பக்கம் -55-
நிலைமையைக் கட்டுப்படுத்துவது
அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சிங்கம் என்று பெயர் பெற்ற மாவீரர் ஹம்ஜா (ரழி) கொலை
செய்யப்பட்டதால் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டிருந்தாலும் முஸ்லிம்கள் நிலைமைகளைத்
தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
அன்றைய தினம் அபூபக்ர், உமர், அலீ, ஜுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்,
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், ஸஅதுப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா, ஸஅது இப்னு ரபீஃ, அனஸ்
இப்னு நள்ர் (ரழி) இன்னும் இவர்களைப் போன்ற நபித் தோழர்களில் பலர் போரில் காட்டிய வீரம்
இணைவைப்பவர்களின் உறுதியைக் குலைத்து அவர்களது தோள் வலிமையைத் தளர்வடையச் செய்தது.
மனைவியைப் பிரிந்து போர்க்களம் நோக்கி...
அன்றைய தினத்தில் ஆபத்துகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் களத்தில் துணிச்சலுடன் போர்
புரிந்த வீரர்களில் ‘அல்கஸீல்’ என்று அழைக்கப்படும் ஹன்ளலா (ரழி) அவர்களும் ஒருவர்.
இவர் முஸ்லிமல்லாதவர்களால் ‘துறவி’ என்றும் நபி (ஸல்) அவர்களால் ‘பாவி’ என்றும் அழைக்கப்
பட்ட அபூ ஆமின் மகனாவார். ஹன்ளலா (ரழி) அன்றுதான் திருமணம் முடித்திருந்தார்கள். தனது
மனைவியுடன் தனித்திருந்த இவர்கள், போர்க்களத்தில் இருந்து பலத்த சப்தத்தைக் கேட்டவுடன்
அதே நிலையில் போர்க்களத்தை நோக்கி ஓடோடி வந்து இணைவைப்பாளர்களின் அணிக்குள் புகுந்து
எதிரிகளைத் தாக்கிய வண்ணம் முன்னேறி சென்றார்கள். இணை வைப்பாளர்களின் தளபதியான ‘அபூ
ஸுஃப்யான்’ என்ற ஸக்ர் இப்னு ஹர்பை நெருங்கி அவருடன் கடுமையான போர் புரிந்து அவரைக்
கீழே வீழ்த்திக் கொல்வதற்கு நெருங்கிவிட்டார். அல்லாஹ் அவருக்கு வீர மரணத்தை முடிவு
செய்யாமல் இருந்திருந்தால் இவர் அபூ ஸுஃப்யானை கொன்றிருப்பார். ஆனால், ஷத்தாத் இப்னு
அஸ்வத் என்பவன் முதுகுப் புறத்திலிருந்து ஹன்ளலா (ரழி) அவர்களைத் தாக்கியதால் அவர்கள்
வீர மரணமடைந்தார்கள்.
போரில் அம்பெறியும் வீரர்களின் பங்கு
நபி (ஸல்) அவர்கள் மலையின் மீது நிறுத்திய வீரர்கள் இஸ்லாமியப் படைக்குச் சாதகமான சூழ்நிலையை
ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தனர். காலித் இப்னு வலீதின் தலைமையின் கீழ், பாவி
அபூ ஆமின் உதவியுடன் எதிரிகள் மூன்று முறை இஸ்லாமியப் படையின் இடது பாகத்தை முறியடிக்க
முயன்றனர். முஸ்லிம்களின் பின்புறமாகத் தாக்குதல் தொடுத்து அணியில் சேதங்களையும் குழப்பங்களையும்
உண்டுபண்ணி, அதைத் தொடர்ந்து பெரும் தோல்வியை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திவிடலாம் என்று
மூன்று முறை இம்மலைப் பகுதியின்மீது எதிரிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால், மலை மீதிருந்து
அம்பெறியும் வீரர்கள் இவர்களின் மீது அம்பு மழை பொழிந்து இவர்களின் மூன்று தாக்குதல்களையும்
முறியடித்தனர். (ஃபத்ஹுல் பாரி)
இணைவைப்பவர்களுக்குத் தோல்வி
இவ்வாறுதான் போர் எனும் திருகை சுழன்றது. சிறியதாக இருந்த இஸ்லாமியப் படை நிலைமை அனைத்தையும்
தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் இணைவைப்பவர்களின் நம்பிக்கை தளர்ந்தது.
அவர்களின் படை வலது, இடது, முன், பின் என நாலா பாகங்களிலும் சிதறி ஓடின. அந்நிலைமை
எவ்வாறு இருந்ததென்றால், மூவாயிரம் இணைவைப்பவர்கள் சில நூறு முஸ்லிம்களுடன் அல்ல முப்பதினாயிரம்
முஸ்லிம்களுடன் போர் புரிகிறார்கள் என்பதைப் போல் இருந்தது. முஸ்லிம்கள் தமது வீரதீரங்களை,
திறமைகளை மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தினர்.
முஸ்லிம்களின் தாக்குதலை தடுக்க இணைவைப்பவர்கள் முழு முயற்சி செய்தும் அது முடியாமல்
போனதால், தங்களின் தோல்வியையும் இயலாமையையும் உணர்ந்தனர் துணிவை இழந்தனர். கொடி ஏந்தியிருந்த
‘சூஆப்’ என்பவர் இறுதியாகக் கொல்லப்பட்ட பிறகு அவர்களின் கொடியை எடுத்து நிமிர்த்தி
அதைச் சுற்றிலும் தொடர்ந்து போர் புரிவதற்கு யாரும் துணியவில்லை. இதனால் பழிவாங்க வேண்டும்
தங்களது கண்ணியத்தையும் மதிப்பையும் நிலைநாட்ட வேண்டும் என்று தங்களுக்குள் பேசி வந்ததையெல்லாம்
மறந்துவிட்டு, உயிர் பிழைத்தால் போதுமென்று தலைதெறிக்க தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.
“இவ்வாறு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை அருளினான். தனது வாக்கை அவர்களுக்கு உண்மைப்படுத்தினான்.
முஸ்லிம்கள் தங்களது வாட்களால் எதிரிகளை வெட்டி வீழ்த்தினர். போர்க்களத்தை விட்டு தப்பி
ஓடிய எதிரிகளை வெருண்டோட வைத்தனர். உண்மையில் இணைவைப்பவர்கள் பெரும் தோல்வி கண்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) தனது தந்தை கூறியதாக அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின்
மீது ஆணையாக! ஹிந்த் பின்த் உத்பா மற்றும் அவளின் தோழிகள் தங்களின் ஆடைகளை உயர்த்திக்
கொண்டு ஓடினர். நான் அவர்களின் கெண்டைக் கால்களைப் பார்த்தேன். அவர்களை நாங்கள் பிடிக்க
நாடியிருந்தால் பிடித்திருப்போம். காரணம், அதற்கு எந்தத் தடையும் எங்களுக்கு இருக்கவில்லை.”
(இப்னு ஹிஷாம்)
ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ள பரா இப்னு ஆஸிஃப் (ரழி) அறிவிப்பில் வருவதாவது:
“நாங்கள் எதிரிகளை எதிர்த்து போரிட்ட போது பெண்களைப் பார்த்தோம். அவர்கள் தோல்வியுற்று
விரண்டோடினர். தங்களது கெண்டைக் கால்களில் அணிந்திருந்த சலங்கைகள் தெரியும் அளவுக்கு
ஆடைகளை உயர்த்திக் கொண்டு மலைகளின் மேல் ஓடினர். முஸ்லிம்கள் இணைவைப்பவர்களைப் பின்தொடர்ந்துச்
சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தி, அவர்களின் பொருட்களையும் கைப்பற்றினர்.
அம்பெறி வீரர்களின் மாபெரும் தவறு
சிறியதாக இருந்த இஸ்லாமியப் படை வரலாற்றில் மற்றொரு முறை மக்காவாசிகளுக்கு எதிராய்
மாபெரும் வெற்றி முத்திரையைப் பதித்தனர். இவ்வெற்றி பத்ரில் அவர்களுக்குக் கிடைத்த
வெற்றியை விட சற்றும் குறைவானது அல்ல. இந்நேரத்தில் மலை மீது நிறுத்தப்பட்டிருந்த அம்பெறியும்
வீரர்களின் பிரிவில் பெரும்பாலோர் மாபெரும் தவறு ஒன்றைச் செய்தனர். இத்தவறினால் நிலைமை
முற்றிலும் தலைகீழாக மாறியது. முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சேதமும் நஷ்டமும் ஏற்பட்டது.
நபியவர்களை எதிரிகள் கொன்றுவிட இது ஒரு வாய்ப்பாக இருந்தது. அம்பெறியும் வீரர்களின்
இந்தத் தவறினால் ஏற்பட்ட பின்விளைவு, முஸ்லிம்களின் வீரத்தைப் பற்றிய தவறான எண்ணத்தை
ஏற்படுத்தியது. பத்ர் போரின் வெற்றிக்குப் பின் நிராகரிப்பாளர்களுக்கு முஸ்லிம்களின்
மீதிருந்த அச்சத்தையும் அம்பெறியும் வீரர்களின் இந்தத் தவறு போக்கிவிட்டது.
வெற்றி அல்லது தோல்வி எது ஏற்பட்டாலும் அம்மலையைவிட்டு நகரக் கூடாது என்று இந்த அம்பெறியும்
வீரர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையின் வாசகங்களை நாம் முன்பு கூறியிருந்தோம்.
இவ்வளவு ஆணித்தரமாக நபியவர்கள் கட்டளையிட்டிருந்தும் வெற்றி கிடைத்து எதிரிகளின் பொருட்களை
முஸ்லிம்கள் ஒன்று திரட்டுவதைப் பார்த்த அத்தோழர்களில் சிலருக்கு உலக ஆசை ஏற்பட்டது.
அவர்கள் தங்களுக்குள் “இதோ வெற்றிப் பொருள்! இதோ வெற்றிப் பொருள்! உங்களது தோழர்கள்
வெற்றி பெற்று விட்டார்கள். இதற்குப் பின்பும் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?”
என்று கூறினர்.
அச்சமயம் அவர்களின் தளபதி அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) நபி (ஸல்) அவர்களிட்ட கட்டளையை
அவர்களுக்கு நினைவூட்டினார். மேலும் “அல்லாஹ்வின் தூதர் உங்களுக்கு கூறியதை நீங்கள்
மறந்துவிட்டீர்களா?” என்று தோழர்களை எச்சரித்தார். என்றாலும் அந்தக் கூட்டத்தின் பெரும்பாலானோர்
இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
நாமும் மக்களுடன் வெற்றிப் பொருளைச் சேகரிப்போம்”என்று கூறி அப்பிரிவின் நாற்பது அல்லது
நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மலையிலிருந்து இறங்கி படையுடன் சேர்ந்து பொருளை சேகரித்தார்கள்.
இதனால் முஸ்லிம் படையினரின் பின்பகுதி பாதுகாப்பற்றதாக ஆகிவிட்டது. அப்துல்லாஹ் இப்னு
ஜுபைர் (ரழி) அவர்களும் அவன் தோழர்களில் ஒன்பது அல்லது அதைவிடக் குறைவானவர்கள் மட்டுமே
தங்களுக்கு அனுமதி அல்லது மரணம் வரும் வரை அவ்விடத்திலேயே நிலையாக இருந்துவிட வேண்டுமென்று
அங்கேயே தங்கிவிட்டனர்.
காலித் முஸ்லிம்களைச் சுற்றி வளைக்கிறார்
இந்தச் சூழ்நிலையைக் காலித் இப்னு வலீத் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். முஸ்லிம்களை
பின்புறம் தாக்குவதற்காக அம்பெறியும் வீரர்கள் இருந்த மலையை நோக்கி அதிவேகமாகச் சென்றார்.
அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்களையும் அவரது தோழர்களையும் அதிவிரைவிலேயே
கொன்று விட்டு முஸ்லிம்களின் படையின் பின்புறமாகச் சென்று தாக்கினார். காலிதின் குதிரை
வீரர்கள் இதை உணர்த்தும் பொருட்டு பெரும் சப்தமிட்டவுடன், தோல்வியுற்று புறமுதுகுக்
காட்டி ஓடிக்கொண்டிருந்த இணைவைப்பவர்கள் தங்களுக்கு ஒரு புதிய முன்னேற்றம் கிடைத்து
விட்டதை அறிந்து முஸ்லிம்களை நோக்கித் திரும்பினர். ‘அம்ரா பின்த் அல்கமா’ என்ற பெண்
மண்ணில் வீசப்பட்டிருந்த இணைவைப்பவர்களின் கொடியை உயர்த்திப் பிடித்தாள். இணைவைப்பவர்கள்
தங்களது கொடியைச் சுழற்றியவர்களாக சிலர் சிலரைக் கூவி அழைத்தனர். பிறகு ஒன்று சேர்ந்து
முஸ்லிம்கள் மீது பாய்ந்தனர். இதனால் முஸ்லிம்கள் முன்னும் பின்னும் தாக்கப்பட்டனர்.
நபியவர்களின் நிலை
நபி (ஸல்) அவர்கள் ஒன்பது நபர்கள் கொண்ட தங்கள் தோழர்களின் ஒரு சிறிய கூட்டத்தில் இருந்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்) முஸ்லிம்களின் வீரத்தையும், அவர்கள் இணைவைப்பவர்களை விரட்டுவதையும்
படையின் பின்பகுதியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நபியவர்கள் திடீரென காலிதின் குதிரை
வீரர்களால் சூழப்பட்டார்கள். இப்போது நபியவர்களுக்கு முன் இரு வழிகள்தான் இருந்தன.
ஒன்று, உடனடியாக தங்களையும் தங்களுடைய ஒன்பது தோழர்களையும் பாதுகாத்துக் கொண்டு ஒரு
ஆபத்தில்லாத இடத்தில் ஒதுங்கி விடுவது. மேலும், எதிரிகளால் சுற்றி வளைக்கப் பட்ட தங்களது
படையை ‘அதற்கு விதிக்கப்பட்ட விதியை அது சந்திக்கட்டும்’ என்று விட்டு விடுவது. இரண்டாவது,
தனக்கேற்படும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் தனது தோழர்களைத் தன்னை நோக்கி வருமாறு கூவி
அழைப்பது. அவ்வாறு ஒன்று சேரும் அந்த தோழர்களைக் கொண்டே எதிரிகளால் சூழப்பட்ட தனது
படையைக் காப்பாற்றி உஹுத் மலைக் குன்றுகளின் உச்சிக்கு அழைத்து செல்ல முயற்சி செய்வது.
இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் நிகரற்ற வீரம் வெளிப்பட்டது. தனது சப்தத்தை உயர்த்தி
தனது தோழர்களை “அல்லாஹ்வின் அடியார்களே! என் பக்கம் வாருங்கள்” என்று அழைத்தார்கள்.
தனது குரல் ஒலியை முஸ்லிம்களை விட எதிரிகள்தான் முதலில் கேட்பார்கள். அவ்வாறு கேட்டால்,
தான் இக்கட்டான நிலைமைக்கு ஆளாகுவோம் என்றிருந்தும் அதைப் பொருட் படுத்தாமல் தன் தோழர்களைக்
கூவி அழைத்தார்கள்.
ஆம்! அவ்வாறே எதிரிகள் நபி (ஸல்) அவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு, முஸ்லிம்கள்
நபியவர்களிடம் வந்து சேர்வதற்கு முன்பாக அவர்கள் வந்து சேர்ந்தனர்.
முஸ்லிம்கள் சிதறுதல்
எதிரிகள் முஸ்லிம்களை சுற்றி வளைத்துக் கொண்டபோது முஸ்லிம்களின் ஒரு சாரார் நிலை தடுமாறினர்.
அதாவது, இவர்கள் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று போர் மைதானத்திலிருந்து
ஓடினார்கள். இவர்களில் ஒரு சாரார் ஓடிய ஓட்டத்தில் மதீனாவிற்குள் நுழைந்தனர். மற்றும்
சிலர் மலை உச்சிகளுக்கு மேலே ஏறிக்கொண்டனர்.
மற்றும் ஒரு சாரார் போர்க் களத்தில் இணைவைப்பவர்களோடு ஒன்றோடு ஒன்று கலந்து விட்டனர்.
யார் எந்தப் படையை சேர்ந்தவர் என்று பிரித்து அறிய முடியவில்லை. இதனால் முஸ்லிம்கள்
தங்களுக்குள் சிலர் சிலரை தவறுதலாக தாக்க நேர்ந்தது.
இந்நிலையைப் பற்றி ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஒரு சம்பவம் ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ளதாவது:
உஹுத் போர் முடிவுறும் தறுவாயில் இணைவைப்பவர்ளுக்குக் கடும் தோல்வி ஏற்பட்டது. அப்போது
இப்லீஸ் முஸ்லிம்களைத் தடுமாற வைப்பதற்காக அவர்களைச் சப்தமிட்டு அழைத்து “அல்லாஹ்வின்
அடியார்களே! உங்களுக்குப் பின்னால் வருபவர்களை பாருங்கள்” என்று கூறினான். இவனது சப்தத்தைக்
கேட்ட முஸ்லிம் படையின் முன்பகுதியில் இருந்தவர்கள் தங்களில் ஒருவர்தான் அழைக்கிறார்
தங்களுக்கு பின்பகுதியில் எதிரிகள் வந்துவிட்டதாகக் கருதி விரைவாக திரும்பி தங்களுக்கு
பின்பகுதியில் இருந்த முஸ்லிம்களுடன் சண்டையிட்டனர். இவ்வாறு முஸ்லிம்களுக்குள்ளாகவே
தாக்குதல் நிகழ்ந்துவிட்டது. அந்நேரத்தில் ஹுதைஃபா (ரழி) அவர்களின் தந்தையை முஸ்லிம்கள்
எதிரி என்று நினைத்து அவரைக் கொல்ல பின்தொடர்ந்தனர். அதைப் பார்த்த ஹுதைஃபா (ரழி) “அவர்
எனது தந்தை! அவர் எனது தந்தை! அவரை விட்டுவிடுங்கள்” என்று கத்தினார். ஆனால், அவரது
சப்தம் எவர் காதிலும் விழவில்லை. எனவே, அவரை விரட்டிச் சென்று கொன்றே விட்டனர். ஆனால்,
ஹுதைஃபா (ரழி) தங்களது தோழர்களைக் கோபிப்பதற்குப் பதிலாக “அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும்”
என்று கூறினார்.
மேற்கூறப்பட்ட சம்பவத்தை அன்னை ஆயிஷாவிடமிருந்து அறிவிக்கும் ‘உர்வா’ கூறுகிறார்: அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! ஹுதைஃபா மிக நல்லவராக இருந்தார். அதே நிலையில் அல்லாஹ்விடம் சேர்ந்துவிட்டார்.
(ஸஹீஹுல் புகாரி)
இவ்வாறு அவர்கள் கூறியதற்குக் காரணம், இவன் தந்தை முஸ்லிமாக இருந்தும் தவறுதலாக படுகொலை
செய்யப்பட்டார், அதற்குப் பிணையத் தொகையாக நூறு ஒட்டகங்களைத் தருவதற்கு நபி (ஸல்) அவர்கள்
முன்வந்தார்கள். ஆனால், ஹுதைஃபா (ரழி) அவர்கள் பெருந்தன்மையாக அதை முஸ்லிம்களுக்கே
தானம் செய்து விட்டார்கள். இச்செயல் நபியவர்களின் உள்ளத்தில் ஹுதைஃபா (ரழி) அவர்களைப்
பற்றிய சிறந்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது. ஹுதைஃபா (ரழி) அவர்கள் பிற்காலத்திலும்
இதே பெருந்தன்மையுடனே திகழ்ந்தார்கள். இதையே உர்வா மேற்கூறியவாறு சுட்டிக் காட்டினார்கள்.
இந்தக் கூட்டத்தின் அணிகளுக்கிடையில் பெரும் குழப்பமும் தடுமாற்றமும் நிலவியது. அதிகமானவர்கள்
என்ன செய்வது, எங்கே செல்வது என்று தெரியாமல் குழப்பத்திற்குள்ளாகினர். இந்நிலையில்
இருக்கும்பொழுது “முஹம்மது கொல்லப்பட்டு விட்டார்” என்று ஒருவன் ஓலமிடுவதைக் கேட்ட
அவர்கள், மிச்சமீதமிருந்த தன்னம்பிக்கையையும் இழந்தார்கள் அவர்களது மனபலமும் குன்றியது
சிலர் போரை நிறுத்திக்கொண்டு சோர்வுற்று ஆயுதங்களைக் கீழே போட்டான் மற்றும் சிலர் நயவஞ்கர்களின்
தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் சேர்ந்து கொள்ளலாம். அவர் நமக்காக அபூ ஸுஃப்யானிடம்
பாதுகாப்பு வாங்கித் தருவார் என்று எண்ணினர். தங்களது கையிலுள்ள ஆயுதங்களைப் போட்டுவிட்டு
நிராயுதபாணியாய் இருந்த இத்தகைய கூட்டத்தை அனஸ் இப்னு நள்ர் (ரழி) பார்த்தபோது, அவர்களிடம்
“நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின்
தூதரே கொல்லப்பட்டு விட்டார்கள்” என பதிலளித்தனர். அதற்கு அனஸ் (ரழி) “நபி (ஸல்) அவர்களுக்குப்
பின் வாழ்ந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நபியவர்கள் எக்காரியத்திற்காக உயிர்
நீத்தார்களோ அதற்காக நீங்களும் உங்கள் உயிரைத் தியாகம் செய்யுங்கள்!” என்று கூறியபின்
அல்லாஹ்விடம் பின்வருமாறு முறையிட்டார்கள்:
“அல்லாஹ்வே! (முஸ்லிம்களாகிய) இவர்கள் செய்த காரியத்திலிருந்து உன்னிடம் நான் மன்னிப்பு
கேட்கிறேன். இணைவைப்பவர்களாகிய அவர்கள் செய்த காரியத்திலிருந்து விலகி உன்னளவில் மீளுகிறேன்.”
இவ்வாறு முறையிட்டப் பின் எதிரிகளை நோக்கி முன்னேறினார். அப்போது அவரை ஸஅது இப்னு முஆத்
(ரழி) சந்தித்து “அபூ உமரே! எங்கே செல்கிறீர்?” என வினவினார். அதற்கு அனஸ் (ரழி) “ஹா...
சொர்க்கத்தின் நறுமணம் எவ்வளவு அருமையானது. உஹுதுக்கருகில் அதை நான் நுகர்கிறேன்” என்று
கூறி எதிரிகளிடம் போர் செய்து உயிர் நீத்தார். இறுதியில் அவரை எவராலும் அடையாளம் காணமுடியாத
அளவிற்கு உடல் சிதைக்கப் பட்டிருந்தது. போர் முடிந்ததற்குப் பின் அவரது நுனிவிரலைப்
பார்த்துதான் அவரது சகோதரி அவரை அடையாளம் காட்டினார். அப்போது அவரது உடலில் ஈட்டி,
அம்பு, வாள் ஆகிய வற்றால் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. (ஸஹீஹுல் புகாரி,
ஜாதுல் மஆது)
ஸாபித் இப்னு தஹ்தாஹ் என்ற நபித்தோழர் தனது கூட்டத்தை அழைத்து “அன்சாரி சமூகமே! முஹம்மது
(ஸல்) திட்டமாக கொல்லப்பட்டு விட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் உயிருடன் இருக்கின்றான்
அவன் மரணிக்க மாட்டான் உங்களது மார்க்கத்திற்காக நீங்கள் போர் புரியுங்கள் நிச்சயமாக
அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை வழங்குவான் உங்களுக்கு உதவி செய்வான்” என்று கூற அன்சாரிகளின்
ஒரு கூட்டம் அவருடன் புறப்பட்டார்கள். அவர்கள் காலிதின் குதிரைப் படை வீரர்களைத் தாக்கினர்.
ஆனால், காலித் இவரையும் இவரது தோழர்களையும் கொன்றுவிட்டார். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)
ஒரு முஹாஜிர், அன்சாரி ஒருவருக்கு அருகில் சென்றார். அந்த அன்சாரி வெட்டப்பட்டு இரத்தத்தில்
உழன்று கொண்டிருந்தார். அப்போது அந்த முஹாஜிர், அன்சாரியிடம் “முஹம்மது (ஸல்) கொல்லப்பட்டு
விட்டார்கள் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அந்த அன்சாரி முஹம்மது
(ஸல்) கொல்லப்பட்டுவிட்டாலும் அவர்கள் மார்க்கத்தை எடுத்து வைத்து விட்டார்கள். நீங்கள்
உங்களது மார்க்கத்திற்காகப் போரிடுங்கள்” என்று கூறினார். (ஜாதுல் மஆது)
இதுபோன்ற வீர உரைகளாலும் உணர்ச்சிமிக்க வார்த்தைகளாலும் முஸ்லிம்களுக்கு ஆன்மீக பலம்
திரும்பியது. நிலை தடுமாறி நின்ற அவர்கள் சகஜநிலைக்குத் திரும்பினர். பணிவது அல்லது
அப்துல்லாஹ் இப்னு உபையுடன் சேர்ந்துகொள்வது என்ற குழம்பிய சிந்தனையிலிருந்து விடுபட்டு
தங்களது ஆயுதங்களைக் கையிலெடுத்துக் கொண்டு எதிரிகளுடன் சண்டையிட ஆரம்பித்தார்கள்.
கூட்டத்தைப் பிளந்து கொண்டு நபியவர்களை நோக்கி முன்னேறினர். நபியவர்கள் கொல்லப்பட்டார்கள்
என்ற செய்தி வெறும் பொய்யென அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இதனால் அவர்களின் பலம்
மேலும் கூடியது. எனவே, எதிரிகளின் கூட்டத்துடன் கடுமையாகப் போரிட்டுக் கொண்டே முன்னேறி
நபியவர்களுக்கருகில் ஒன்று கூடினர்.
இதே நேரத்தில் மூன்றாவது ஒரு பிரிவினரும் இருந்தனர். அவர்களது கவலை நபியவர்களைப் பற்றியே
இருந்தது. இவர்களில் அபூபக்ர், உமர், அலீ (ரழி) முதலிடம் வகித்தனர். நபியவர்களுக்கு
ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தவுடன் முன்னேற்பாடாக நபியவர்களைச் சுற்றி இவர்கள் பாதுகாப்பில்
ஈடுபட்டனர்.