பக்கம் -87-

ஸஃபிய்யாவுடன் திருமணம்

இவன் கணவர் கினானா இப்னு அபூ ஹுகைக் மோசடி செய்த குற்றத்தால் கொல்லப்பட்டார். ஆகவே, இவர் கைதியானார். கைதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். திஹ்யா இப்னு கலீஃபா (ரழி) என்ற தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்!” என்று கூறினார்கள். அவர் கைதிகளிலிருந்த ஸஃபிய்யா பின்த் ஹையை அழைத்துச் சென்றார்.

அதைப் பார்த்த மற்றொரு தோழர் நபியவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! குரைளா, நளீர் ஆகிய இரண்டு கிளையினருக்கும் தலைவியான ஸஃபிய்யாவை நீங்கள் திஹ்யாவிற்கு கொடுத்தீர்களா? அப்பெண் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தகுதியானவரல்ல” என்று கூறினார். அதற்கு நபியவர்கள் “அவரை ஸஃபிய்யாவுடன் அழைத்து வாருங்கள்” என்றார்கள். திஹ்யா ஸஃபிய்யாவுடன் வரவே நபி (ஸல்) ஸஃபிய்யாவைப் பார்த்தார்கள். பின்பு திஹ்யாவிடம் “கைதிகளில் வேறொரு பெண்ணை நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அதற்குப் பின் ஸஃபிய்யாவுக்கு இஸ்லாமைப் பற்றி எடுத்துக் கூற, அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களை உரிமைவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவரை உரிமைவிட்டதையே அவருக்குரிய மஹராக” ஆக்கினார்கள்.

நபி (ஸல்) மதீனா திரும்பும் வழியில் ‘ஸத்துஸ்ஸஹ்பா’ என்ற இடத்தில் ஸஃபிய்யா (ரழி) துடக்கிலிருந்து தூய்மையடைந்தார்கள். உம்மு ஸுலைம் (ரழி) ஸஃபிய்யாவை அலங்கரித்து இரவில் நபியவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். மறுநாள் பேரீத்தம் பழம், நெய், மற்றும் சத்துமாவினால் செய்யப்பட்ட ஒருவகை பாயாசத்தைக் கொண்டு நபி (ஸல்) வலிமா” விருந்து அளித்தார்கள். மூன்று நாட்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களுடன் நபி (ஸல்) தங்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)

நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து “இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழுநிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து, மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது” என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

நஞ்சு கலந்த உணவு

கைபரை முழுமையாக வெற்றி கொண்டு நபி (ஸல்) அவர்கள் முழு நிம்மதி அடைந்தார்கள். அப்போது ஸல்லாம் இப்னு மிஷ்கம் என்பவனின் மனைவி ‘ஜைனப் பின்த் ஹாரிஸ்’ என்பவள், நபி (ஸல்) அவர்களுக்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்தாள். விருந்தில் ஓர் ஆட்டை விஷத்துடன் சமைத்தாள். குறிப்பாக, நபி (ஸல்) அவர்கள் விரும்பி உண்ணும் பகுதி முன் சப்பை என்பதை தெரிந்து அதிலே அதிக விஷத்தை ஏற்றினாள்.

நபியவர்கள் அதிலிருந்து ஒரு துண்டை எடுத்துக் கடித்தார்கள். ஆனால் அதை விழுங்காமல் துப்பிவிட்டார்கள். “இந்த எலும்பு தன்னில் விஷமேற்றப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறுகிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அப்பெண்ணை அழைத்து விசாரிக்கவே அவள் உண்மையை ஒப்புக் கொண்டாள். “இவ்வாறு செய்ததற்கான காரணம் என்ன?” என்று நபி (ஸல்) விசாரித்தார்கள். அதற்கு அவள், “நீங்கள் அரசராக இருந்தால் உங்களைக் கொல்வதில் எங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம். நீங்கள் தூதராக இருந்தால் உண்மை உங்களுக்கு தெரிந்து விடும். அதனால்தான் அவ்வாறு செய்தேன்” என்று கூறினாள். நபியவர்கள் அவளை மன்னித்து விட்டு விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் பிஷ்ர் இப்னு பரா (ரழி) என்ற தோழரும் சாப்பிட்டார். அவர் அந்த ஆட்டிலிருந்து ஒரு துண்டை முழுமையாகச் சாப்பிட்டதால் அந்த விஷம் அவரது உடலில் கலந்து மரணித்து விட்டார்.

அப்பெண் முற்றிலும் மன்னிக்கப்பட்டாளா? அல்லது கொல்லப்பட்டாளா? என்பதைப் பற்றி பல மாறுபட்ட அறிவிப்புகள் வந்துள்ளன.

இதைப் பற்றி அறிஞர்கள் கூறுவதாவது: நபியவர்கள் ஆரம்பத்தில் அப்பெண்ணை மன்னித்து விட்டார்கள். அடுத்து, அவள் தந்த விஷத்தால் பிஷ்ர் (ரழி) இறந்துவிடவே அவளைக் கொல்லும்படி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

இப்போரில் முஸ்லிம்களில் பதினாறு நபர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் நான்கு நபர்கள் குறைஷிகள். ஒருவர் அஷ்ஜாஃ கிளையைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் அஸ்லம் கிளையைச் சேர்ந்தவர், மற்றொருவர் கைபரைச் சேர்ந்தவர். மீதமுள்ள 9 பேர்கள் அன்சாரிகளாவர். சிலர் முஸ்லிம்களில் கொல்லப்பட்டவர்கள் பதினேழு பேர்கள் என்றும் கூறுகின்றனர்.

அறிஞர் மன்சூர்ஃபூ (ரஹ்) கூறுவதாவது: “ஷஹீதானவர்கள் மொத்தம் பத்தொன்பது நபர்களே. நான் பல மூல நூல்களை ஆராய்ச்சி செய்து பார்த்த போது இப்போல் கொல்லப்பட்டவர்களின் 23 பெயர்களைப் பார்த்தேன். அதாவது, அந்த 23 பெயர்களில் ஒரு பெயர் ‘தப்ரி“யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. இன்னும் ஒரு பெயர் ‘வாகிதி“யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. மற்றொருவர் சமைக்கப்பட்ட ஆட்டை சாப்பிட்டு மரணித்தவராவார். மற்றொருவர் பத்ரில் கொல்லப்பட்டாரா? அல்லது கைபரில் கொல்லப்பட்டாரா? என்பது பற்றி இரு கருத்துகள் உள்ளன. ஆனால், அதில் சரியானது அவர் பத்ரில் கொல்லப்பட்டார் என்பதுதான். ஆகவே, முஸ்லிம்களில் 19 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதுவே ஏற்றமானது. யூதர்களில் 93 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.” (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

ஃபதக்

நபி (ஸல்) கைபருக்கு வந்தபோது முஹய்ம்ஸா இப்னு மஸ்ஊது (ரழி) என்பவரை ‘ஃபதக்’ என்ற இடத்திலுள்ள யூதர்களிடம் அனுப்பி, இஸ்லாமை ஏற்குமாறு அழைத்தார்கள். ஆனால், அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதில் தாமதம் காட்டினர். நபியவர்களின் கைபர் வெற்றியைப் பார்த்த இவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். இதனால் ‘ஃபதக்’ யூதர்கள் நபியவர்களிடம் தூது அனுப்பி கைபர்வாசிகளிடம் ஒப்பந்தம் செய்தவாறு தங்களிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு வேண்டினர். அதாவது ஃபதக்கின் விளைச்சலில் சரிபாதியைத் தர அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதை நபியவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஃபதக் சண்டையின்றி வெற்றி கொள்ளப்பட்டதால் அதன் விளைச்சல் அனைத்தும் நபியவர்களுக்கு மட்டும் சொந்தமாயிற்று. (இப்னு ஹிஷாம்)

வாதில் குரா

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரை முடித்து அங்கிருந்து ‘வாதில் குரா’ என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு யூதர்களின் ஒரு கூட்டமும், அரபுகளின் ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டனர். நபியவர்கள் முஸ்லிம்களுடன் அங்கு சென்ற போது அங்கிருந்த யூதர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் நபியவர்களின் ‘மித்அம்’ என்ற அடிமை கொல்லப்பட்டார். அவருக்கு சொர்க்கம் உண்டென மக்கள் நற்செய்தி கூறினர். ஆனால் நபி (ஸல்) “ஒருக்காலும் அவ்வாறு இல்லை. எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! கைபர் போரின் கனீமத்து பொருட்களை பங்கு வைப்பதற்கு முன் அவர் எடுத்துக்கொண்ட போர்வை இப்போது அவர் மீது நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கிறது” என்று கூறினார்கள். நபியவர்களின் இந்த எச்சரிக்கையை கேள்விப் பட்ட மக்கள், தாங்கள் அற்பமாக நினைத்து எடுத்து வைத்திருந்த பொருட்களையெல்லாம் கொண்டு வந்து கொடுத்தனர். ஒருவர் செருப்பிற்குரிய ஒன்று (அல்லது) இரண்டு வார்களை நபியவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு நபியவர்கள் “இது நரக நெருப்பின் ஒரு வாராக இருக்கும் அல்லது இரண்டு வாராக இருக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

யூதர்களின் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நபியவர்கள் உடனடியாக தங்களது தோழர்களைப் போருக்கு தயார்படுத்தி அணிவகுப்பை நடத்தினார்கள். மேலும், முழு படைக்குள்ள பெரிய கொடியை ஸஅது இப்னு உபாதாவிடம் கொடுத்தார்கள். அதற்குப் பின் மற்ற சிறிய கொடிகளில் ஒன்றை ஹுபாப் இப்னு முன்திடமும், மற்றொரு கொடியை ஸஹ்ல் இப்னு ஹுனைஃபிடமும், மற்றொரு கொடியை அப்பாத் இப்னு பிஷ்ர் இடமும் கொடுத்தார்கள்.

இதையெடுத்து இஸ்லாமை ஏற்க நபி (ஸல்) யூதர்களை அழைத்தார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அவர்களிலிருந்து ஒருவன் வெளியேறி சண்டைக்கு வந்தான். அவனை ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் சண்டையிட வந்தான். அவனையும் ஜுபைர் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் வந்தான். அவனை அலீ இப்னு அபீதாலிப் (ரழி) கொன்றார். இவ்வாறு அவர்களில் பதினொரு நபர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒவ்வொருவர் கொல்லப்பட்ட பின்பும் நபியவர்கள் மீதமுள்ளவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள்.

இந்நிலையில் தொழுகையுடைய நேரம் வரும்போதெல்லாம் தங்களது தோழர்களுடன் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, மீண்டும் யூதர்களிடம் வந்து அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக் கூறி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். இவ்வாறு மாலை வரை சண்டை தொடர்ந்தது. மறுநாள் காலை நபியவர்கள், அவர்களிடம் சென்ற போது சூரியன் உதயமாகி சற்று நேரத்திற்குள்ளாகவே யூதர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்தார்கள். நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏராளமான பொருட்களை அல்லாஹ் வழங்கினான்.

இங்கு நபி (ஸல்) நான்கு நாட்கள் தங்கியிருந்து கிடைத்த பொருட்களை தோழர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தார்கள். ஆனால், மற்ற நிலங்களையும் பேரீத்தம் தோட்டங்களையும் யூதர்களிடமே கொடுத்து கைபர் யூதர்களிடம் செய்து கொண்டதைப் போன்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (ஜாதுல் மஆது)

தைமா

கைபர், ஃபதக், வாதில் குரா ஆகிய இடங்களிலிருந்த யூதர்களெல்லாம் பணிந்து விட்டனர் என்ற செய்தி தைமாவிலுள்ள யூதர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. மாறாக, அவர்களே முன் வந்து சமாதானம் செய்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் தூது அனுப்பினார்கள். நபியவர்களும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களது சொத்துகளை அவர்களிடமே கொடுத்து விட்டார்கள். (ஜாதுல் மஆது)

நபி (ஸல்) ஓர் உடன்படிக்கை பத்திரத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:

“அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பனூ ஆதியா என்ற யூதர்களுக்கு எழுதிக் கொடுக்கும் ஒப்பந்தம். இவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு அளிக்கப்படும். இவர்களுக்கு வரி விதிக்கப்படும். இவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது. இவர்களை நாடு கடத்தப்பட மாட்டாது. இது நிரந்தரமான ஒப்பந்தமாகும்.”

இதை காலித் இப்னு ஸஈது (ரழி) எழுதினார். (இப்னு ஸஅத்)

மதீனாவிற்குத் திரும்புதல்

இதற்குப் பின் நபியவர்கள் மதீனா திரும்பினார்கள். திரும்பும் வழியில் ஒரு பள்ளத்தாக்கை கடந்து சென்ற போது மக்கள் சப்தமிட்டு “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹஇல்லல்லாஹ்” என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) “நீங்கள் நிதானத்தைக் கையாளுங்கள். நீங்கள் செவிடனையோ அல்லது மறைவாக இருப்பவனையோ அழைக்க வில்லை. நீங்கள் நன்கு கேட்கும் ஆற்றல் உள்ளவனையும், சமீபத்தில் இருப்பவனையுமே அழைக்கின்றீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மதீனா திரும்பும் வழியில் ஓர் இரவு முற்பகுதியில் பயணித்து விட்டு பிற்பகுதியில் ஓய்வெடுத்தார்கள். ஓய்வெடுப்பதற்கு முன் பிலாலிடம் “இன்றிரவு தூங்காமல் எங்களுக்கு பாதுகாப்பாய் இருங்கள்” என்று கூறினார்கள். ஆனால், வாகனத்தில் சாய்ந்தவராக அமர்ந்திருந்த பிலாலுக்குத் தூக்கம் மிகைத்து விட்டது. சூரியன் உதயமாகும் வரை யாரும் விழிக்கவில்லை. முதன்முதலாக நபியவர்களே விழித்தார்கள். அங்கிருந்து புறப்பட்டு வேறோர் இடத்திற்கு வந்து ஃபஜ்ர் தொழுதார்கள். சிலர் இச்சம்பவம் வேறொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். (ஜாதுல் மஆது)

கைபர் போரின் பல நிகழ்வுகளைக் கவனித்துப் பார்க்கும்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம் இறுதி அல்லது ரபீஉல் அவ்வல் ஆரம்பத்தில் மதீனாவை நோக்கித் திரும்பியிருக்க வேண்டும் என்றே தெரிய வருகிறது.

அபான் இப்னு ஸஈத் படைப்பிரிவு

சங்கைமிக்க மாதங்கள் முடிந்ததற்குப் பின், வீரர்கள் யாருமின்றி மதீனாவைக் காலியாக வைப்பது முறையல்ல என்பதை ஒரு ராணுவத் தலைவர் அறிந்து வைத்திருப்பதை விட நபி (ஸல்) நன்றாகவே அறிந்திருந்தார்கள். ஏனெனில், மதீனாவைச் சுற்றியிருந்த கிராம அரபிகள், முஸ்லிம்கள் எப்பொழுது அயர்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். எனவேதான் கைபருக்கு போய்க் கொண்டிருக்கும் வழியிலேயே அபான் இப்னு ஸஈதின் தலைமையின் கீழ் நஜ்தில் உள்ள கிராம அரபிகளை அச்சுறுத்துவதற்காக ஒரு படையை நபி (ஸல்) அனுப்பி விட்டார்கள். நபியவர்கள் கொடுத்த கடமையை நிறைவேற்றிவிட்டு கைபர் நோக்கி அபான் இப்னு ஸஈத் (ரழி) திரும்பினார். அதற்குள் நபியவர்கள் கைபரை வெற்றி கொண்டு விட்டார்கள்.

அநேகமாக இப்படையை ஹிஜ்ரி 7, ஸஃபர் மாதத்தில் அனுப்பியிருக்க வேண்டும். இப்போரைப் பற்றிய சில குறிப்புகள் புகாரியில் இடம் பெற்றுள்ளது. ஆனால், புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர் (ரஹ்) “இப்போரைப் பற்றிய சரியான தகவல் தனக்குத் தெரியவில்லை” என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.(ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி)