அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.
“ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
(அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.