பக்கம் - 467 -
சிலர் “அல்லாஹ்வின் தூதரே! இந்த ஸகீஃப் கிளையினருக்கு எதிராகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) “அல்லாஹ்வே! ஸகீஃப் கிளையினருக்கு நேர்வழி காட்டுவாயாக! அவர்களை என்னிடம் வரச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

ஜிஃரானாவில் கனீமாவைப் பங்கு வைத்தல்

தாம்ஃபில் முற்றுகையை முடித்துக் கொண்டு நபி (ஸல்) ஜிஃரானா திரும்பி அங்கு பத்து நாட்களுக்கு மேலாக தங்கியிருந்தார்கள். ஆனால், கனீமத்தைப் பங்கிடவில்லை. இவ்வாறு நபி (ஸல்) தாமதப்படுத்தியதற்குக் காரணம், ‘ஹவாஜின் கிளையினர் மன்னிப்புக்கோரி தங்களிடம் வந்தால் அவர்களது பொருட்களை திரும்பக் கொடுத்து விடலாம்’ என்பதற்கே! பத்து நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் திரும்ப வராததால் கனீமா பொருட்களை நபி (ஸல்) பங்கிட்டார்கள். கோத்திரங்களின் தலைவர்களும், மக்காவின் முக்கியப் பிரமுகர்களும் தங்களின் பங்கை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். புதிதாக இஸ்லாமை ஏற்றிருந்த இவர்களுக்கு கனீமா முதலாவதாகவும் அதிகமாகவும் கொடுக்கப்பட்டது.

அபூ ஸுஃப்யானுக்கு நாற்பது ஊக்கியா வெள்ளியும், நூறு ஒட்டகைகளும் நபி (ஸல்) வழங்கினார்கள். அவர் “எனது மகன் எஜீதுக்கு?” என்று கேட்டார். நபி (ஸல்) எஜீதுக்கும் அதே அளவு வழங்கினார்கள். பின்பு “எனது மகன் முஆவியாவுக்கு?” என்று கேட்டார். அவருக்கும் அதே அளவு வழங்கினார்கள். ஹக்கீம் இப்னு ஸாமுக்கு 100 ஒட்டங்கள் வழங்கினார்கள். பின்பு ஸஃப்வான் இப்னு உமைய்யாவுக்கு மூன்று தடவை நூறு நூறாக முன்னூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். இவ்வாறே பல குறைஷித் தலைவர்களுக்கும் ஏனைய கோத்திரத்தாரின் தலைவர்களுக்கும் நூறு நூறு ஒட்டகங்கள் நபி (ஸல்) வழங்கினார்கள். (அஷ்ஷிஃபா)

மற்றவர்களுக்குகெல்லாம் ஐம்பது, நாற்பது என வழங்கினார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்தக் கொடைத் தன்மையை கண்ட மக்கள், முஹம்மது வறுமையைக் கண்டு அஞ்சாமல் வாரி வழங்குகிறார் என்று பேசினார்கள். கிராம அரபிகளும் இந்தச் செய்தியை கேட்டு பொருட்களைப் பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபியவர்களை நிர்ப்பந்தமாக தள்ளிச் சென்று, ஒரு மரத்தில் சாய்த்தனர். அவர்களை போர்வையால் இறுக்கி “அதில் எங்களுக்கும் கொடுங்கள்” என்று விடாப்பிடியாக கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) “மக்களே! எனது போர்வையை என்னிடம் கொடுத்து விடுங்கள். ‘திஹாமா’ மாநிலத்துடைய மரங்களின் எண்ணிக்கை அளவு கால்நடைகள் இருந்தால் அதையும் உங்களுக்கே பங்கிட்டுக் கொடுத்து விடுவேன். பின்பு நான் கஞ்சனாகவோ, கோழையாகவோ, பொய்யனாகவோ இல்லையென்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.”

பிறகு தனது ஒட்டகத்திற்கு அருகில் சென்று அதன் திமிலில் இருந்து சில முடிகளைப் பிடுங்கி மக்களை நோக்கி உயர்த்திக் காண்பித்து “மக்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுடைய கனீமா பொருட்களிலிருந்து ஐந்தில் ஒன்றைத் (1/5) தவிர அதிகமாக இந்த முடியின் அளவு கூட நான் எனக்காக வைத்துக் கொள்ளவில்லை. நான் பெற்றுக் கொண்ட ஐந்தில் ஒன்றும் உங்களுக்கே திருப்பி வழங்கப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள்.

மற்ற கனீமா பொருட்கள் அனைத்தையும் கொண்டு வரும்படி ஜைது இப்னு ஸாபித்துக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். மக்கள் அனைவரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். மீதமிருந்த பொருட்களை எல்லாம் நபி (ஸல்) மக்களுக்கு பங்கிட்டார்கள். காலாட்படை வீரர்களுக்கு நான்கு ஒட்டகங்கள் அல்லது நாற்பது ஆடுகள் வழங்கப்பட்டன. குதிரை வீரருக்கு 12 ஒட்டகங்கள் அல்லது 120 ஆடுகள் வழங்கப்பட்டன.