பக்கம் - 304 -
அல்லாஹுவின் ஏகத்துவக் கலிமாவை உயர்த்த வேண்டும் என்ற நோக்கமில்லாமல் இனவெறி அல்லது தேசப்பற்றுக்காக போர் புரிபவர்களின் முடிவு இதுதான். இவர்கள் இஸ்லாமியக் கொடியின் கீழ் போரிட்டாலும் அல்லது அதற்கும் மேலாக நபியவர்களின் படையிலிருந்தாலும் இவர்கள் செல்லுமிடம் நரகம்தான்.

மேற்க்கூறப்பட்ட நிகழ்ச்சிக்கு மாற்றமாக மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது ஸஅலபா கிளையைச் சேர்ந்த யூதர்களில் ஒருவரும் போரில் கொல்லப்பட்டார். அவரது பெயர் முகைரீக். அவர் தனது இனத்தவரிடம் “யூதர்களே! அல்லாஹிவின் மீது ஆணையாக! முஹம்மதுக்கு உதவி செய்வது உங்களுக்கு மீது கட்டாயக் கடமை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்தானே?” எனக் கூறினார். அதற்கவர்கள் “இன்றைய தினம் சனிக்கிழமை அல்லவா நாம் எப்படி போருக்கு செல்ல முடியும்?” என்று எதிர்கேள்வி கேட்டனர். “உங்களுக்கு சனிக்கிழமை என்பதே இல்லாமலாகட்டும்!” என்று கோபமாக கூறி தனது வாளையும் ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு “நான் போரில் கொல்லப்பட்டு விட்டால் எனது செல்வங்கள் அனைத்தும் முஹம்மது அவர்களைச் சாரும் அதை அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ளலாம்” என்று கூறி, போரில் கலந்து வீரமரணமடைந்தார். இவரை பற்றிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு தெரியவர “முகைரீக் யூதர்களில் மிகச் சிறந்தவர்” என்று அவரை பற்றி கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

தியாகிகளின் உடல்களை நல்லடக்கம் செய்தல்

போரில் உயிர்நீத்த தியாகிகளை முன்னோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன். அல்லாஹ்வின் பாதையில் காயமடைந்தவரை மறுமையில் அல்லாஹ் எழுப்பும் போது அவரது காயத்திலிருந்து இரத்தம் வடியும்; அதன் நிறம் இரத்தத்தின் நிறமாகத்தான் இருக்கும்; ஆனால் அதன் மணமோ கஸ்தூரி போன்று இருக்கும்.” (இப்னு ஹிஷாம்)

நபித்தோழர்களில் சிலர் தங்கள் குடும்பத்தில் கொல்லப்பட்டவர்களை மதீனாவிற்கு எடுத்து சென்றிருந்தனர். நபியவர்கள், அவர்களை மீண்டும் உஹுதுக்கு தூக்கி வரும்படி கூறி “அவர்களை குளிப்பாட்டக் கூடாது; அவர்கள் உடலிலுள்ள போருக்குரிய ஆயுதங்களைக் கழற்றிய பின், அவர்கள் கொல்லப்பட்ட இடங்களிலேயே அவர்களை அடக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள். ஒரு கப்ரில் இரண்டு அல்லது மூன்று உடல்களை நபியவர்கள் அடக்கம் செய்தார்கள். மேலும், ஓரே ஆடையில் இருவரைப் போர்த்தினார்கள். யார் அதிகமாகக் குர்ஆனை மனனம் செய்தவர் என்று விசாரித்து அவரைப் கப்ரில் பக்கவாட்டுக் குழியில் முதலாவதாக வைத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஹராம், அம்ர் இப்னு ஜமூஹ் (ரழி) ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்ததால் இருவரையும் ஓரே கப்ரில் அடக்கம் செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)

முஸ்லிம்கள் ஹன்ளலாவைத் தேடிய போது அவரது உடல் ஒரு மூலையில் தண்ணீர் சொட்டிய நிலையில் இருந்தது. அதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் “வானவர்கள் அவரை குளிப்பாட்டுகிறார்கள்” என்று தங்களது தோழர்களிடம் கூறினார்கள். பின்பு “அவரது குடும்பத்தாரிடம் சென்று விவரம் அறிந்து வாருங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். தோழர்கள் அவரது மனைவியிடம் விசாரிக்க “ஹன்ளலா (ரழி) முழுக்குடைய நிலையில் (குளிக்க வேண்டிய நிலையில்) போரில் கலந்து கொண்டதாக” மனைவி கூறினார். இதன் காரணமாகத்தான் ஹன்ளலாவிற்கு ‘கஸீலுல் மலாயிக்கா‘ (மலக்குகள் குளிப்பாட்டியவர்) என்ற பெயர் வந்தது. (ஜாதூல் மஆது)