பக்கம் - 481 -
(போருக்குரிய) வாகனத்தை நீங்கள் தருவீர்கள் என உங்களிடம் வந்தவர்களுக்கு “உங்களை ஏற்றிச் செல்லக் கூடிய வாகனம் என்னிடம் இல்லையே” என்று நீங்கள் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாது போன துக்கத்தினால் எவர்கள் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி யாதொரு குற்றமுமில்லை.) (அல்குர்ஆன் 9:92)

முஸ்லிம்கள் அனைவரும் தங்களால் முடிந்தளவு அல்லாஹ்வின் பாதையில் பொருட்களைச் செலவு செய்வதிலும், இயலாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதிலும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டனர். நபி (ஸல்) அவர்களின் உற்ற தோழர் உஸ்மான் (ரழி) ஷாம் நாட்டு வியாபாரத்திற்கு அனுப்புவதற்காக ஒரு குழுவை தயார் செய்து வைத்திருந்தார்கள். அதில் இருநூறு ஒட்டகைகள், அதற்குரிய முழு சாதனங்களுடன் இருந்தன. மேலும், இருநூறு ஊக்கியா வெள்ளிகளும் இருந்தன. அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு அவை அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் தர்மமாக வழங்கினார்கள். பின்பு ஓரு நாட்கள் கழித்து முழு சாதனங்களுடன் உள்ள நூறு ஒட்டகைகளை தர்மமாக வழங்கிவிட்டு ஆயிரம் தங்க காசுகளை நபி (ஸல்) அவர்களின் மடியில் பரப்பினார்கள். அதை நபி (ஸல்) புரட்டியவர்களாக “இன்றைய தினத்திற்குப் பின் உஸ்மான் எது செய்தாலும் அது அவருக்கு இடையூறளிக்காது” எனக் கூறினார்கள். (ஜாமிவுத் திர்மிதி)

இந்தளவுடன் நிறுத்திக் கொள்ளாமல் உஸ்மான் (ரழி) மேன்மேலும் அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்கினார்கள். இப்போருக்காக மொத்தத்தில் தொள்ளாயிரம் ஒட்டகைகளையும், நூறு குதிரைகளையும் வழங்கினார்கள். இதுமட்டுமின்றி ஏராளமானத் தங்க வெள்ளி காசுகளையும் வாரி வழங்கினார்கள்.

இப்போருக்காக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) இருநூறு ஊக்கியா வெள்ளிகளை வழங்கினார்கள். அபூபக்ர் (ரழி) தனது செல்வம் அனைத்தையும் வழங்கினார்கள். தனது குடும்பத்தினருக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தவிர வேறெதையும் விட்டு வைக்கவில்லை. இப்போருக்காக முதன் முதலில் தனது பொருளை வழங்கியவர் அவர்தான். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கியது மொத்தம் நான்காயிரம் திர்ஹமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது செல்வத்தில் பாதியை, அப்பாஸ் (ரழி) பெரும் செல்வத்தை, தல்ஹா, ஸஅது இப்னு உபாதா, முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) ஆகியோரும் தங்களின் பெரும்பகுதி செல்வத்தை வழங்கினார்கள். ஆஸிம் இப்னு அதி (ரழி) தொண்ணூறு வஸ்க் பேரீத்தம் பழங்களை வழங்கினார்கள். இவ்வாறு குறைவாகவோ அதிகமாகவோ தங்களால் முடிந்ததை எவ்விதக் கஞ்சத்தனமுமின்றி மக்கள் அல்லாஹ்வின் பாதையில் வழங்கினார்கள். ஒரு சிலர், ஒன்று அல்லது இரண்டு ‘முத்“கள் (ம்முத்’ என்பது ஓர் அளவாகும்.) தானியங்களை வழங்கினர். அதைத் தவிர அவர்களிடம் வேறெதுவும் இருக்கவில்லை. பெண்கள் தங்களிடமிருந்த வளையல்கள், கால், காது அணிகலன்கள், மோதிரங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டார்கள். உள்ளத்தில் நயவஞ்சகத் தன்மை உள்ளவர்களே அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கருமித்தனம் செய்தனர்.