பக்கம் -53-
தற்காப்புத் திட்டம்
நபி (ஸல்) தங்களது படையைக் கட்டமைத்தார்கள். பல அணிகளாக அவர்களை நியமித்த பின்பு திறமையாக
அம்பெய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த 50 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத்
தலைவராக பத்ர் போரில் கலந்து கொண்ட அவ்ஸ் கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்
இப்னு நுஃமான் அல் அன்ஸாயை (ரழி) நியமித்தார்கள். பின்பு அவர்களை ‘கனாத்’ என்ற பள்ளத்தாக்கின்
வடக்குப் பக்கம் அமைந்துள்ள மலையில் நிலையாக தங்கி, முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டுமென்று
பணித்தார்கள். இம்மலை முஸ்லிம்களின் ராணுவ முகாம்களிலிருந்து தென் கிழக்கில் சுமார்
150 மீட்டர் தொலைவில் இருந்தது.
நபி (ஸல்) இந்த அம்பு எறியும் வீரர்களுக்குக் கூறிய அறிவுரைகளிலிருந்து இப்படையினரை
அங்கு நியமித்ததின் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். நபியவர்கள் தளபதிக்குக் கூறிய உபதேசம்
வருமாறு: “எதிரிகளின் குதிரைப் படை எங்களை நெருங்கவிடாமல் அம்பெய்து அவர்களை நீர் தடுக்க
வேண்டும். எதிரிகள் எங்களுக்குப் பின்புறத்திலிருந்து வந்துவிடக் கூடாது. போர் நமக்கு
சாதகமாக அல்லது பாதகமாக அமைந்தாலும் நீர் உனது இடத்தில் நிலையாக இருக்க வேண்டும். உமது
வழியாக எதிரிகள் எங்களை தாக்கிவிடக் கூடாது.” (இப்னு ஹிஷாம்)
இவ்வாறு தளபதிக்கு உபதேசம் செய்த பிறகு, மற்ற வீரர்களுக்கு நபி (ஸல்) பின்வருமாறு அறிவுரை
கூறினார்கள்: “நீங்கள் எங்களின் முதுகுப் பக்கங்களை (பிற்பகுதியை) பாதுகாத்து கொள்ளுங்கள்,
நாங்கள் போரில் கொல்லப்படுவதைப் பார்த்தாலும் நீங்கள் எங்களுக்கு உதவ வராதீர்கள் நாங்கள்
வெற்றி பெற்று பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தாலும் அதிலும் நீங்கள் எங்களுடன் இணைந்து
விடாதீர்கள்.” (முஸ்னது அஹ்மது, முஃஜமுத் தப்ரானி)
இதே அறிவுரை ஸஹீஹுல் புகாரியில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது: “எங்களைப் பறவைகள் கொத்தித்
தின்பதைப் நீங்கள் பார்த்தாலும், நான் உங்களுக்கு கூறியனுப்பும் வரை உங்களது இடத்தை
விட்டு நீங்கள் அகன்றிட வேண்டாம். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து அவர்களின் சடலங்களை
மிதித்து செல்வதைப் பார்த்தாலும் நான் கூறியனுப்பும் வரை நீங்கள் அகன்றிட வேண்டாம்.”
நபியவர்கள் இவ்வாறு கடுமையான ராணுவச் சட்டங்களைக் கூறி இந்த சிறிய குழுவை மலையில் நிறுத்தியதின்
மூலம், முஸ்லிம்களின் பின்புறமாக எதிரிகள் ஊடுருவி அவர்களைச் சுற்றி வளைத்து தாக்குதல்
நடத்த வாய்ப்புள்ள ஒரு முக்கிய வழியை அடைத்து விட்டார்கள்.
படையின் வலப்பக்கத்தில் முன்திர் இப்னு அம்ர் (ரழி) அவர்களையும், இடப்பக்கத்தில் ஜுபைர்
இப்னு அவ்வாம் (ரழி) அவர்களையும், ஜுபைருக்கு உதவியாக மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி)
அவர்களையும் நியமித்தார்கள். காலித் இப்னு வலீதின் தலைமையிலுள்ள எதிரிகளின் குதிரைப்
படைகளை எதிர்க்கும் பொறுப்பை இடப்பக்கத்தில் நிறுத்தியிருந்த ஜுபைர் இப்னு அவ்வாம்
(ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். மேலும், முஸ்லிம்களுடைய அணிகளின் முன் பகுதியில் வீரத்திலும்
துணிவிலும் பிரபல்யமான, மேலும் ஒருவரே ஆயிரம் நபருக்கு சமமானவர் என்று புகழ்பெற்ற சிறந்த
வீரர்களின் ஒரு குழுவை தேர்வு செய்து நிறுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இத்திட்டமும் ராணுவ அமைப்பும் மிக்க நுட்பமானதாகவும் ஞானமிக்கதாகவும்
இருந்தது. இதன் மூலம் நபியவர்களின் போர் நிபுணத்துவத்தின் தனிச்சிறப்பு தெளிவாகிறது.
மேலும், ஒரு தளபதி அவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் நபியவர்கள் வகுத்த இத்திட்டத்தை
விட சிறந்ததை நுணுக்கமானதை அவரால் ஏற்படுத்திட இயலாது. எதிரிகளின் போர்க்களம் வந்த
பின்புதான் நபியவர்கள் தனது படையுடன் வந்தார்கள். இருப்பினும், மிகச் சிறந்த இடத்தை
அங்கு தேர்வு செய்தார்கள். படையின் பின் பக்கத்தையும் வலப்பக்கத்தையும் உயரமான மலைகளைக்
கொண்டு பாதுகாத்துக் கொண்டார்கள். போர் கடுமையாக மூழும்போது இஸ்லாமியப் படையை எதிரிகள்
வந்து தாக்குவதற்குக் காரணமாக இருக்கும் ஒரே வழியையும் அடைத்து விட்டதால் படையின் பின்பக்கத்தையும்
இடப்பக்கத்தையும் நபியவர்கள் பாதுகாத்தார்கள். முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்பட்டால் பின்வாங்கும்
போது விரட்டி வரும் எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக தங்களது படைக்கு உயரமான
இடத்தை நபியவர்கள் தேர்வு செய்தார்கள்.
மேலும், எதிரிகள் தங்களை நோக்கி முன்னேறி தங்களையும் தங்களது ராணுவ முகாம்களையும் கைப்பற்றிட
நினைக்கும் போது அவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த இது வசதியாக இருக்கும். எதிரிகளை
மைதானத்தின் மிகத் தாழ்ந்த பகுதியில் நபியவர்கள் ஒதுக்கி விட்டதில் மிகப் பெரிய நன்மை
இருந்தது. அதாவது, ஒருக்கால் எதிரிகளுக்கு வெற்றி ஏற்பட்டால் எதிரிகள் வெற்றியின் பலனை
முழுமையாக அடைந்துகொள்ள முடியாது. வெற்றி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டால் முஸ்லிம்கள் எதிரிகளை
விரட்டிப் பிடிக்கும் போது முஸ்லிம்களின் கையிலிருந்து அவர்களால் தப்பித்துக் கொள்ளவும்
முடியாது. இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தங்களது தோழர்களில் வீரத்தால்
புகழ் பெற்றவர்களை தேர்வு செய்து படையின் முன் நிறுத்தி அந்தக் குறையை நிறைவு செய்தார்கள்.
ஆக, ஹிஜ்ரி 3 ஷவ்வால் மாதம், பிறை 7 சனிக்கிழமை காலையில் நபி (ஸல்) அவர்கள் தங்களது
படையை இவ்வாறு அமைத்து போருக்கு ஆயத்தமானார்கள்.
நபியவர்கள் படையினருக்கு வீரமூட்டுகிறார்கள்
தான் கட்டளையிடும் வரை போரை ஆரம்பிக்கக் கூடாது என்று வீரர்களுக்குத் தடை விதித்தார்கள்.
நபியவர்கள் இரண்டு கவச ஆடை அணிந்திருந்தார்கள். தங்களது தோழர்களுக்குப் போர் புரிவதற்கு
ஆர்வமூட்டியதுடன், எதிரிகளைச் சந்திக்கும் போது சகிப்புடன் இருந்து வீரத்தை வெளிப்படுத்தத்
தூண்டினார்கள். தங்களின் தோழர்களுக்கு வீரத்தை ஊட்டும் வகையில் ஒரு கூர்மையான வாளை
உருவி தங்களது தோழர்களிடம் “இவ்வாளை என்னிடம் வாங்கி அதற்குரிய கடமையை நிறைவேற்றுபவர்
யார்?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்களிடமிருந்து அதை வாங்குவதற்கு பலர் முன்
வந்தனர். அவர்களில் அலீ இப்னு அபூதாலிப், ஜுபைர் இப்னு அவ்வாம், உமர் இப்னு கத்தாப்
(ரழி) ஆகியோரும் அடங்குவர்.
இறுதியாக, அபூ துஜானா என்று அழைக்கப்படும் சிமாக் இப்னு கரஷா (ரழி) அவர்கள் எழுந்து
“அல்லாஹ்வின் தூதரே! அதற்குரிய கடமை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “இந்த
வாள் வளையும் வரை இதன் மூலம் எதிரிகளின் முகங்களை நீ வெட்ட வேண்டும்” என்றார்கள். “இறைத்தூதரே!
இதன் கடமையை நான் நிறைவேற்றுவேன்” என்று அபூ துஜானா (ரழி) கூறினார்கள். நபியவர்கள்
அவருக்கு அந்த வாளைக் கொடுத்தார்கள். அபூ துஜானா (ரழி) மாபெரும் போர் வீரராக இருந்தார்.
போர் சமயத்தில் மிகுந்த பெருமையுடன் நடந்து செல்வார். அவரிடம் ஒரு சிவப்பு நிற தலைப்பாகை
இருந்தது. அத்தலைப்பாகையை அவர் அணிந்து கொண்டால் மரணிக்கும் வரை போர் புரிவார் என்று
மக்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்வார்கள். நபியவர்களின் கரத்திலிருந்து வாளை அபூ துஜானா
(ரழி) வாங்கியவுடன், தான் வைத்திருந்த சிவப்பு தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு இரு அணிகளுக்கிடையில்
பெருமையுடன் நடந்தார். இதைப் பார்த்த நபியவர்கள் “இவ்வாறு நடப்பதை அல்லாஹ் வெறுக்கிறான்.
ஆனால், இதுபோன்ற இடங்களிலேயே தவிர!” என்று கூறினார்கள்.
மக்கா படையின் அமைப்பு
இணைவைப்பவர்கள் தங்களது படையைப் பல அணிகளாக அமைத்தனர். படையினரின் உள்ளத்தில் இடம்
பிடித்திருந்த அபூ ஸுஃப்யான் ஸக்ர் இப்னு ஹர்ப் போரின் பொதுத் தளபதியாக இருந்தார்.
படையின் வலப்பக்கத்திற்குக் காலித் இப்னு வலீத் தலைமையேற்றார். இடப்பக்கத்திற்கு இக்மா
இப்னு அபூஜஹ்ல் தலைமையேற்றார். காலாட்படை வீரர்களுக்கு ஸஃப்வான் இப்னு உமய்யாவும் அம்பெறியும்
வீரர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபூ ரபீஆவும் தலைமை வகித்தனர்.
“அப்து தார்’ என்ற குடும்பத்தினர் இப்படையின் கொடியை வைத்திருந்தனர். குஸை இப்னு கிலாபிடமிருந்து
அப்து மனாஃப் குடும்பத்தினர் பதவிகளையும் தகுதிகளையும் பங்கு வைத்துக் கொண்டபோது அப்து
தார் குடும்பத்தினருக்கு போரில் கொடி பிடிக்கும் பதவி கிடைத்தது. இதன் விவரத்தை இந்நூலின்
தொடக்கத்தில் நாம் கூறியிருக்கின்றோம். இப்பதவியில் அவர்களிடம் வேறு யாரும் போட்டி
போட்டு அதை பறித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக இந்தச் சடங்குகளை
அவர்கள் பின்பற்றி வந்தனர். எனினும், படையின் பொதுத் தளபதியான அபூ ஸுஃப்யான் பத்ர்
போரில் கொடியை ஏந்தியிருந்த நழ்ர் இப்னு ஹாரிஸ் கைது செய்யப்பட்டதால் குறைஷிகளுக்கு
ஏற்பட்ட தோல்வியை நினைவூட்டினார். மேலும், இவர்களின் கோபத்தையும் வெறியையும் கிளறுவதற்காக
பின்வருமாறு உரை நிகழ்த்தினார்:
“அப்து தார் குடும்பத்தினரே! பத்ர் போரில் எங்களின் கொடிக்கு நீங்கள்தான் பொறுப்பு
வகித்தீர்கள். போரில் எங்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.
படைக்கு ஏற்படக்கூடிய நிலைக்கு அவற்றின் கொடிகளே காரணமாக இருக்கிறது. கொடி வீழ்ந்துவிட்டால்
படையினரின் பாதங்களும் ஆட்டம் கண்டுவிடுகின்றன. படைகள் தோல்வியைத் தழுவி விடுகின்றன.
நீங்கள் எங்களது கொடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்படி முடியவில்லை என்றால் எங்களிடம்
அந்தக் கொடியைக் கொடுத்து விடுங்கள். நாங்கள் அதை பாதுகாத்துக் கொள்கிறோம்.”
அபூ ஸுஃப்யான் தனது இந்த சிற்றுரையின் மூலம் தனது நோக்கத்தில் வெற்றி கொண்டார். அபூ
ஸுஃப்யானின் உரையைக் கேட்ட அப்து தார் குடும்பத்தினர் கடும் சினம்கொண்டு அவரை எச்சரித்தனர்.
“எங்களது கொடியை நாங்கள் உமக்குக் கொடுக்க வேண்டுமா? நாளை நாங்கள் போர் புரியும் போது
எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்று நீ பார்க்கத்தான் போகிறாய்” என்று கர்ஜித்தனர்.
இவர்கள் சூளுரைத்தது போன்றே போரில் கொடியைக் காப்பதில் பெரும் தியாகம் செய்தனர். இந்தக்
குடும்பம் முழுவதுமே கொடியைக் காப்பதிலே தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
குறைஷிகள் நடத்திய அரசியல் பேரங்கள்
போர் தொடங்குவதற்கு முன்பு முஸ்லிம்களின் அணியில் பிணக்கையும் பிரிவினையையும் ஏற்படுத்த
குறைஷிகள் முயன்றனர். மதீனா முஸ்லிம்களிடம் அபூ ஸுஃப்யான் தூதனுப்பினார். “நீங்கள்
எங்கள் ஒன்றுவிட்ட சகோதரரை விட்டு விலகிக் கொள்ளுங்கள் நீங்கள் எங்களுக்கு இடையில்
குறுக்கிடாதீர்கள் நாங்கள் உங்களை விட்டு விடுகிறோம் உங்களிடம் போர் செய்ய வேண்டும்
என்று எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை நாங்கள் உங்களிடம் போர் செய்ய வரவில்லை எங்களது
நோக்கம் எங்களது ஒன்றுவிட்ட சகோதரன்தான்.” இவ்வாறு அபூ ஸுஃப்யான் தூதரிடம் கூறி அனுப்பினார்.
மலைகளைவிட உறுதியும் வலுவும் நிறைந்த இறைநம்பிக்கையின் ஆற்றலுக்கு முன் இந்த முயற்சி
என்ன பலனளிக்கும்? அபூ ஸுஃப்யானின் இந்தப் பேரத்திற்கு மிகக் கடுமையாக பதிலளித்ததுடன்,
அவருக்கு வெறுப்பூட்டும் வார்த்தைகளையும் மதீனா முஸ்லிம்கள் கூறினர்.
நேரம் நெருங்கியது. இரு கூட்டத்தினரும் ஒருவரை ஒருவர் நெருங்கினர். இந்நேரத்திலும்
மேற்கூறப்பட்ட அதே நோக்கத்திற்காக குறைஷிகள் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்தனர். அதாவது,
‘அபூ ஆமிர்’ என்று அழைக்கப்படும் ஒருவன் இருந்தான். இவனது இயற்பெயர் ‘அப்து அம்ர் இப்னு
ஸைஃபி“. இவனை மக்கள் ‘ராப்’ துறவி என்று புகழ்ந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்களோ இவனை
‘அல் ஃபாஸிக்’ (பெரும்பாவி) என்று இகழ்ந்தார்கள். இவன் அறியாமைக் காலத்தில் மதீனாவில்
அவ்ஸ் கிளையினரின் தலைவனாக இருந்தவன். இஸ்லாமிய மார்க்கம் வந்தவுடன் அதை அவனால் தாங்கிக்
கொள்ள முடியவில்லை. நபியவர்களுடன் வெளிப்படையாக பகைமைக் கொண்டான்.
இவன் மதீனாவில் இருந்து வெளியேறி மக்காவிற்குச் சென்றான். அங்கு நபியவர்களுக்கு எதிராக
போர் புரிய குறைஷிகளைத் தூண்டினான். இப்போரில் முதல் அணிகளில் பலதரப்பட்ட வமிசத்தைச்
சேர்ந்த வாலிபர்களும் மக்கா நகர அடிமைகளும் இருந்தனர். இவனும் அவர்களுடன் இணைந்து கொண்டு
அணியின் முதல் வரிசைக்கு வந்தான். மதீனாவாசிகள் தன்னைப் பார்த்தால் தனக்குத்தான் கட்டுப்படுவார்கள்.
நபியவர்களை விட்டு விலகிக் கொள்வார்கள் என்று குறைஷிகளுக்கு வாக்களித்தான். பிறகு முஸ்லிம்களை
முன்னோக்கி அவர்களில் தனது கூட்டத்தினரைக் கூவி அழைத்து, “அவ்ஸ் கிளையினரே! நான்தான்
அபூ ஆமிர்!” என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்தினான். அதற்கு முஸ்லிம்கள் “பாவியே! அல்லாஹ்
உனக்கு அருள்புரிய மாட்டான் உன்னிடம் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை!” என்று பதில்
கூறினார்கள். அதற்கவன் “எனது கூட்டத்தினருக்கு நான் வந்த பின்பு ஏதோ தீங்கு நிகழ்ந்துவிட்டது”
என்று கூறி தொடர்ந்து பேசுவதை நிறுத்திக் கொண்டான். (இவன் போரில் கடுமையாக முஸ்லிம்களிடம்
சண்டையிட்டான். அவர்களைக் கல்லால் எறிந்து தாக்கினான்.)
இறைநம்பிக்கையாளர்களின் அணிகளில் பிரிவினையை ஏற்படுத்த குறைஷிகள் மேற்கொண்ட இரண்டாவது
முயற்சியும் தோல்வியைத் தழுவியது. எதிரிகளிடம் போர் வீரர்களும் அதிகம் இருந்தனர். போர்
சாதனங்களும் அதிகமாக இருந்தன. எனினும், முஸ்லிம்களைப் பற்றிய பயமும் அச்சமும் அவர்களின்
உள்ளங்களில் நிறைந்திருந்த காரணத்தினால்தான் இவ்வாறு குறுக்கு வழியை அவர்கள் கையாண்டனர்.
ஆனால், அதுவும் அவர்களுக்குப் பலனைத் தரவில்லை.