங்கு சென்று பார்த்த பொழுது யாரும் இல்லாததால் மீண்டும் மதீனாவிற்குத் திரும்பி விட்டார்கள்.

4) பஷீர் இப்னு ஸஅது படைப் பிரிவு

ஹஜ் 7, ஷஅபான் மாதத்தில் பஷீர் (ரழி) அவர்களை முப்பது வீரர்களுடன் நபி (ஸல்) ‘ஃபதக்’ மாநிலத்தின் ஓர் எல்லையில் வசிக்கும் முர்ரா கிளையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனுப்பி வைத்தார்கள். இப்படை அங்கு சென்று தாக்குதல் நடத்தி, அவர்களின் கால்நடைகளை எல்லாம் ஓட்டிக் கொண்டு திரும்பினர். இரவு நேரத்தில் எதிரிகள் படையாக வந்து இவர்களுடன் போர் புரிந்தனர். பஷீர் (ரழி) அவர்களும் அவருடைய தோழர்களும் எதிரிகளை அம்பால் எறிந்து தாக்கினர். இவர்களின் அம்புகள் அனைத்தும் தீர்ந்து விட்டன. இறுதியாக நடந்த வாள் சண்டையில் பஷீரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். பஷீர் (ரழி) தனக்கு ஏற்பட்ட காயங்களுடன் அங்கிருந்து ஃபதக்குக்குச் சென்றார். காயங்கள் குணமாகும் வரை யூதர்களிடம் தங்கியிருந்து விட்டு மதீனா வந்து சேர்ந்தார்.

5) காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு

ஹிஜ்ரி 7, ரமழான் மாதத்தில் 130 வீரர்களுடன் ‘மைஃபஆ’ என்ற இடத்திலுள்ள உவால், அப்து இப்னு ஸஅலபா ஆகியோர் மீது தாக்குதல் நடத்த காலிப் இப்னு அப்துல்லாஹ்வுடன் ஒரு படையை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அந்தப் படை எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி எதிர்த்தவர்களைக் கொன்றுவிட்டு கால்நடைகளை ஓட்டி வந்தனர். இப்படையெடுப்பின் போதுதான் ‘நஹ்க் இப்னு மிர்தாஸ்’ என்பவர் கலிமாவை மொழிந்தும் உஸாமா இப்னு ஸைது (ரழி) என்ற நபித்தோழரால் கொல்லப்பட்டு விட்டார். படை மதீனா வந்தடைந்ததும் அச்செய்தி நபியவர்களுக்குத் தெரிய வரவே “லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறிய பின்னரா நீ அவரைக் கொலை செய்தாய்?” எனக் கோபத்துடன் கேட்டார்கள். அதற்கு, “தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அதைக் கூறினார்” என்று உஸாமா (ரழி) பதிலளிக்க, “அவர் உண்மையாளரா? பொய்யரா? என நீ அறிய அவரது உள்ளத்தை பிளந்து பார்த்தாயா?” என்று நபி (ஸல்) வன்மையாகக் கண்டித்தார்கள்.

6) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா படைப் பிரிவு

அஸீர் இப்னு ஜாம் அல்லது பஷீர் இப்னு ஜாம் என்பவர் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த சில கத்ஃபானியரை ஒன்று சேர்க்கிறார் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதனால் நபி (ஸல்) ஹிஜ்ரி 7, ஷவ்வால் மாதத்தில் 30 வீரர்களை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) தலைமையில் கைபரை நோக்கி அனுப்பி வைத்தார்கள். இப்படை அஸீடம் வந்து எங்களுடன் “நீர் உமது தோழர்களுடன் வாரும் நபி (ஸல்) உம்மையே கைபருக்கு ஆளுநராக ஆக்கி விடுவார்கள் என்று ஆசை வார்த்தைக் கூறினர். அவரும் தயாராகவே, அஸீரையும் அவரது 30 தோழர்களையும் அழைத்துக் கொண்டு அப்துல்லாஹ் மதீனா நோக்கிப் புறப்பட்டார். வழியில் ‘கற்கறா நியார்’ என்ற இடத்தில் தங்கியிருந்தபோது இரு கூட்டத்தினருக்குமிடையில் பிரச்சனை வரவே, அஸீரையும் அவரது 30 தோழர்களையும் முஸ்லிம்கள் கொன்று விட்டனர். வரலாற்று ஆசிரியரான வாக்கிதி, “ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதம் கைபர் போர் நடப்பதற்கு சில மாதங்கள் முன்னதாக இச்சம்பவம் நடந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

7) பஷீர் இப்னு ஸஅத் படைப் பிரிவு

300 வீரர்களுடன் பஷீர் இப்னு ஸஅதை யமன், ஜபார் என்ற இடங்களுக்கு நபி (ஸல்) அனுப்பினார்கள். இவை கத்ஃபான் கிளையினருக்குச் சொந்தமான இடங்களாகும். சிலர் இந்த இடம் பஜாரா மற்றும் உத்ரா கிளையினருக்குச் சொந்தமான இடம் என்றும் கூறுகின்றனர். பல இடங்களிலிருந்து வந்து ஒன்றுகூடி மதீனாவைத் தாக்க இருந்தவர்களை எதிர்ப்பதற்காக இப்படை புறப்பட்டது. இரவில் பயணித்தும் பகலில் மறைந்திருந்தும் இவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். பஷீன் வருகையை அறிந்த எதிரிகள், இடங்களைக் காலிசெய்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பஷீர் (ரழி) அங்கு சென்று எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு இருவரையும் கைது செய்து மதீனா திரும்பினார். கைதிகள் இருவரும் மதீனா வந்ததும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர்.

8) அபூ ஹத்ரத் படைப் பிரிவு

“ஜுஸம் இப்னு முஆவியா கிளையைச் சேர்ந்த ஒருவன் பெரும் கூட்டத்தை அழைத்துக் கொண்டு ‘காபா’ என்ற இடத்திற்கு வந்திருக்கிறான், அங்கிருக்கும் கைஸ் கிளையினருடன் சேர்ந்து முஸ்லிம்களின் மீது போர் தொடுக்க உள்ளான்” என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அதை விசாரித்து உறுதியான செய்தியை அறிந்து வர, அபூ ஹத்ரதையும் (ரழி) அவருடன் இரண்டு தோழர்களையும் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அபூ ஹத்ரத் (ரழி) சூரியன் மறையும் நேரத்தில் காபா வந்து சேர்ந்தார். அவர் ஊரின் ஓர் ஓரத்தில் மறைந்து கொண்டு மற்ற இரு தோழர்களை மற்றொரு புறத்தில் மறைந்து கொள்ளும்படிக் கூறினார். அன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்த அக்கூட்டத்தினரின் இடையர் வருவதற்கு தாமதமானது. நன்கு இருட்டிய பின்பு அந்த இடையரைத் தேடி அக்கூட்டத்தின் தலைவர் தனியாகப் புறப்பட்டார். அத்தலைவர் அருகில் வந்த போது அபூ ஹத்ரத் (ரழி) அவரது நெஞ்சை குறிவைத்து அம்பெறிந்தார். அம்பு குறி தவறாது நெஞ்சைத் துளைக்கவே, அவர் எந்தவித சப்தமுமின்றி இறந்து விட்டார்.

அவன் தலையைக் கொய்து, அக்கூட்டத்தினர் தங்கியிருந்த ராணுவ முகாம் அருகே அபூ ஹத்ரத் (ரழி) கட்டித் தொங்க விட்டார். பின்பு பெரும் சப்தத்துடன் தக்பீர் முழங்கினார். அவன் சப்தத்தைக் கேட்ட மற்ற இரு தோழர்களும் உரத்த குரலில் தக்பீர் முழங்கினர். இதனைச் செவிமடுத்து, தொங்கும் தலையையும் பார்த்தவுடன் கூட்டத்தினர் தலை தெறிக்க ஓடினர். இந்த மூன்று முஸ்லிம்கள் அதிகமான ஒட்டகங்களையும் ஆடுகளையும் ஓட்டிக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர். இப்படையெடுப்பு அடுத்துக் கூறப்பட உள்ள “உம்ரத்துல் கழா”வுக்கு முன்பதாக நடந்தது என்று இப்னுல் கைய்” (ரஹ்) குறிப்பிடுகின்றார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)