பக்கம் -56-

நபியவர்களைச் சுற்றி கடும் சண்டை

முஸ்லிம்களில் இதற்கு முன் கூறப்பட்ட பிரிவினர்கள் எதிரிகளால் சூழப்பட்டு கடுமையான தாக்குதலைச் சமாளித்துக் கொண்டிருந்த அதே வேளையில் இங்கே நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்களையும் குறைஷிகள் தாக்கினர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் ஒன்பது நபர்கள் மட்டுமே இருந்தனர். இப்போதுதான் நாம் முன்னால் கண்டவாறு நபியவர்கள் “முஸ்லிம்களே என்னிடம் வாருங்கள். நான் அல்லாஹ்வின் தூதர்” என்று அழைத்தார்கள். அப்போது நபியவர்களின் சப்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்திலிருந்த மற்ற எதிரிகளும் நபியவர்கள் இருந்த திசை நோக்கிப் பாய்ந்தனர். அதனால் நபியவர்களுடன் இருந்த ஒன்பது நபித்தோழர்களுக்கும் தாக்க வந்த எதிரிகளுக்குமிடையில் கடுமையான சண்டை நடந்தது. அச்சண்டையில் அந்தத் தோழர்கள் நபியவர்கள் மீது வைத்திருந்த அன்பும் அவர்களுக்காக தங்களையே அர்ப்பணிக்கும் தியாக உணர்வும் நன்கு வெளிப்பட்டது.

அனஸ் இப்னு மாலிக் (ரழி) இது தொடர்பாக அறிவிக்கும் ஒரு செய்தி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போரன்று நபி (ஸல்) அவர்கள் ஏழு அன்சாரி தோழர்களுடனும் இரண்டு குறைஷித் தோழர்களுடனும் தனித்து விட்டார்கள். இணைவைப்பவர்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்ட போது “இவர்களை நம்மிடமிருந்து யார் விரட்டுவாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு. (அல்லது) அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்” என்று நபியவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அன்சாரி ஒருவர் அந்த எதிரிகளை நோக்கிப் பாய்ந்து சண்டையிட்டு வீரமரணம் எய்தினார். மீண்டும் இணைவைப்பவர்கள் நபியவர்களைத் தாக்க சூழ்ந்த போது முன்பு கூறியது போலவே கூறினார்கள். மீண்டும் அன்சாரிகளில் ஒருவர் முன்சென்று போரிட்டு வீரமரணம் எய்தினார். இவ்வாறே ஏழு அன்சாரித் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நபியவர்கள் தனது இரு குறைஷித் தோழர்களிடம் “நமது தோழர்களுக்கு நாம் நீதம் செலுத்தவில்லை” என்று கூறினார்கள். (முஹாஜிர்கள் அன்றி அன்சாரிகள் கொல்லப்பட்டதைப் பற்றி நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்.) (ஸஹீஹ் முஸ்லிம்)

நபியவர்களின் வாழ்க்கையில் மிக இக்கட்டான நேரம

மேற்கூறப்பட்ட ஏழு அன்சாரித் தோழர்களில் இறுதியாக எதிரிகளிடம் சண்டையிட்டவர் உமாரா இப்னு யஜீத் (ரழி) என்பவராவார். இவர் சண்டையில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அப்போது இரு குறைஷித் தோழர்கள் (தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் மற்றும் ஸஅது இப்னு அபீ வக்காஸ்) மட்டும்தான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தனர். அல்லாஹ்வின் அருளால் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த சில முஸ்லிம்கள் உமாராவை எதிரிகளிடமிருந்துக் காப்பற்றினர். கீழே விழுந்த அன்சாரித் தோழர் நபியவர்களின் பாதத்தை தன் தலைக்குத் தலையனையாக்கிக் கொண்டார். சற்று நேரத்தில் அவர் உயிர் பிந்த போது அவரது கன்னம் நபியவர்களின் பாதத்தின் மீது இருந்தது. (இப்னு ஹிஷாம்)

மேற்கூறப்பட்ட அந்த தருணம் நபியவர்களின் வாழ்க்கையிலேயே அவர்களுக்கு ஏற்பட்ட மிகச் சிரமமான நேரமாக இருந்தது. ஆனால், எதிரிகளைப் பொறுத்தவரையில் நபி (ஸல்) அவர்களை கொலை செய்வதற்கு அவர்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாக இருந்தது. அதை பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் தாமதிக்கவில்லை. உடனடியாக நபியவர்களை நோக்கி தங்களது தாக்குதலைத் தொடுத்தனர். நபியவர்களின் கதையை முடிக்க வேண்டும் என்று வெறி கொண்டனர். உத்பா இப்னு அபீ வக்காஸ் என்பவன் நபியவர்களை நோக்கிக் கல்லெறிந்தான். இதனால் நபியவர்கள் கீழே விழுந்து விட்டார்கள். நபியவர்களின் வலது கீழ் முன் பல் சேதமடைந்து கீழ் உதடும் காயமடைந்தது. நபியவர்களை நோக்கி ஓடிவந்த அப்துல்லாஹ் இப்னு ஷிஹாப் ஜுஹ் என்பவன் நபியவர்களின் முகத்தைக் காயப்படுத்தினான். அப்துல்லாஹ் இப்னு கமிஆ நபியவர்களின் புஜத்தின் மீது வாளால் ஓங்கி வெட்டினான். நபியவர்கள் இரண்டு கவச ஆடைகள் அணிந்திருந்ததால் அந்த வெட்டு நபி (ஸல்) அவர்களின் உடலில் படவில்லை. ஆனால், தாக்கிய வேகத்தின் வலி ஒரு மாதம் வரை நீடித்திருந்தது. பின்பு நபியவர்களின் முகத்தை நோக்கி வாளை வீசினான். அதனால், நபியவர்கள் அணிந்திருந்த இரும்பு கவசத்தின் இரண்டு ஆணிகள் முகத்தில் குத்தின. அவன் “இதை வாங்கிக்கொள். நான்தான் இப்னு கமிஆ” என்று கூறினான். அப்போது நபியவர்கள் தனது முகத்தில் இருந்து இரத்தத்தை துடைத்தவர்களாக ‘அக்மஅகல்லாஹு’ (அல்லாஹ் உன்னை இழிவுபடுத்துவானாக) என்று கூறினார்கள். (ஃபத்ஹுல் பாரி)

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். இப்போருக்குப் பின் ஒரு நாள் தனது ஆட்டு மந்தையைத் தேடி இப்னு கமிஆ புறப்பட்டான். அவனது ஆட்டு மந்தை மலை உச்சியின் மீது இருப்பது தெரியவே அவன் அங்கு சென்ற போது, கொம்புள்ள ஒரு முரட்டு ஆடு அவனை இடைவிடாமல் தாக்கி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளியது. (ஃபத்ஹுல் பாரி)

உஹுத் போரின் இந்த இக்கட்டான தருணத்தில் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுடைய தூதரின் முகத்தைக் காயப்படுத்திய கூட்டத்தினர் மீது அல்லாஹ்வின் கோபம் கடினமாகட்டும்” என்று பிரார்த்தித்தார்கள். சிறிது நேரம் கழித்து “அல்லாஹ்வே! எனது கூட்டத்தினரை மன்னித்து விடு. நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்” என்று வேண்டினார்கள். (ஃபத்ஹுல் பாரி, முஃஜமுத் தப்ரானி)

காஜி இயாழ் அவர்களின் ‘ஷிஃபா’ என்ற நூலில் இவ்வாறு வந்துள்ளது: “அல்லாஹ்வே! எனது கூட்டத்தினரை நேர்வழியில் நடத்து! நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்” என பிரார்தித்ததாக வந்துள்ளது.

“உஹுத் போரில் நபி (ஸல்) அவர்களின் முன் பல் உடைக்கப்பட்டது. நபியவர்களின் தலையிலும் பலமான காயம் ஏற்பட்டது. அப்போது நபியவர்கள் தன் மீது வழிந்தோடிய இரத்தத்தை அகற்றியவர்களாக “அல்லாஹ்வின் தூதராகிய நான் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்க, அவர்களோ எனது முகத்தையும் முன் பல்லையும் உடைத்து விட எவ்வாறு அவர்கள் வெற்றிபெற முடியும்?” என்று கூறினார்கள். அல்லாஹ் இது தொடர்பாகவே இந்த வசனத்தை இறக்கினான்.

(நபியே!) இவ்விஷயத்தில் உங்களுக்கு எந்த அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர்களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்து விடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம். (அல்குர்ஆன் 3:128) (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொன்று தீர்த்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இருந்தனர். ஆனால், அவர்களை எதிர்த்து ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) ஆகிய இருவரும் மிக வீரத்துடனும் துணிவுடனும் போரிட்டனர். எனவே, எதிரிகள் தங்களது நோக்கத்தை அடைய முடியவில்லை.. மேலும், இவ்விரு தோழர்களும் அம்பெய்வதில் மிக தேர்ச்சி பெற்றவர்களாக இருந்ததால் நபியவர்களைத் தாக்க வந்த எதிரிகளின் கூட்டத்தை நபியவர்களுக்கு அருகே நெருங்கவிடாமல் தடுத்தனர்.

ஸஅது இப்னு அபீ வக்காஸுக்கு நபி (ஸல்) தங்களின் அம்புக் கூட்டைக் கொடுத்து “ஸஅதே! நீ அம்பெறிவாயாக! எனது தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று கூறினார்கள். நபியவர்கள் ஸஅதை தவிர வேறு எவருக்கும் இவ்வார்த்தையைக் கூறியதில்லை என்பதிலிருந்து எந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்களை ஸஅது (ரழி) பாதுகாத்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். (ஸஹீஹுல் புகாரி)

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வின் வீரத்தைப் பற்றி ஜாபிர் (ரழி) அறிவிப்பதை இமாம் நஸயீ (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். அஃதாவது: உஹுத் போரில் எதிரிகள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். நபியவர்களுடன் சில அன்சாரி தோழர்களும் இருந்தனர். அப்போது நபியவர்கள் “யார் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவார்?” என்று கேட்டார்கள். தல்ஹா (ரழி) “நான்” என்று முந்திக் கொண்டு பதில் கூறினார்கள். ஆனால், உடன் இருந்த அன்சாரிகளும் அதற்குத் தயாராகவே நபி (ஸல்) அன்சாரிகளுக்கு அனுமதியளித்தார்கள் ஒவ்வொரு அன்சாரியாக எதிரிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் எய்தினார்கள். அதற்குப் பின் தல்ஹா (ரழி) எதிரிகளுடன் சண்டையிட்டார்கள். அவர்களது சண்டை 11 நபர்களின் சண்டைக்குச் சமமாக இருந்தது. அவரது கையில் பல வெட்டுகள் விழுந்தன. சில விரல்கள் துண்டிக்கப்பட்டன. அப்போது ‘ஹஸ்“!! (வேதனையில் கூறும் வார்த்தை) என்றார்கள். அதற்கு நபியவர்கள் “நீ ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லியிருந்தால் மக்கள் பார்க்கும் அளவுக்கு வானவர்கள் உன்னை உயர்த்திருப்பார்கள்” என்றார்கள். இறுதியாக அல்லாஹ் எதிரிகளை விட்டும் நபியவர்களை பாதுகாத்தான். (ஃபத்ஹுல் பாரி)

“39 அல்லது 35 காயங்கள் தல்ஹா (ரழி) அவர்களுக்கு இப்போரில் ஏற்பட்டன. அவர்களது ஆட்காட்டி விரலும் அதை அடுத்துள்ள பெரிய விரலும் வெட்டப்பட்டன.” (ஃபத்ஹுல் பாரி)

கைஸ் இப்னு அபூ ஹாஸிம் கூறியதாக ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ளது: “உஹுத் போர்க் களத்தில் நபி (ஸல்) அவர்களை நோக்கி சீறி வந்த அம்புகளை எந்தக் கையால் தல்ஹா (ரழி) தடுத்துக் காத்தாரோ அந்தக் கை உஹுத் போருக்குப் பின் செயலிழந்து போனதை நான் பார்த்தேன்.”

நபி (ஸல்) அவர்கள் தல்ஹாவைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: “யார் பூமிக்கு மேல் நடமாடும் ஷஹீதை (உயிர் நீத்த தியாகியை) பார்க்க விரும்புகிறார்களோ அவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வைப் பார்க்கட்டும்.” (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: உஹுதுப் போரைப் பற்றி அபூபக்ருக்கு முன் பேசப்பட்டால் அன்றைய தினம் முழுவதும் (அதாவது அன்றைய தினத்தில் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்த நன்மையெல்லாம்) தல்ஹாவையே சாரும் என்று கூறுவார்கள். (ஃபத்ஹுல் பாரி)

மேலும், தல்ஹாவைப் பற்றி அபூபக்ர் (ரழி) இவ்வாறு ஒரு கவிதை கூறுவார்கள்:

“தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வே!
உனக்காக பல சொர்க்கங்கள் உண்டு.
இன்னும் பல கண்ணழகிகளும் உண்டு.”

இந்த சிரமமான நெருக்கடியான நிலையில், அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குத் தனது மறைமுகமான உதவியை இறக்கினான்.

இதைப் பற்றி ஸஅது (ரழி) அறிவிக்கும் ஒரு செய்தி ஸஹீஹுல் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஸஅது (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போரில் நான் நபியவர்களைப் பார்த்தேன். அவர்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைச் சுற்றி இருவர் கடுமையாக சண்டை செய்து கொண்டிருந்தனர் அவர்கள் வெண்மையான ஆடை அணிந்திருந்தனர் இந்நாளுக்கு முன்போ, பின்போ அவர்களை நான் பார்த்ததில்லை அவர்கள் ஜிப்ரீல், மீக்காயில் ஆவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபியவர்கள் அருகே தோழர்கள் திரளுதல்

மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிகளெல்லாம் கண் சிமிட்டும் சில நிமிடங்களில் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தன. நபி (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமான பல தோழர்கள் போரில் முதல் அணியில் நின்று எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென போரின் நிலை இவ்வாறு மாறும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை அல்லது நபியவர்களின் சப்தத்தை அவர்கள் உடனடியாகக் கேட்டிருந்தால் நபியவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விரைந்துச் சென்று நபியவர்களைப் பாதுகாத்திருப்பார்கள். ஆனால், இவர்கள் நபியவர்களிடம் வருவதற்கு முன்னதாகவே நபியவர்களுக்கு அத்தனை காயங்களும் ஏற்பட்டு விட்டன் ஆறு அன்சாரிகள் கொல்லப்பட்டு விட்டனர். ஏழாவதாக ஓர் அன்சாரி தோழர் காயமடைந்து, குற்றுயிராக பூமியில் விழுந்து கிடந்தார் அவரும் சிறிது நேரத்தில் மரணித்தார். ஸஅது, தல்ஹா (ரழி) ஆகிய இருவர் மட்டும் எதிரிகளை நபி (ஸல்) அவர்களை நெருங்கவிடமால் எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

படையின் முன்அணியில் இருந்து சண்டை செய்து கொண்டிருந்த சிறப்புமிக்க நபித்தோழர்கள் நிலைமையறிந்து நபியவர்களிடம் விரைந்து வந்து, அவர்களைச் சுற்றி வலையாகப் பின்னி நின்று, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக கடும் போர் புரிந்தனர். இவ்வாறு திரும்பிய தோழர்களில் முதலாமவர் நபியவர்களின் குகைத் தோழரான அபூபக்ர் (ரழி) ஆவார்கள்.

இதோ... அந்த தோழரின் அருமை மகளார் நமது அன்னை ஆயிஷா (ரழி) தனது தந்தை அபூபக்ர் ஸித்தீக் (ரழி) கூறியதாக அறிவிக்கிறார்கள்:

“உஹுத் போரன்று மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டும் பல திசைகளில் சிதறிவிட்டார்கள். பின்பு நான்தான் முதலில் நபியவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்களுக்கு முன் ஒருவர் அவர்களைப் பாதுகாத்தவராக எதிரிகளிடம் சண்டை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் என் மனதிற்குள் “நீ தல்ஹாதானே! எனது தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும். நீ தல்ஹாதானே! எனது தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும். எனக்குத்தான் வாய்ப்பு தவறிவிட்டது. எனது இனத்தை சேர்ந்த உனக்காவது நபியவர்களைப் பாதுகாக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறிக்கொண்டேன். அதற்குள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரழி) பறவையைப் போன்று விரைந்து வந்து என்னை அடைந்தார். நாங்கள் இருவரும் நபியவர்களை நோக்கி விரைந்தோம். அங்கு நாங்கள் சென்றடையும் போது தல்ஹா (ரழி) நபியவர்களுக்கு முன் மயங்கி விழுகிறார்.

நபி (ஸல்) அவர்கள் “உங்களது சகோதரரைக் காப்பாற்றுங்கள்! அவர் தனக்கு சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்டார்” என்று கூறினார்கள். நபியவர்களின் முகம் தாக்கப்பட்டிருந்ததால் அவர்களது முகக்கவசத்தின் இரண்டு ஆணிகள் கண்ணுக்குக் கீழ் பகுதியில் புகுந்து விட்டன. நான் அதை எடுக்க விரும்பினேன். அப்போது அபூ உபைதா (ரழி) “அபூபக்ரே! அல்லாஹ்வுக்காக கேட்கிறேன். அதை நான்தான் செய்வேன்” என்று கூறினார். பின்பு அபூ உபைதா (ரழி) நபியவர்களுக்கு வலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது வாயால் அதை மிக மென்மையாக எடுக்க முயற்சித்தார். பிறகு, அதை நபியவர்களின் முகத்திலிருந்து பல்லால் கடித்து எடுத்தார். அதனால் அவரது முன் பல் விழுந்து விட்டது. இரண்டாவது ஆணியை அகற்ற நான் விரும்பினேன். அப்போதும் அபூ உபைதா (ரழி) “அல்லாஹ்வுக்காக கேட்கிறேன். நான்தான் அதையும் எடுப்பேன்” என்று கூறி, முன்பு செய்தது போன்றே மிக மெதுவாக எடுத்தபோது அபூ உபைதாவின் இன்னொரு பல்லும் விழுந்துவிட்டது. மீண்டும் நபியவர்கள் “உங்களது சகோதரரைக் காப்பாற்றுங்கள். அவர் தனக்கு சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்டார்” என்று கூறினார்கள். நாங்கள் தல்ஹா (ரழி) அவர்களைத் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தோம். அவருக்கு பத்து வாள் வெட்டுகள் விழுந்திருந்தன. சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் மீண்டும் தல்ஹா (ரழி) நபியவர்களிடம் வந்துவிட்டார்கள்.” (ஜாதுல் மஆது, இப்னு ப்பான்)

இந்த சிரமமான வினாடிகளில் முஸ்லிம் மாவீரர்களின் ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களைச் சுற்றி குழுமியது. அவர்களில் அபூ துஜானா, முஸ்அப் இப்னு உமைர், அலீ இப்னு அபூதாலிப், ஸஹ்ல் இப்னு ஹுனைஃப், அபூ ஸயீத் குத்யின் தகப்பனாரான மாலிக் இப்னு சினான், உம்மு அமாரா பின்த் கஅப் அல் மாஜினியா என்ற பெண்மணி, கதாதா இப்னு நுஃமான், உமர் இப்னுல் கத்தாப், ஹாத்திப் இப்னு அபூபல்தஆ, அபூ தல்ஹா (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் அதில் அடங்குவர். (முஸ்னது அபீ யஃலா)