பக்கம் - 502 -
இவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்நேரத்தில் நபி (ஸல்) குர்ஆனை ஓதிக் காண்பித்து இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். ஆனால், இம்மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஈஸா (அலை) பற்றி விசாரித்தார்கள். அன்றைய தினம் நபி (ஸல்) பதில் கூறாமல் அல்லாஹ்வின் வஹியை எதிர்பார்த்து தாமதித்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு பின்வரும் வசனத்தை இறக்கினான்.

(நபியே!) உங்களுக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உங்களிடம் எவரும் இதைப் பற்றி தர்க்கித்தால் “வாருங்கள் எங்களுடைய பிள்ளைகளையும், உங்களுடைய பிள்ளைகளையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக் கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்” என்று நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் 3:61)

மறுநாள் காலை அம்மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அல்லாஹ் தனக்கு இறக்கிய வசனங்களின் வெளிச்சத்தில் ஈஸாவைப் பற்றித் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய தினம் நன்றாக யோசித்துக் கொள்ள அனுமதி வழங்கினார்கள். ஆனால், அம்மக்கள் ஈஸா (அலை) விஷயத்தில் நபி (ஸல்) கூறுவதை ஏற்க மறுத்து விட்டனர்.

மறுநாள் காலை நபியவர்களை சந்திக்க வந்த இவர்களை நபி (ஸல்) “வாருங்கள் அசத்தியத்தில் இருப்பவரை அல்லாஹ் அழித்துவிட பிரார்த்திப்போம்” என்று அழைத்தார்கள். நபி (ஸல்) ஒரு போர்வையில் ஹசன், ஹுசைன் (ரழி) இருவரையும் சேர்த்துக் கொண்டார்கள். ஃபாத்திமா (ரழி) நபி (ஸல்) அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் நடந்து வந்தார்கள். நபி (ஸல்) உறுதியாக இருப்பதைக் கண்ட அவர்கள் தனியே தங்களுக்குள் ஆலோசனை செய்தனர். அப்போது ஆகிப், சய்யிது இருவரும் ஒருவர் மற்றவரிடம் “இவ்வாறு செய்யாதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உண்மையில் நபியாக இருந்து நாம் சாபத்திற்குச் சென்றால் ஒருக்காலும் நாம் வெற்றியடைய முடியாது. நமக்குப் பின் எவரும் மிஞ்சவும் மாட்டார். நமது இன மக்கள் ஒருவர் கூட இல்லாமல் அழிந்து விடுவார்கள்” என்று கூறினார்.

இதற்குப் பின் அனைவரும் ஒன்றுகூடி, “நபி (ஸல்) அவர்களை நடுவராக்கிக் கொண்டு அவர் கூறும் ஆலோசனையை ஏற்றுக் கொள்வோம்” என ஒருமித்துக் கூறினார். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நீங்கள் கேட்பதை நாங்கள் தந்து விடுகிறோம். ஒவ்வோர் ஆண்டிலும் ரஜப் மாதம் ஆயிரம் ஆடைகளும், ஸஃபர் மாதம் ஆயிரம் ஆடைகளும் தந்து ஒவ்வொரு ஆடையுடன் ஓர் ஊக்கியா வெள்ளியையும் தந்து விடுகிறோம்” என சமாதானம் பேசினார்கள். நபியவர்களும் அதனை ஒத்துக்கொண்டு அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பாதுகாப்பையும் நபியவர்களுடைய பாதுகாப்பையும் வழங்கினார்கள். அவர்களுடைய மத விஷயங்களில் முழு சுதந்திரம் வழங்கினார்கள். இதுகுறித்த ஒப்பந்தத்தையும் அவர்களுக்கு எழுதித் தந்தார்கள். அம்மக்கள் ஒப்பந்தப் பொருளை வழங்குவதற்காக நம்பிக்கைக்குரிய ஓர் ஆளை தங்களுடன் அனுப்பும்படி வேண்டினர். அதன்படி இச்சமுதாயத்தில் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் என சிறப்புப் பெயர் கொண்ட அபூ உபைதாவை அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள்.