حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ،. وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، قَالَ الزُّهْرِيُّ فَأَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْوَحْىِ الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ، فَكَانَ لاَ يَرَى رُؤْيَا إِلاَّ جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ، فَكَانَ يَأْتِي حِرَاءً فَيَتَحَنَّثُ فِيهِ ـ وَهْوَ التَّعَبُّدُ ـ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ، وَيَتَزَوَّدُ لِذَلِكَ ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ فَتُزَوِّدُهُ لِمِثْلِهَا، حَتَّى فَجِئَهُ الْحَقُّ وَهْوَ فِي غَارِ حِرَاءٍ فَجَاءَهُ الْمَلَكُ فِيهِ فَقَالَ اقْرَأْ. فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي. فَقَالَ اقْرَأْ. فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ. فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ. فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ. فَغَطَّنِي الثَّالِثَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ". حَتَّى بَلَغَ {مَا لَمْ يَعْلَمْ} فَرَجَعَ بِهَا تَرْجُفُ بَوَادِرُهُ حَتَّى دَخَلَ عَلَى خَدِيجَةَ فَقَالَ " زَمِّلُونِي زَمِّلُونِي ". فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ فَقَالَ " يَا خَدِيجَةُ مَا لِي ". وَأَخْبَرَهَا الْخَبَرَ وَقَالَ " قَدْ خَشِيتُ عَلَى نَفْسِي ". فَقَالَتْ لَهُ كَلاَّ أَبْشِرْ، فَوَاللَّهِ لاَ يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الْحَدِيثَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ. ثُمَّ انْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى بْنِ قُصَىٍّ ـ وَهْوَ ابْنُ عَمِّ خَدِيجَةَ أَخُو أَبِيهَا، وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعَرَبِيَّ فَيَكْتُبُ بِالْعَرَبِيَّةِ مِنَ الإِنْجِيلِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ ـ فَقَالَتْ لَهُ خَدِيجَةُ أَىِ ابْنَ عَمِّ اسْمَعْ مِنِ ابْنِ أَخِيكَ. فَقَالَ وَرَقَةُ ابْنَ أَخِي مَاذَا تَرَى فَأَخْبَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مَا رَأَى فَقَالَ وَرَقَةُ هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى مُوسَى، يَا لَيْتَنِي فِيهَا جَذَعًا أَكُونُ حَيًّا، حِينَ يُخْرِجُكَ قَوْمُكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَوَمُخْرِجِيَّ هُمْ ". فَقَالَ وَرَقَةُ نَعَمْ، لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمَا جِئْتَ بِهِ إِلاَّ عُودِيَ، وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا. ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ، وَفَتَرَ الْوَحْىُ فَتْرَةً حَتَّى حَزِنَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِيمَا بَلَغَنَا حُزْنًا غَدَا مِنْهُ مِرَارًا كَىْ يَتَرَدَّى مِنْ رُءُوسِ شَوَاهِقِ الْجِبَالِ، فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ لِكَىْ يُلْقِيَ مِنْهُ نَفْسَهُ، تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا. فَيَسْكُنُ لِذَلِكَ جَأْشُهُ وَتَقِرُّ نَفْسُهُ فَيَرْجِعُ، فَإِذَا طَالَتْ عَلَيْهِ فَتْرَةُ الْوَحْىِ غَدَا لِمِثْلِ ذَلِكَ، فَإِذَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ. قَالَ ابْنُ عَبَّاسٍ {فَالِقُ الإِصْبَاحِ} ضَوْءُ الشَّمْسِ بِالنَّهَارِ، وَضَوْءُ الْقَمَرِ بِاللَّيْلِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (வஹீ எனும்) இறைச்செய்தியின் ஆரம்பம், உறக்கத்தில் காணும் உண்மையான கனவுகளாகவே அமைந்தன. அவர்கள் எந்தக் கனவைக் கண்டாலும் அது விடியற்காலையைப் போன்று (தெளிவாகப்) பலிதமாகும். பின்னர் தனிமை அவர்கள் மீது விருப்பமாக்கப்பட்டது. அவர்கள் 'ஹிரா' குகைக்குச் சென்று, பல இரவுகள் அங்கே தஹன்னுத் (வணக்கம்) புரிவார்கள். அதற்காக (உணவு) முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வார்கள். பின்னர் (தம் மனைவி) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, அதேபோன்று (அடுத்த முறை செல்வதற்கும்) ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள்.
அவர்கள் ஹிரா குகையில் இருந்தபோது அவர்களிடம் சத்தியம் (வஹீ) வந்தது. வானவர் அவர்களிடம் வந்து, "ஓதுவீராக" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் ஓதத் தெரிந்தவன் அல்லன்" என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவர் என்னைப் பிடித்து, என்னால் தாங்க முடியாத அளவு இருக்கும் வரை இறுகக் கட்டித் தழுவினார். பிறகு என்னை விட்டுவிட்டு 'ஓதுவீராக' என்றார். நான் 'ஓதத் தெரிந்தவன் அல்லன்' என்றேன். இரண்டாம் முறையும் அவர் என்னைப் பிடித்து, என்னால் தாங்க முடியாத அளவு இருக்கும் வரை இறுகக் கட்டித் தழுவினார். பிறகு என்னை விட்டுவிட்டு 'ஓதுவீராக' என்றார். நான் 'ஓதத் தெரிந்தவன் அல்லன்' என்றேன். மூன்றாம் முறையும் அவர் என்னைப் பிடித்து, என்னால் தாங்க முடியாத அளவு இருக்கும் வரை இறுகக் கட்டித் தழுவினார். பிறகு என்னை விட்டுவிட்டு,
'படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை 'அலக்' (கருக்கட்டி)யிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி.. அவன் (மனிதனுக்கு) அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்' (திருக்குர்ஆன் 96:1-5)
என்று கூறினார்."
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைச்செய்தியுடன் திரும்பினார்கள். (பயத்தால்) அவர்களின் தோள் சதைகள் துடித்தன. அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து, "என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்!" என்றார்கள். அவர்களின் நடுக்கம் நீங்கும் வரை அவரைப் போர்த்தினார்கள். பிறகு அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம், "கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டு, நடந்த செய்தியைத் தெரிவித்து, "நான் என் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்குக் கதீஜா (ரலி) அவர்கள், "அப்படியில்லை! (பயப்படாதீர்கள்). நற்செய்தியையே எதிர்பருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டான். தாங்கள் உறவுகளைப் பேணுகிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்கு உதவுகிறீர்கள்; விருந்தினரை உபசரிக்கிறீர்கள்; சோதனைகளில் (மக்களுக்கு) உதவுகிறீர்கள்" என்று கூறினார்கள்.
பிறகு கதீஜா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களை வரகா இப்னு நவ்ஃபல் இப்னு அஸத் இப்னு அப்துல் உஸ்ஸா இப்னு குஸை என்பவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் கதீஜாவின் தந்தையுடைய சகோதரர் (பெரியப்பா) மகன் ஆவார். அவர் அறியாமைக் காலத்தில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவராகவும், அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இருந்தார். அவர் இன்ஜீல் வேதத்திலிருந்து அல்லாஹ் நாடியதை அரபு மொழியில் எழுதுபவராக இருந்தார். அவர் கண்பார்வை இழந்த முதியவராக இருந்தார்.
அவரிடம் கதீஜா (ரலி), "என் தந்தையின் சகோதரர் மகனே! உங்கள் சகோதரர் மகன் கூறுவதைக் கேளுங்கள்" என்றார். வரகா அவரிடம், "என் சகோதரர் மகனே! நீர் என்ன காண்கிறீர்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தாம் கண்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.
அப்போது வரகா, "மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் அனுப்பிய அதே 'நாமஸ்' (ஜிப்ரீல் எனும் வானவர்) தான் இவர். உமது சமுதாயத்தினர் உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றும் போது நான் உயிருடனும் வாலிபராகவும் இருக்க வேண்டுமே!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் என்னை வெளியேற்றுவார்களா?" என்று கேட்டார்கள். அதற்கு வரகா, "ஆம். நீர் கொண்டு வந்ததைப் போன்று கொண்டு வந்த எவரும் பகைக்கப்படாமல் இருந்ததில்லை. உமது (சமுதாயத்தினரின் எதிர்ப்பை எதிர்கொள்ளும்) காலத்தை நான் அடைந்தால், உமக்கு நான் வலுவான உதவி செய்வேன்" என்று கூறினார்.
பிறகு வரகா விரைவிலேயே இறந்துவிட்டார். வஹீ வருவது சிறிது காலம் தடைபட்டது. இதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையுற்றார்கள். நமக்கு எட்டிய செய்தியின்படி, அவர்கள் கவலையின் காரணமாகப் பலமுறை மலை உச்சிகளிலிருந்து கீழே விழுந்து விடச் சென்றார்கள் (அதிக கவலையால் தற்கொலை எண்ணத்துடன்). அவர்கள் மலையுச்சியிலிருந்து கீழே விழச் செல்லும் போதெல்லாம் அவர்களுக்கு ஜிப்ரீல் தோன்றி, "முஹம்மதே! நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் உண்மையான தூதர் தான்" என்று கூறுவார். இதனால் அவர்களின் மனம் அமைதியுற்று, அவர்களின் பதற்றம் தணியும். உடனே அவர்கள் திரும்பி விடுவார்கள். வஹீ வருவது நீண்ட காலத்திற்குத் தடைபட்டால், மீண்டும் அதுபோன்று செய்வார்கள். அவர்கள் மலை உச்சிக்குச் செல்லும் போது அவர்களுக்கு ஜிப்ரீல் தோன்றி, முன்பு கூறியது போன்றே கூறுவார்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (திருக்குர்ஆன் 6:96 வசனத்தில் உள்ள) 'ஃபாலிக்குல் இஸ் பாஹ்' (விடியலைப் பிளப்பவன்) என்பதற்கு, பகலில் சூரியனின் ஒளி என்றும் இரவில் நிலவின் ஒளி என்றும் விளக்கம் அளித்தார்கள்.