அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்ந்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.