51. ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
மக்கீ, வசனங்கள்: 60
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
51:1 وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ
وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!
51:1. (புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
51:1. (கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும்,
51:1. புழுதியைக் கிளப்பக் கூடிய (காற்றுகளின் மீது) பிறகு,
51:1. புழுதியை பறக்கவிடும் காற்றுகளின் மீது சத்தியமாக!
51:2 فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
51:2. (மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
51:2. (அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகங்கள் மீதும்,
51:2. நீர் நிரம்பிய மேகங்களைச் சுமக்கக்கூடிய,
51:2. (மழையின் கனத்தை) சுமந்து வரும் மேகங்களின் மீதும் சத்தியமாக!
51:3 فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ
فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
51:3. பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
51:3. (பல பாகத்திற்கு அதை) எளிதாக(த் தாங்கிச்) செல்லும் மேகங்கள் மீதும்,
51:3. மெதுவான வேகத்தில் செல்லக்கூடிய,
51:3. (கடல்களில்) இலகுவாகச் செல்கின்றவைகளின் மீதும் சத்தியமாக!
51:4 فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۙ
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۙ கட்டளைகளை பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!
51:4. (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
51:4. அதை (பூமியின் பல பாகங்களில்) மழையாக பிரித்துவிடும் வானவர்கள் மீதும் சத்தியமாக!
51:4. பெரும் பணியை (மழையை)ப் பகிர்ந்தளிக்கக்கூடிய காற்றுகளின் மீது சத்தியமாக!
51:4. கட்டளையைப் பங்கிடுவோர்(களான வானவர்)கள் மீதும் சத்தியமாக!
51:5 اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۙ
اِنَّمَا تُوْعَدُوْنَ நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் لَصَادِقٌ ۙ உண்மைதான்
51:5. நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.
51:5. (செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே.
51:5. எது பற்றி உங்களுக்கு அச்சுறுத்தப்படுகின்றதோ அது உண்மையானதே!
51:5. (நற்செயலுக்கு நற்கூலியும், தீயசெயலுக்கு தண்டனையும் உண்டென்று) நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையானதாகும்.
51:6 وَّاِنَّ الدِّيْنَ لَوَاقِعٌ ؕ
وَّاِنَّ நிச்சயமாக الدِّيْنَ கூலி கொடுக்கப்படுவது لَوَاقِعٌ ؕ நிகழ்ந்தே தீரும்
51:6. அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
51:6. நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும்.
51:6. மேலும், செயல்களுக்குக் கூலி வழங்குவதென்பது அவசியம் நிகழக்கூடியதே!
51:6. நிச்சயமாக, (செயலுக்குத் தக்க) கூலி கொடுக்கப்படுவது நடந்தே தீரும்.
51:7 وَالسَّمَآءِ ذَاتِ الْحُـبُكِ ۙ
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக! ذَاتِ الْحُـبُكِ ۙ அழகிய படைப்புடைய
51:7. அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
51:7. (நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக!
51:7. பலவகையான தோற்றங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக!
51:7. பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக,
51:8 اِنَّـكُمْ لَفِىْ قَوْلٍ مُّخْتَلِفٍ ۙ
اِنَّـكُمْ நிச்சயமாக நீங்கள் لَفِىْ قَوْلٍ பேச்சில் இருக்கின்றனர் مُّخْتَلِفٍ ۙ மாறுபட்ட
51:8. நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
51:8. நிச்சயமாக நீங்கள் (சத்தியத்திற்கு) முரணாகப் பேசுவதில்தான் நிலைத்து விட்டீர்கள்.
51:8. (மறுமையைப் பற்றிய) உங்களுடைய கூற்று ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கின்றது.
51:8. நிச்சயமாக நீங்கள், (நபியைப்பற்றி) மாறுபட்ட கூற்றில் இருக்கின்றீர்கள்.
51:9 يُّـؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَ ؕ
يُّـؤْفَكُ திருப்பப்படுகிறார் عَنْهُ இதை விட்டும் مَنْ எவர் اُفِكَ ؕ திருப்பப்பட்டார்
51:9. அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
51:9. (ஏற்கனவே, அல்லாஹ்வுடைய விதியின்படி) திருப்பப்பட்டவனே சத்தியத்தை விட்டும் திருப்பப்படுவான்.
51:9. எவன் சத்தியத்திலிருந்து பிறழ்ந்திருக்கின்றானோ அவன் மட்டுமே அதனால் தடுமாற்றம் அடைவான்.
51:9. (அல்லாஹ்வுடைய தூதர் கொண்டுவந்த உண்மையான விஷயங்கள் ஏற்பதைவிட்டும்) திருப்பபட்டவர் (வேதமாகிய) அதை விட்டும் திருப்பப்படுகிறார்.
51:10 قُتِلَ الْخَـرّٰصُوْنَۙ
قُتِلَ அழிந்து போகட்டும் الْخَـرّٰصُوْنَۙ பொய்யை கற்பனை செய்பவர்கள்
51:10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
51:10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர்.
51:10. அழிந்துவிட்டார்கள்; கணிப்பு மற்றும் ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பவர்கள்!
51:10. பொய்யர்கள் அழிந்தேபோவர்.
51:11 الَّذِيْنَ هُمْ فِىْ غَمْرَةٍ سَاهُوْنَۙ
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் فِىْ غَمْرَةٍ மயக்கத்தில் سَاهُوْنَۙ மறதியாளர்களாக
51:11. அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
51:11. அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்துவிட்டனர்.
51:11. அவர்கள் எத்தகையவர்களெனில், அறியாமையில் மூழ்கி, அலட்சியத்தினால் மதியிழந்து இருப்பவர்கள்.
51:11. அவர்கள் எத்தகையோரென்றால் (தங்கள்) மடமையால், (மறுமையையே மறந்தோராய் இருப்போர் (ஆவர்).
51:12 يَسْــٴَـــلُوْنَ اَيَّانَ يَوْمُ الدِّيْنِؕ
يَسْــٴَـــلُوْنَ அவர்கள் கேட்கின்றனர் اَيَّانَ எப்போது يَوْمُ நாள் الدِّيْنِؕ கூலி கொடுக்கப்படும்
51:12. (நன்மை, தீமைக்குக்) “கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
51:12. அவர்கள், ‘‘கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?'' என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
51:12. “கூலி கொடுக்கப்படும் அந்நாள் எப்போது வரும்?” என வினவுகின்றனர்.
51:12. “கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது (வரும்)?” என்று அவர்கள் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
51:13 يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُوْنَ
يَوْمَ நாளில்... هُمْ அவர்கள் عَلَى النَّارِ நெருப்பின் மீது يُفْتَنُوْنَ வேதனை செய்யப்படுகின்றனர்
51:13. நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
51:13. அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள்.
51:13. இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும்.
51:13. (அந்நாள்) அவர்கள் நெருப்பில் (பொசுக்கப்பட்டு) தண்டிக்கப்படும் நாள்.
51:14 ذُوْقُوْا فِتْنَتَكُمْؕ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ
ذُوْقُوْا சுவையுங்கள்! فِتْنَتَكُمْؕ உங்கள் வேதனையை هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ இது நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தது
51:14. “உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்;” எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
51:14. (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் வேதனையை சுவைத்துப் பாருங்கள். நீங்கள் (எப்பொழுது வருமென்று) அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்'' (என்றும் கூறப்படும்).
51:14. (அவர்களிடம் கூறப்படும்:) “இப்போது சுவையுங்கள்; உங்களுடைய வேதனையை! எதற்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது.”
51:14. (அவர்களிடம்) “உங்கள் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் (எப்பொழுது வருமென்று) நீங்கள் எதனை அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இது தான்” (என்றும் கூறப்படும்).
51:15 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ
اِنَّ الْمُتَّقِيْنَ நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் وَّعُيُوْنٍۙ இன்னும் நீரூற்றுகளில்
51:15. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
51:15. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கங்களிலும், நீரருவிகளுக்கு அருகிலும் இருப்பார்கள்.
51:15. இறையச்சம் கொண்டவர்கள் (அந்த நாளில்) திண்ணமாகத் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
51:15. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (சுவனபதிகளின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
51:16 اٰخِذِيْنَ مَاۤ اٰتٰٮهُمْ رَبُّهُمْؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِيْنَؕ
اٰخِذِيْنَ பெற்றுக்கொள்வார்கள் مَاۤ اٰتٰٮهُمْ அவர்களுக்கு கொடுத்ததை رَبُّهُمْؕ அவர்களின் இறைவன் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் قَبْلَ ذٰلِكَ இதற்கு முன்னர் مُحْسِنِيْنَؕ நல்லவர்களாக
51:16. அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
51:16. அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாகவே இருந்தார்கள்.
51:16. அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள்.
51:16. அவர்கள், தங்களிரட்சகன் அவர்களுக்குக் கொடுத்ததை (திருப்தியுடன்) எடுத்துக் கொண்டோராக (இருப்பர்), நிச்சயமாக, அவர்கள் அதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தார்கள்.
51:17 كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ
كَانُوْا இருந்தார்கள் قَلِيْلًا மிகக் குறைவாக مِّنَ الَّيْلِ இரவில் مَا يَهْجَعُوْنَ தூங்குபவர்களாக
51:17. அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
51:17. அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்பவர்களாக இருந்தனர்.
51:17. இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும்
51:17. இரவில் வெகு சொற்ப(நேர)மே தூங்கக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
51:18 وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ
وَبِالْاَسْحَارِ அதிகாலையில் هُمْ يَسْتَغْفِرُوْنَ அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்
51:18. அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
51:18. அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து தங்கள் இறைவனை வணங்கி, அவனிடம் பாவ) மன்னிப்புக் கோருவார்கள்.
51:18. பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்.
51:18. மேலும், அவர்கள் விடியற்காலை(ஸஹர் நேரங்)களில் (எழுந்து அல்லாஹ்வை வணங்கி, தங்களிரட்சகனிடம்) மன்னிப்புக்கோரிக் கொண்டிருப்பார்கள்.
51:19 وَفِىْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآٮِٕلِ وَالْمَحْرُوْمِ
وَفِىْۤ اَمْوَالِهِمْ இன்னும் அவர்களது செல்வங்களில் حَقٌّ உரிமை لِّلسَّآٮِٕلِ யாசிப்பவருக்கு(ம்) وَالْمَحْرُوْمِ இல்லாதவருக்கும்
51:19. அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
51:19. அவர்களுடைய பொருள்களில், (வாய் திறந்து) யாசகம் கேட்பவர்களுக்கும், (கேட்காத) வறியவர்களுக்கும் பாகமுண்டு. (அனைவருக்கும் அவர்கள் தானம் செய்வார்கள்.)
51:19. மேலும், அவர்களின் செல்வங்களில் உரிமை இருந்தது, யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும்!
51:19. இன்னும், அவர்களுடைய செல்வங்களில் கேட்போருக்கும், கேட்காதோருக்கும் உரிமையுண்டு.
51:20 وَفِى الْاَرْضِ اٰيٰتٌ لِّلْمُوْقِنِيْنَۙ
وَفِى الْاَرْضِ இன்னும் பூமியில் اٰيٰتٌ பல அத்தாட்சிகள் لِّلْمُوْقِنِيْنَۙ உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு
51:20. உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
51:20. உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
51:20. உறுதியாக நம்புபவர்களுக்கு பூமியில் பல சான்றுகள் உள்ளன.
51:20. மேலும், உறுதி(யாக விசுவாசங்)கொண்டவர்களுக்குப் பூமியில் அத்தாட்சிகளிருக்கின்றன.
51:21 وَفِىْۤ اَنْفُسِكُمْؕ اَفَلَا تُبْصِرُوْنَ
وَفِىْۤ اَنْفُسِكُمْؕ இன்னும் உங்களிலும் اَفَلَا تُبْصِرُوْنَ நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?
51:21. உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
51:21. உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?
51:21. ஏன், உங்களிடத்திலும்கூட! உங்களுக்குப் புலப்படுவதில்லையா, என்ன?
51:21. உங்களுக்குள்ளேயும்_(பல அத்தாட்சிகள் இருக்கின்றன, அவைகளை) நீங்கள் (கவனித்துப்) பார்க்கமாட்டீர்களா?
51:22 وَفِى السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ
وَفِى السَّمَآءِ இன்னும் வானத்தில் رِزْقُكُمْ உங்கள் உணவும் وَمَا تُوْعَدُوْنَ நீங்கள் வாக்களிக்கப்படுவதும்
51:22. அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
51:22. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவையும் உங்கள் உணவும் வானத்தில் தான் இருக்கின்றன.
51:22. வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்!
51:22. மேலும், உங்களுடைய உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கபட்டீர்களே அவையும் வானத்திலிருக்கின்றன.
51:23 فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَـقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ
فَوَرَبِّ அதிபதியின் மீது சத்தியமாக السَّمَآءِ وَالْاَرْضِ வானம், பூமியுடைய اِنَّهٗ நிச்சயமாக இது لَحَـقٌّ உண்மைதான் مِّثْلَ போன்றே مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ நிச்சயமாக நீங்கள் பேசுவது
51:23. ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.
51:23. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக இது, (உங்கள் வார்த்தைகளை) நீங்கள்தான் கூறுகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லாதிருப்பதைப் போல் (இந்த குர்ஆனில் உள்ள அனைத்தும்) உண்மையானதாகும்.
51:23. வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக! திண்ணமாக, இந்த விஷயம் சத்தியமானது; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது.
51:23. ஆகவே, வானம், மற்றும் பூமியுடைய இரட்சகன் மீது சத்தியமாக, (உங்கள் வார்த்தைகளை) நிச்சயமாக நீங்கள் தாம் கூறுகின்றீர்கள் என்ப(தில் சந்தேகமில்லாதிருப்ப)தைப்போல, நிச்சயமாக இது_(இந்த குர் ஆனில் உள்ள யாவும்) உண்மையானதாகும்.
51:24 هَلْ اَتٰٮكَ حَدِيْثُ ضَيْفِ اِبْرٰهِيْمَ الْمُكْرَمِيْنَۘ
هَلْ اَتٰٮكَ உமக்கு வந்ததா? حَدِيْثُ செய்தி ضَيْفِ விருந்தினர்களின் اِبْرٰهِيْمَ இப்ராஹிமுடைய الْمُكْرَمِيْنَۘ கண்ணியமான(வர்கள்)
51:24. இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
51:24. (நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உமக்கு எட்டியிருக்கிறதா?
51:24. (நபியே!) இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா?
51:24. (நபியே!) கௌரவத்திற்குரியவர்களான இப்றாஹீமுடைய விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
51:25 اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًاؕ قَالَ سَلٰمٌ ۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ
اِذْ دَخَلُوْا அவர்கள் நுழைந்த போது عَلَيْهِ அவரிடம் فَقَالُوْا அவர்கள் கூறினர் سَلٰمًاؕ ஸலாம் قَالَ கூறினார் سَلٰمٌ ۚ “ஸலாம்” قَوْمٌ மக்கள் مُّنْكَرُوْنَ அறியாத
51:25. அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).
51:25. அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி “உமக்கு) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், “உங்களுக்கும்) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணினார்.)
51:25. அவர்கள் அவரிடம் வந்தபோது, “உம்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: “உங்கள் மீதும் சாந்தி நிலவுக! அறிமுகமில்லாத ஆட்களாக இருக்கிறார்களே!”
51:25. அவர்கள், அவரிடம் நுழைந்தபொழுது “சாந்தி உண்டாவதாக!” என்று கூறினார்கள். (அதற்கு இப்றாஹீம் உங்களுக்கும்)” சாந்தி உண்டாவதாக!” என்று கூறி (இவர்கள் நமக்கு) அறிமுகமில்லாத சமூகத்தார் (என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு,)
51:26 فَرَاغَ اِلٰٓى اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِيْنٍۙ
فَرَاغَ திரும்பிச் சென்றார் اِلٰٓى اَهْلِهٖ தனது குடும்பத்தாரிடம் فَجَآءَ வந்தார் بِعِجْلٍ سَمِيْنٍۙ கொழுத்த காளைக் கன்றைக் கொண்டு
51:26. எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
51:26. பிறகு, விரைவாகத் தன் வீட்டினுள் சென்று கொழுத்ததொரு கன்றுவின் (பொரித்த) மாமிசத்தைக் கொண்டுவந்தார்.
51:26. பின்னர், அவர் சந்தடியில்லாமல் தம் வீட்டாரிடம் சென்றார்; (பொரிக்கப்பட்ட) கொழுத்த காளைக்கன்றைக் கொண்டு வந்து
51:26. பின்னர் தன் இல்லத்தாரிடம் விரைவாகச் சென்று (நெருப்பில் சுடப்பட்ட) கொழுத்தகாளைக் கன்றைக் கொண்டு வந்தார்.
51:27 فَقَرَّبَهٗۤ اِلَيْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ
فَقَرَّبَهٗۤ அதை நெருக்கமாக்கினார் اِلَيْهِمْ அவர்கள் பக்கம் قَالَ கூறினார் اَلَا تَاْكُلُوْنَ நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
51:27. அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார்.
51:27. அதை அவர்கள் முன் வைத்தார். (ஆனால், அதை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் புசிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்.
51:27. அதனை விருந்தினர் முன்வைத்தார். பிறகு கூறினார்: “சாப்பிடாமல் இருக்கின்றீர்களே!”
51:27. பின்னர், அதனை அவர்கள் அருகில் வைத்தார். (அவர்கள் உண்ணாததால்) அவர்களிடம், “நீங்கள் உண்ணமாட்டீர்களா” என்று கேட்டார்.
51:28 فَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ ؕ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِيْمٍ
فَاَوْجَسَ ஆகவே, உணர்ந்தார் مِنْهُمْ அவர்களினால் خِيْفَةً ؕ பயத்தை قَالُوْا கூறினார்கள் لَا تَخَفْ ؕ பயப்படாதீர் وَبَشَّرُوْهُ இன்னும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள் بِغُلٰمٍ ஓர் ஆண் குழந்தையைக்கொண்டு عَلِيْمٍ கல்வியாளரான
51:28. (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
51:28. (இருப்பினும், அவர்கள் புசிக்காமலிருப்பதைக் கண்ட) அவர், அவர்களைப் பற்றி பயந்தார். (இதை அறிந்த அவர்கள் ‘‘இப்ராஹீமே!) பயப்படாதீர்'' என்று கூறி, (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.
51:28. பின்னர், அவர்களைக் குறித்து அவர் மனத்திற்குள் அஞ்சினார். அவர்களோ, “அஞ்சாதீர்!” என்று கூறினார்கள். மேலும், அறிவுள்ள ஒரு மகன் பிறக்கப் போவதாக அவருக்கு நற்செய்தி அறிவித்தார்கள்.
51:28. (பின்னும் புசிக்காமல் இருந்ததால் தன் மனதில்) அவர்கள் பற்றிய பயத்தை உணர்ந்தார். அப்போது “(இப்ராஹீமே! நீர் பயப்படாதீர்,” என்று அவர்கள் கூறினர், மேலும், (இஸ்ஹாக் என்னும்) அறிவார்ந்த ஆண் குழந்தை (அவருக்குப் பிறக்குமென்ற செய்தி)யைக் கொண்டு அவருக்கு நன்மாராயம் கூறினார்கள்.
51:29 فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِىْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِيْمٌ
فَاَقْبَلَتِ முன்னோக்கி வந்தால் امْرَاَتُهٗ அவருடைய மனைவி فِىْ صَرَّةٍ சப்தத்தோடு فَصَكَّتْ இன்னும் அறைந்தார் وَجْهَهَا தனது முகத்தை وَقَالَتْ இன்னும் கூறினாள் عَجُوْزٌ கிழவி ஆயிற்றே عَقِيْمٌ மலடியான(வள்)
51:29. பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.
51:29. (இதைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தன் முகத்தில் அறைந்துகொண்டு ‘‘(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)'' என்று கூறினார்.
51:29. (அதனைக் கேட்டு) அவருடைய மனைவி கூச்சலிட்டவாறு முன்னே வந்தாள்; தன் முகத்தில் அறைந்து கொண்டு கிழவி, மலடி என்று கூறினாள்.
51:29. பின்னர், (இதனைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) உரத்த சப்தத்தில் அவர்கள் எதிரில் வந்து, தன் முகத்தில் அடித்துக் கொண்டு, “(நானோ) மலட்டுக்கிழவி (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?”) என்று கூறினார். (அதற்கவர்கள்),
51:30 قَالُوْا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِؕ اِنَّهٗ هُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ
قَالُوْا கூறினார்கள் كَذٰلِكِ ۙ அவ்வாறுதான் قَالَ கூறினான் رَبُّكِؕ உமது இறைவன் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْحَكِيْمُ மகா ஞானவான் الْعَلِيْمُ நன்கறிந்தவன்
51:30. (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.
51:30. அதற்கவர்கள், ‘‘இவ்வாறே, உமது இறைவன் கூறுகிறான். நிச்சயமாக அவன்தான் மிக ஞானமுள்ளவன், அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்'' என்றார்கள்.
51:30. அவர்கள் கூறினர்: “ ஆம், அவ்வாறுதான் (நடைபெறும்) என்று உன் இறைவன் கூறியுள்ளான். அவன் நுண்ணறிவாளனாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.”
51:30. “இவ்வாறே உமதிரட்சகன் கூறுகின்றான், நிச்சயமாக, அவனே தீர்க்கமான அறிவுடையோன், (யாவையும்) நன்கறிந்தோன் என்று கூறினார்கள்.
51:31 قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ
قَالَ அவர் கூறினார் فَمَا خَطْبُكُمْ உங்கள் காரியம்தான் என்ன? اَيُّهَا الْمُرْسَلُوْنَ தூதர்களே!
51:31. (பின்னர் இப்ராஹீம்:) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.
51:31. (பின்னர் இப்ராஹீம் வானவர்களை நோக்கி) ‘‘தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?)'' என்று கேட்டார்.
51:31. இப்ராஹீம் கேட்டார்: “இறைத்தூதர்களே! நீங்கள் எந்தப் பணியை ஆற்ற அனுப்பப்பட்டுள்ளீர்கள்?”
51:31. (பின்னர் இப்றாஹீம் மலக்குகளிடம்) “தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்கு நீங்கள் இங்கு வந்தீர்கள்?) என்று கேட்டார்.
51:32 قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ
قَالُـوْۤا கூறினார்கள் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اُرْسِلْنَاۤ அனுப்பப்பட்டுள்ளோம் اِلٰى قَوْمٍ மக்கள் பக்கம் مُّجْرِمِيْنَۙ குற்றவாளிகளான
51:32. “குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
51:32. அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் (பெரும்) குற்றவாளிகளான (லூத் நபியின்) மக்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறினர்.
51:32. அவர்கள் கூறினர்: “குற்றம் புரிந்த ஒரு சமுதாயத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றோம்.”
51:32. அ(தற்க)வர்கள் நிச்சயமாக நாங்கள் குற்றவாளிகளான ஒரு சமூகத்தார் பால் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.
51:33 لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ طِيْنٍۙ
لِنُرْسِلَ நாங்கள் எறிவதற்காக عَلَيْهِمْ அவர்கள் மீது حِجَارَةً கல்லை مِّنْ طِيْنٍۙ களிமண்ணினால்ஆன
51:33. “அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
51:33. ‘‘நாங்கள், அவர்கள் மீது களி மண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்).''
51:33. சுட்ட கற்களை அவர்கள்மீது பொழிவதற்காக!
51:33. “நாங்கள், அவர்களின் மீது களிமண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்).
51:34 مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِيْنَ
مُّسَوَّمَةً அடையாளமிடப்பட்ட عِنْدَ رَبِّكَ உமது இறைவனிடம் لِلْمُسْرِفِيْنَ பாவிகளுக்காக
51:34. “வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.”
51:34. ‘‘(அவை) உமது இறைவனிடம் வரம்பு மீறியவர்களுக்கென (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்டவையாகும்.''
51:34. அவை வரம்பு மீறிச் செல்வோருக்காக உம் இறைவனிடத்தில் அடையாளமிடப்பட்ட கற்களாகும்.
51:34. வரம்பு மீறியவர்களுக்காக, உமது இரட்சகனிடத்தில் (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்டவைகளாக (அவை இருக்கின்றன.)”
51:35 فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِيْهَا مِنَ الْمُؤْمِنِيْنَۚ
فَاَخْرَجْنَا ஆக, நாம் வெளியேற்றி விட்டோம் مَنْ كَانَ இருந்தவர்களை فِيْهَا அதில் مِنَ الْمُؤْمِنِيْنَۚ நம்பிக்கையாளர்களாக
51:35. ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
51:35. ஆகவே, (அவர்கள் அழிவதற்கு முன்னதாகவே அவ்வூரில் இருந்த) நம்பிக்கை கொண்டவர்களை அதிலிருந்து நாம் வெளிப்படுத்தி விட்டோம்.
51:35. பின்னர், அந்த ஊரில் இருந்த இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும் நாம் வெளியேற்றினோம்.
51:35. ஆகவே (அவர்கள் அழிக்கப்படுவதற்கு முன்,) விசுவாசங்கொண்டவர்களிலிருந்து அ(ந்நரகத்)திலிருந்தவர்களை நாம் வெளியேற்றிவிட்டோம்.
51:36 فَمَا وَجَدْنَا فِيْهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِيْنَۚ
فَمَا وَجَدْنَا ஆனால் நாம் காணவில்லை فِيْهَا அதில் غَيْرَ بَيْتٍ ஒரு வீட்டைத் தவிர مِّنَ الْمُسْلِمِيْنَۚ முஸ்லிம்களுடைய
51:36. எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
51:36. எனினும், அதில் (லூத்துடைய) ஒரு வீட்டாரைத் தவிர, நம்பிக்கை கொண்ட ஒருவரையும் நாங்கள் காணவில்லை.
51:36. மேலும், அங்கு ஒரேயொரு வீட்டைத் தவிர முஸ்லிம் வீடுகள் வேறு எதையும் நாம் காணவில்லை.
51:36. பின்னர், அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டைத் தவிர (மற்றெதையும்) நாம் காணவில்லை.
51:37 وَتَرَكْنَا فِيْهَاۤ اٰيَةً لِّـلَّذِيْنَ يَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِيْمَؕ
وَتَرَكْنَا நாம் விட்டுள்ளோம் فِيْهَاۤ அதில் اٰيَةً ஓர் அத்தாட்சியை لِّـلَّذِيْنَ يَخَافُوْنَ பயப்படுகின்றவர்களுக்கு الْعَذَابَ தண்டனையை الْاَلِيْمَؕ வலி தரக்கூடிய(து)
51:37. நோவினை தரும் வேதனையை அஞ்சுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சியை விட்டு வைத்தோம்.
51:37. துன்புறுத்தும் வேதனையை பயப்படுகிறவர்களுக்கு அதில் ஒரு படிப்பினையை விட்டு வைத்தோம்.
51:37. இதன் பின்னர், நாம் அங்கு ஒரு சான்றினை விட்டு வைத்தோம், துன்புறுத்தும் வேதனைக்கு அஞ்சுகின்ற மக்களுக்காக!
51:37. மேலும், துன்புறுத்தும் வேதனையை பயப்படுகிறார்களே அவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டு வைத்தோம்.
51:38 وَفِىْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰى فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ
وَفِىْ مُوْسٰۤی இன்னும் மூஸாவிலும் اِذْ اَرْسَلْنٰهُ நாம் அவரை அனுப்பிய போது اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் بِسُلْطٰنٍ ஆதாரத்தைக் கொண்டு مُّبِيْنٍ தெளிவான(து)
51:38. மேலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது; நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது:
51:38. மூஸாவுடைய (சரித்திரத்)திலும் (ஒரு படிப்பினை) இருக்கிறது. தெளிவான அத்தாட்சிகளுடன் அவரை ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பிய சமயத்தில்,
51:38. மேலும், மூஸாவின் வரலாற்றில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) நாம் தெளிவான சான்றுடன் அவரை ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது
51:38. மேலும், மூஸாவி(ன் சரித்திரத்தி)லும்_(ஒரு படிப்பினை இருக்கின்றது), தெளிவான சான்றுடன் ஃபிர் அவ்னின்பால் அவரை நாம் அனுப்பியபோது,
51:39 فَتَوَلّٰى بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ
فَتَوَلّٰى விலகினான் بِرُكْنِهٖ தனது பலத்தினால் وَقَالَ இன்னும் கூறினான் سٰحِرٌ ஒரு சூனியக்காரர்(தான்) اَوْ அல்லது مَجْنُوْنٌ ஒரு பைத்தியக்காரர்(தான்)
51:39. அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து: “இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
51:39. அவன் வலுவான தன் ஆட்சியின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, ‘‘இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்'' என்று கூறினான்.
51:39. அவன் தன் வலிமையின் காரணமாக செருக் குற்றுப் புறக்கணித்தான். மேலும், “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
51:39. அவன் தன்னுடைய (பக்கபலமென்று நினைத்த படைகள், அதிகாரம் ஆகியவற்றின்) பலத்தால் (அவரைப்) புறக்கணித்தான், இன்னும் (இவர்) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று அவன் கூறினான்.
51:40 فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ وَهُوَ مُلِيْمٌؕ
فَاَخَذْنٰهُ அவனையும் நாம் பிடித்தோம் وَجُنُوْدَهٗ அவனுடைய ராணுவங்களையும் فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ அவர்களை எறிந்தோம்/கடலில் وَهُوَ அவனோ مُلِيْمٌؕ பழிப்புக்குள்ளானவன்
51:40. ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
51:40. ஆதலால், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் பிடித்துக் கடலில் எறிந்துவிட்டோம். அவன் என்றென்றுமே நிந்தனைக்குள்ளாகி விட்டான்.
51:40. இறுதியில் நாம் அவனையும் அவனுடைய படைகளையும் பிடித்தோம். அவர்கள் அனைவரையும் கடலில் எறிந்துவிட்டோம். மேலும், அவன் பழிப்புக்குரியவனாகிவிட்டான்.
51:40. ஆதலால், அவனையும், அவனுடைய படைகளையும் நாம் பிடித்தோம், பின்னர் அவர்களைக் கடலில் எறிந்துவிட்டோம், அவனோ (என்றென்றுமே) நிந்தனைக்குள்ளாக்கப்பட்டுவிட்டான்.
51:41 وَفِىْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيْحَ الْعَقِيْمَۚ
وَفِىْ عَادٍ இன்னும் ஆதிலும் اِذْ اَرْسَلْنَا நாம் அனுப்பியபோது عَلَيْهِمُ அவர்கள் மீது الرِّيْحَ الْعَقِيْمَۚ மலட்டுக் காற்றை
51:41. இன்னும், “ஆது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது;
51:41. ‘ஆது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). அவர்கள் மீது நாம் (நாசகரமான) மலட்டுக் காற்றை அனுப்பிய சமயத்தில்,
51:41. மேலும், ஆத் சமூகத்தினரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) அவர்கள் மீது நாம் நாசத்தை ஏற்படுத்தும் காற்றை அனுப்பினோம்.
51:41. ‘ஆது’ வி(ன் சமூகத்தார்களி)லும்_(ஓர் அத்தாட்சி உண்டு) அவர்கள் மீது, நாம் (நாசகரமான) மலட்டுக் காற்றை அனுப்பிய சமயத்தில்,
51:42 مَا تَذَرُ مِنْ شَىْءٍ اَتَتْ عَلَيْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيْمِؕ
مَا تَذَرُ அது விடாது مِنْ شَىْءٍ எதையும் اَتَتْ செல்கிறதோ عَلَيْهِ அதன் மீது اِلَّا جَعَلَتْهُ அதை ஆக்காமல் كَالرَّمِيْمِؕ பழைய மக்கிப்போன பொருளைப் போன்று
51:42. அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
51:42. அது பட்டதையெல்லாம் தூசியா(க்கிப் பறக்கடி)க்காமல் விடவில்லை.
51:42. அது எந்த ஒரு பொருளின்மீது பட்டபோதிலும் அதனைச் சிதைத்து அழித்துவிட்டது.
51:42. எப்பொருளிலிருந்தும் அதன்மீது அ(க்காற்றன)து (கடந்து) வந்து, அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்கியே தவிர அது விட்டு வைக்கவில்லை.
51:43 وَفِىْ ثَمُوْدَ اِذْ قِيْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰى حِيْنٍ
وَفِىْ ثَمُوْدَ இன்னும் சமூதிலும் اِذْ قِيْلَ சொல்லப்பட்ட போது لَهُمْ அவர்களுக்கு تَمَتَّعُوْا சுகமாக இருங்கள் என்று حَتّٰى வரை حِيْنٍ சிறிது காலம்
51:43. மேலும் “ஸமூது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); “ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது:
51:43. ‘ஸமூது' என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு). ‘‘நீங்கள் ஒரு காலம் வரை சுகமாக வாழ்ந்திருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,
51:43. மேலும், ஸமூத் கூட்டத்தாரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) “ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டபோது;
51:43. ‘ஸமூது’ வி(ன் கூட்டத்தாரி)லும் (ஓர் அத்தாட்சியுண்டு) “நீங்கள் ஒரு காலம் வரையில் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது,
51:44 فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَ هُمْ يَنْظُرُوْنَ
فَعَتَوْا பெருமை அடித்தனர் عَنْ اَمْرِ கட்டளையை ஏற்காமல் رَبِّهِمْ தங்கள் இறைவனின் فَاَخَذَتْهُمُ அவர்களைப் பிடித்தது الصّٰعِقَةُ இடிமுழக்கம் وَ هُمْ அவர்களோ يَنْظُرُوْنَ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்
51:44. அவர்கள் தங்கள் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
51:44. அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
51:44. (இந்த எச்சரிக்கைக்குப் பிறகும்) அவர்கள் தங்கள் அதிபதியின் கட்டளையை ஆணவத்துடன் மீறினார்கள். இறுதியில், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று உடைந்துவிழும் வேதனை ஒன்று அவர்களைப் பிடித்துக் கொண்டது.
51:44. தங்கள் இரட்சகனின் கட்டளையை அவர்கள் மீறினார்கள், ஆகவே, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
51:45 فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِيَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِيْنَۙ
فَمَا اسْتَطَاعُوْا இயலாமல் ஆகிவிட்டார்கள் مِنْ قِيَامٍ நிற்பதற்கு وَّمَا كَانُوْا இருக்கவில்லை مُنْتَصِرِيْنَۙ பழிதீர்ப்பவர்களாகவும்
51:45. ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை; (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
51:45. ஆகவே, அவர்கள் நிற்கவும் முடியவில்லை. (உட்காரவும் முடியவில்லை;) நம்மிடம் பழிவாங்கவும் முடியவில்லை. (இருந்தவாறே அழிந்து விட்டனர்.)
51:45. பின்னர், அவர்களால் எழுந்து நிற்கவும் முடியவில்லை; தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியவில்லை.
51:45. ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்திபெறவில்லை, (நம்முடைய வேதனையிலிருந்து தப்பிக்க எவரிடமிருந்தும்) உதவி பெறுபவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.
51:46 وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ
وَقَوْمَ இன்னும் மக்களையும் نُوْحٍ நூஹூடைய مِّنْ قَبْلُؕ இதற்கு முன்னர் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் قَوْمًا மக்களாக فٰسِقِيْنَ பாவிகளான
51:46. அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
51:46. இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்). நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர்.
51:46. மேலும், இவர்கள் அனைவருக்கும் முன்பு நூஹின் சமூகத்தினரை நாம் அழித்தோம்; ஏனெனில், அவர்கள் தீய மக்களாய் இருந்தனர்.
51:46. (இவர்கள் அனைவருக்கும்) முன்னர் நூஹுடைய சமூகத்தாரையும் (நாம் அழித்துவிட்டோம்) நிச்சயமாக அவர்கள், பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தனர்.
51:47 وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ
وَ السَّمَآءَ வானத்தை بَنَيْنٰهَا அதை நாம் உயர்த்தினோம் بِاَيْٮدٍ பலத்தால் وَّاِنَّا நிச்சயமாக நாம் لَمُوْسِعُوْنَ மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்
51:47. மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
51:47. (எவருடைய உதவியுமின்றி) நம் சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கிறோம்.
51:47. வானத்தை நாம் நம் வலிமையினால் படைத்துள்ளோம்.மேலும், நாம் அதற்கான ஆற்றல் உடையவராக இருக்கின்றோம்.
51:47. மேலும், வானத்தை (எவருடைய உதவியுமின்றி) நம்முடைய சக்தியைக் கொண்டே அதை நாம் அமைத்தோம், நிச்சயமாக நாம் (படைக்கின்ற காரியத்தில்) மிக்க விசாலத்தை உடையோராக இருக்கிறோம் (யாவும் நம் சக்திக்குட்பட்டதே).
51:48 وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ
وَالْاَرْضَ பூமியை فَرَشْنٰهَا அதை நாம் விரித்தோம் فَنِعْمَ நாம் மிகச் சிறந்தவர்கள் الْمٰهِدُوْنَ விரிப்பவர்களில்
51:48. இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
51:48. பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர்களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே.
51:48. பூமியை நாம் விரித்திருக்கின்றோம். நாம் மிகச் சிறந்த முறையில் செம்மைப்படுத்துபவர்களாய் இருக்கின்றோம்.
51:48. அன்றியும், பூமியை_அதனை நாம் (விசாலமாக) விரித்தோம், (அதனைச் சீர்படுத்தி செவ்வையாக்கி) விரிப்போரில் (நாம்) நல்லோராவோம்.
51:49 وَمِنْ كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
وَمِنْ كُلِّ شَىْءٍ ஒவ்வொன்றிலும் خَلَقْنَا படைத்தோம் زَوْجَيْنِ இரண்டு ஜோடிகளை لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
51:49. ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கிறோம். (இதைக்கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!
51:49. மேலும், நாம் ஒவ்வொன்றையும் இணைகளாய்ப் படைத்திருக்கின்றோம். நீங்கள் இதிலிருந்து படிப்பினை பெறக்கூடும்!
51:49. நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு பொருளிலிருந்தும் (ஆண், பெண் கொண்ட) இருவகையை நாம் படைத்திருக்கின்றோம்.
51:50 فَفِرُّوْۤا اِلَى اللّٰهِؕ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌۚ
فَفِرُّوْۤا ஆகவே விரண்டு ஓடுங்கள் اِلَى اللّٰهِؕ அல்லாஹ்வின் பக்கம் اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு مِّنْهُ அவனிடமிருந்து نَذِيْرٌ எச்சரிப்பாளர் مُّبِيْنٌۚ தெளிவான(வர்)
51:50. ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
51:50. ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
51:50. எனவே, ஓடி வாருங்கள், அல்லாஹ்வின் பக்கம்! நான் அவனுடைய சார்பாக உங்களுக்குத் தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்.
51:50. ஆகவே, “(நிராகரிப்பு, பாவம் ஆகியவற்றிலிருந்து விலகி), அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் விரைந்து செல்லுங்கள், நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்குக் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவ(னாக இருக்கிறே)ன்,
51:51 وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَؕ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌۚ
وَلَا تَجْعَلُوْا ஏற்படுத்தாதீர்கள் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا اٰخَرَؕ வேறு ஒரு கடவுளை اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு مِّنْهُ அவனிடமிருந்து نَذِيْرٌ எச்சரிப்பாளர் مُّبِيْنٌۚ தெளிவான(வர்)
51:51. மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
51:51. அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு (இதைப் பற்றியும்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக இருக்கிறேன்.
51:51. அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனுடைய சார்பில் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்!
51:51. மேலும், அல்லாஹ்வுடன் வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயனை ஆக்காதீர்கள், நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் (என்று நபியே! நீர் கூறுவீராக!).
51:52 كَذٰلِكَ مَاۤ اَتَى الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌۚ
كَذٰلِكَ இவ்வாறுதான் مَاۤ اَتَى வந்ததில்லை الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு مِّنْ رَّسُوْلٍ ஒரு தூதரும் اِلَّا قَالُوْا இவர்கள் கூறாமல் سَاحِرٌ ஒருசூனியக்காரர் اَوْ مَجْنُوْنٌۚ அல்லது ஒரு பைத்தியக்காரர்
51:52. இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
51:52. இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமலிருக்கவில்லை.
51:52. இப்படித்தான் நடந்துகொண்டு வருகின்றது. இவர்களுக்கு முன்னிருந்த சமூகத்தாரிடம் எந்த ஓர் இறைத்தூதர் வந்தாலும் அவரை அம்மக்கள் “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்றுதான் கூறினார்கள்.
51:52. இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களுக்கு எந்த தூதரும் வந்ததில்லை, (அவர்களிடம் வந்த அத்தூதரை) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறியே தவிர
51:53 اَتَوَاصَوْا بِهٖۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَۚ
اَتَوَاصَوْا இவர்கள் தங்களுக்குள் உபதேசித்துக் கொண்டார்களா? بِهٖۚ இதை بَلْ மாறாக هُمْ இவர்கள் قَوْمٌ மக்கள் طَاغُوْنَۚ வரம்பு மீறிய(வர்கள்)
51:53. இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
51:53. (இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம்பரை பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! இல்லை, அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக் கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர்.
51:53. இவர்கள் அனைவரும் இது தொடர்பாக தமக்குள் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இவர்கள் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாவர்.
51:53. இவ்வாறு (கூறுமாறே) அவர்கள் (தங்களுக்குள் பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனரா? இல்லை! அவர்கள் (இயற்கையிலேயே) அட்டூழியம் செய்யும் கூட்டத்தாராவர்.
51:54 فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ
فَتَوَلَّ ஆகவே விலகுவீராக عَنْهُمْ அவர்களை விட்டு فَمَاۤ اَنْتَ நீர் இல்லை بِمَلُوْمٍ பழிக்கப்பட்டவராக
51:54. ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
51:54. (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (அவர்கள் நிராகரிப்பதைப் பற்றி) நீர் நிந்திக்கப்பட மாட்டீர்.
51:54. ஆகவே (நபியே!) இவர்களை விட்டு முகம் திருப்பிக் கொள்ளும். நீர் பழிப்புக்குரியவரல்லர்.
51:54. ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (அதற்காக) நீர் நிந்திக்கபடுபவரல்லர்.
51:55 وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ
وَّذَكِّرْ நீர் நல்லுபதேசம் செய்வீராக! فَاِنَّ நிச்சயமாக الذِّكْرٰى நல்லுபதேசம் تَنْفَعُ பலனளிக்கும் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு
51:55. மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
51:55. (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக. நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும்.
51:55. ஆயினும், அறிவுரை கூறிக்கொண்டிருப்பீராக! ஏனெனில், அறிவுரை இறைநம்பிக்கை கொள்வோருக்குப் பயனளிக்கக் கூடியதாகும்.
51:55. மேலும் (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனென்றால் நிச்சயமாக நல்லுபதேசம் விசுவாசிகளுக்குப் பயனளிக்கும்.
51:56 وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
وَمَا خَلَقْتُ நான் படைக்கவில்லை الْجِنَّ ஜின்களையும் وَالْاِنْسَ மனிதர்களையும் اِلَّا தவிர لِيَعْبُدُوْنِ அவர்கள் என்னை வணங்குவதற்கே
51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
51:56. ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் என்னை அறிந்து) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை.
51:56. நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை.
51:56. மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.
51:57 مَاۤ اُرِيْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِيْدُ اَنْ يُّطْعِمُوْنِ
مَاۤ اُرِيْدُ நான் நாடவில்லை مِنْهُمْ அவர்களிடம் مِّنْ رِّزْقٍ எவ்வித உணவையும் وَّمَاۤ اُرِيْدُ நான் நாடவில்லை اَنْ يُّطْعِمُوْنِ அவர்கள் எனக்கு உணவளிப்பதையும்
51:57. அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
51:57. அவர்களிடத்தில் நான் ஒரு பொருளையும் கேட்கவில்லை. அவர்கள் எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் நான் கோரவில்லை. (ஆகவே,)
51:57. நான் அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளித்திட வேண்டுமென்றும் நான் நாடவில்லை.
51:57. அவர்களிடத்தில் (என் படைப்புகளுக்காக) நான் யாதொரு உணவையும் நாடவில்லை, அன்றியும், எனக்கு அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
51:58 اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ
اِنَّ நிச்சயமாக اللّٰهَ هُوَ அல்லாஹ்தான் الرَّزَّاقُ (எல்லோருக்கும்) உணவளிப்பவன் ذُو الْقُوَّةِ பலமுள்ளவன் الْمَتِيْنُ மிக உறுதியுடையவன்
51:58. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
51:58. (நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான்.
51:58. நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனாகவும், பெரும் ஆற்றலுடையவனாகவும், வலிமைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
51:58. (நபியே! நீர் கூறுவீராக:) “நிச்சயமாக அல்லாஹ்_அவன்தான் (யாவருக்கும்) மிக்க உணவளிப்பவன், பலமுடையவன், உறுதியானவன்.”
51:59 فَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُوْنِ
فَاِنَّ நிச்சயமாக لِلَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களுக்கு ذَنُوْبًا பெரிய பங்குண்டு مِّثْلَ போல ذَنُوْبِ பெரிய பங்கு اَصْحٰبِهِمْ அவர்களின் கூட்டாளிகளுடைய فَلَا يَسْتَعْجِلُوْنِ ஆகவே, அவர்கள் அவசரமாகத் தேடவேண்டாம்
51:59. எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு; ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
51:59. இவ்வக்கிரமக்காரர்களின் நண்பர்களுக்கு இருந்த (நன்மை, தீமையை அளக்கக்கூடிய) அளவுப் படிகளைப் போலவே, நிச்சயமாக இவர்களுக்கும் அளவுப் படிகளுண்டு. (அவை நிறைந்ததும் வேதனையைக் கொண்டு இவர்களைப் பிடித்துக் கொள்வோம்.) ஆதலால், அவர்கள் அவசரப்பட வேண்டாம்.
51:59. இவர்களுக்கு முன்னிருந்த கொடுமைக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட வேதனையின் பங்கு போலவே, இந்தக் கொடுமைக்காரர்களுக்கும், அவர்களுடைய வேதனை தயாராக இருக்கின்றது. அதற்காக இவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.
51:59. எனவே, நிச்சயமாக அநியாயம் செய்து விட்டார்களே, அவர்களுக்கு (முன் வாழ்ந்த) அவர்களுடைய சிநேகிதர்களுக்கிருந்த பங்கைப்போன்று (வேதனையில்) பங்குண்டு ஆகவே, அவர்கள் (தண்டனைக்காக என்னிடம்) அவசரப்படவேண்டாம்.
51:60 فَوَيْلٌ لِّـلَّذِيْنَ كَفَرُوْا مِنْ يَّوْمِهِمُ الَّذِىْ يُوْعَدُوْنَ
فَوَيْلٌ ஆகவே, நாசம் உண்டாகட்டும் لِّـلَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு مِنْ يَّوْمِهِمُ அவர்களின் நாளில் الَّذِىْ எது يُوْعَدُوْنَ அவர்கள் வாக்களிக்கப்பட்டார்கள்
51:60. ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.
51:60. (விசாரணைக்காக பாவிகளுக்கு) வாக்களிக்கப்பட்ட நாளில் இந்நிராகரிப்பவர்களுக்குக் கேடுதான்.
51:60. நிராகரிப்பாளர்களுக்கு இறுதியில் எந்த நாளைக் குறித்து அவர்களுக்கு அச்சுறுத்தப்பட்டு வருகின்றதோ, அந்த நாளில் மாபெரும் அழிவு இருக்கின்றது.
51:60. ஆகையால், நிராகரித்தோருக்கு_ அவர்கள் வாக்களிக்கப்பட்டுள்ளார்களே அத்தகைய அவர்களுடைய நாளில் கேடுதான்.