பக்கம் -58-

நபியவர்களுக்கு தல்ஹா தோள் கொடுக்கிறார்

நபி (ஸல்) அவர்கள் மலையை நோக்கி ஒதுங்க முயன்ற போது வழியில் ஒரு பாறை குறுக்கிட்டது. அதன் மீது ஏறிதான் செல்ல வேண்டும் ஆனால், அவர்களால் ஏற முடியவில்லை. காரணம், அவர்களின் உடல் கனமாக இருந்தது இரண்டு கவச ஆடைகள் அணிந்திருந்தார்கள் அத்துடன் பலத்த காயங்களும் ஏற்பட்டிருந்தன. எனவே, தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) பாறைக்குக் கீழ் உட்கார்ந்து கொள்ள, நபியவர்கள் அவர் உதவியால் மேலே ஏறினார்கள். பிறகு, “தல்ஹா (சொர்க்கத்தை) தனக்கு கடமையாக்கிக் கொண்டார்” என்று நபி (ஸல்) அவருக்கு நற்செய்தி கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

இணைவைப்பவர்களின் இறுதி தாக்குதல்

நபி (ஸல்) அவர்கள் கணவாயின் மையப்பகுதியில் நன்கு நிலை கொண்டபோது இணை வைப்பவர்கள் மீண்டும் தாக்கினர். இது முஸ்லிம்களுக்கு சேதம் ஏற்படுத்த வேண்டுமென்று அவர்கள் செய்த இறுதித் தாக்குதலாகும்.

நபியவர்கள் மலைக் கணவாயில் இருந்த போது குறைஷிகளின் ஒரு கூட்டம் மலையின் மீது ஏறி வந்து தாக்க முயற்சி செய்தது. அவர்களுக்கு அபூ ஸுஃப்யானும் காலித் இப்னு வலீதும் தலைமை தாங்கினர். அப்போது நபியவர்கள் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! அவர்கள் எங்களுக்கு மேல் உயரே ஏறிவிடக் கூடாது” என்று பிரார்தித்தார்கள். அப்போது உமர் இப்னு கத்தாபும் (ரழி) அவருடன் முஹாஜிர்களின் ஒரு சிறு கூட்டமும் சென்று அவர்களிடம் சண்டையிட்டு கீழே இறக்கியது. (இப்னு ஹிஷாம்)

ஸஅது (ரழி) கூறுகிறார்கள்: “(மற்றொருமுறை) எதிரிகள் மலைக்கு மேல் ஏறிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “அவர்களை நீ விரட்டு!” என்றார்கள். அதற்கு “நான் எப்படி தனியாக அவர்களை விரட்ட முடியும்?” என்றேன். நபியவர்கள் “அவர்களை நீ விரட்டு!” என்று மூன்று முறை கூறவே, எனது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை எடுத்து அக்கூட்டத்தில் முந்தி வந்து கொண்டிருந்தவனைக் குறிபார்த்து எய்தேன் அவன் செத்து மடிந்தான். நான் சென்று அந்த அம்பை எடுத்துக் கொண்டேன். பின்பு இன்னொருவரின் அருகில் வரவே அதே அம்பைக் கொண்டு எய்தேன் அவனும் செத்து மடிந்தான். நான் சென்று அம்பை எடுத்துக் கொண்டேன். அடுத்து ஒருவன் வர, அவனையும் அதே அம்பால் கொன்றேன். மூவர் இறந்தவுடன் மற்றவர்கள் ஏற அஞ்சி இறங்கி விட்டனர். அப்போது நான் “இந்த அம்பு அல்லாஹ்வின் அருள் பெற்றது” என்று கூறி அதை என் அம்புக் கூட்டில் பாதுகாத்துக் கொண்டேன்.”

இப்படி பல எதிரிகளின் உயிர்களை குடித்த அம்பை ஸஅது (ரழி) தங்களிடம் மரணம் வரை பாதுகாத்தார்கள். அவர்கள் மரணித்த பின்பு அவர்களது பிள்ளைகள் அதை பாதுகாத்து வைத்திருந்தனர். (ஜாதுல் மஆது)

போரில் உயிர் நீத்த தியாகிகளைச் சிதைத்தல்

நபி (ஸல்) அவர்களைத் தாக்க வேண்டுமென பல முறை எதிரிகள் முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் நபியவர்களுக்கு அரணாக விளங்கியதால் எதிரிகளால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. இருப்பினும் நபியவர்கள் தங்களின் தாக்குதலில் இறந்திருக்கலாம் என்றும் சற்றே உறுதியாக எண்ணினர். அதனால் போரை நிறுத்திக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட தங்களுடைய முகாம்களுக்குத் திரும்பினர். அவ்வாறு திரும்பும் போது சில ஆண்களும் பெண்களும் போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் காது, மூக்கு, மர்ம உறுப்புகள் போன்றவற்றை அறுத்தனர் வயிறுகளைக் கிழித்தனர் ஹிந்த் பின்த் உத்பா என்பவள் ஹம்ஜா (ரழி) அவர்களின் ஈரலை அறுத்து மென்று முழுங்க முயற்சித்தாள். அவளால் முடியாமல் போகவே அதைத் துப்பிவிட்டாள். பின்பு, தியாகிகளின் காதுகளையும் மூக்குகளையும் அறுத்து தனக்குக் கால் கொலுசாகவும், கழுத்து மாலையாகவும் அணிந்து கொண்டாள். (இப்னு ஹிஷாம்)

இறுதி வரை சண்டையிட முஸ்லிம்கள் துணிதல்

இந்தக் கடைசி நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் மூலம் முஸ்லிம்களின் துணிவையும், அல்லாஹ்வின் பாதையில் மரணத்தை சந்திக்க வேண்டும் என்ற அவர்களுக்கு இருந்த அலாதியான ஆர்வத்தையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

1) கஅப் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: “உஹுத் போரில் நானும் கலந்து கொண்டேன். அப்போது கொல்லப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களை எதிரிகள் சிதைப்பதைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டேன். அங்கே ஒருவன் உறுதியான உருக்குச் சட்டை அணிந்தவனாக கொல்லப்பட்ட முஸ்லிம்களைப் பார்த்து “அறுக்கப்பட்ட ஆடுகளைப் போன்று வீழ்ந்து கிடக்கிறார்கள்” என்று கூறியவனாக முஸ்லிம்களைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது கவச ஆடை அணிந்த முஸ்லிம் ஒருவர் அவன் தனக்கருகில் வருவதை எதிர்பார்த்தார். நான் அந்த முஸ்லிமுக்கு பின்புறமாய் நின்றவனாக எனது பார்வையால் அந்த முஸ்லிமையும் எதிரியையும் கவனித்தேன். எதிரி நல்ல ஆயுதமுள்ளவனாகவும் வலிமை மிக்கவனாகவும் தெரிந்தான். அவ்விருவரும் சந்திப்பார்களா? என்று நான் எதிர்பார்த்தேன். அதே போரில் இருவரும் சந்தித்து சண்டையிட்டனர். முஸ்லிம் அந்த எதிரியை ஒரு வெட்டுதான் வெட்டினார். அந்த வெட்டு அவனது பிரித்தட்டு வழியாக சென்று, அவனை இரண்டாக பிளந்தது. பின்பு அவர் தனது முகத் திரையை விலக்கி என்னைப் பார்த்து “கஅபே! என்ன பார்க்கிறாய். நான்தான் அபூ துஜானா!” என்று கூறினார்.(அல்பிதாயா)

2) பல முஸ்லிம் பெண்மணிகளும் போர் முடியும் தருவாயில் மைதானத்துக்கு வந்து போரில் தங்களால் முடிந்த பங்காற்றினார்கள்.

அனஸ் (ரழி) இதைப் பற்றி கூறுகிறார்கள்: நபியவர்களின் மனைவியான ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்களையும் உம்மு சுலைம் (ரழி) அவர்களையும் பார்த்தேன். அவர்கள் தங்களது கெண்டைக் கால்கள் தெரியுமளவு ஆடையை உயர்த்தியவர்களாகத் தோல் துருத்திகளில் தண்ணீர் நிரப்பி, அதை முதுகில் சுமந்து வந்து முஸ்லிம்களுக்குப் புகட்டினார்கள். தண்ணீர் தீர்ந்துவிடவே மீண்டும் நிரப்பி வந்து புகட்டினார்கள். இவ்வாறு இறுதி வரை சிரமம் பாராது பல முறை நிரப்பி வந்து காயமடைந்த முஸ்லிம்களுக்கும் மற்ற வீரர்களுக்கும் தாகம் தீர்த்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மேலும் உமர் (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போரில் உம்மு ஸலீத் என்ற அன்சாரிப் பெண்ணும் தோல் துருத்தியில் தண்ணீர் நிரப்பி வந்து எங்களது தாகம் தீர்த்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உம்மு அய்மன் (ரழி) என்ற பெண்மணியும் போர் மைதானத்திற்கு வந்தார்கள். முஸ்லிம்களில் சிலர் தோற்று மதீனாவுக்கு ஓடுவதைப் பார்த்த அவர், அவர்களின் முகத்தில் மண்ணை வாரி இறைத்தார். மேலும், அவர்களில் சிலரைப் பார்த்து “இந்தா! ஆடை நெய்யும் ராட்டையை வாங்கிக் கொள். வாளை என்னிடம் கொடு!” என்று ரோஷமூட்டினார். பின்பு, போர்க்களம் வந்து காயமடைந்தவர்களுக்குத் தண்ணீர் புகட்டினார். அது சமயம் ‘ப்பான் இப்னு அரக்கா’ எனும் அரக்கன் ஒருவன் அப்பெண்மணியை நோக்கி அம்பெறிந்தான். அவர்கள் கீழே விழுவே ஆடை விலகியது. அந்த மூடன் இதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். இக்காட்சி நபி (ஸல்) அவர்களை சிரமத்திற்குள்ளாக்கியது. எனவே, கூர்மையற்ற ஓர் அம்பை ஸஅது இப்னு அபீவக்காஸிடம் கொடுத்து “ஸஅதே! இந்த அம்பை அவனை நோக்கி எறி!” என்றார்கள். ஸஅது (ரழி) அவர்கள் அந்த அம்பை அவனை நோக்கி எறிய, அது அவனது கழுத்தைத் தாக்கியது. அவன் மல்லாந்து விழ, அவனது ஆடையும் அகன்றது. அதைப் பார்த்து நபியவர்கள் கடைவாய் பல் தெரியுமளவுக்கு சித்துவிட்டு, “அப்பெண்மணிக்காக ஸஅது பழி தீர்த்து விட்டார். அல்லாஹ் ஸஅதின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்” என்று கூறினார்கள். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)

மலைக் கணவாயில்

நபி (ஸல்) அவர்கள் கணவாயில் நல்ல அமைப்பான இடத்தை அடைந்த போது அலீ இப்னு அபூதாலிப் (ரழி) தங்களது கேடயத்தை எடுத்துச் சென்று அதில் தண்ணீர் நிரப்பி வந்தார்கள். அத்தண்ணீர் பெரிய குழியுடைய பாறையில் நிரம்பியிருந்த தண்ணீர் என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் “அது ஒரு கிணற்றிலிருந்து எடுத்து வந்த நீர்” என்கின்றனர். எது எப்படியோ அந்த தண்ணீலிருந்து நபியவர்களுக்கு விருப்பமற்ற வாடை வீசவே, நபியவர்கள் அதை குடிக்க வில்லை. தனது முகத்திலிருந்த இரத்தக் கரையைக் மட்டும் கழுவிக் கொண்டார்கள். “அல்லாஹ்வின் கோபம் அவனது நபியின் முகத்தை காயப்படுத்தியவன் மீது கடினமாகட்டும்” என்று கூறியவர்களாக தனது தலையின் மீதும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)

இந்நிகழ்ச்சி குறித்து நபித்தோழர் ‘ஸஹ்ல்’ (ரழி) நமக்குக் கூடுதல் விவரம் அளிக்கிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் காயத்தை யார் கழுவியது யார் தண்ணீர் ஊற்றியது எதைக் கொண்டு அவர்களுக்கு மருந்திடப்பட்டது என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். அதாவது, நபியவர்களின் மகளார் ஃபாத்திமா (ரழி) கழுவினார்கள். அலீ (ரழி) அவர்கள் கேடயத்திலிருந்து தண்ணீரை ஊற்றினார்கள். தண்ணீர் ஊற்றுவதால் இரத்தம் நிற்காமல் அதிகமாகிறது என்பதைப் பார்த்தவுடன் ஃபாத்திமா (ரழி) பாயின் ஒரு பகுதியை கிழித்து அதை எரித்து அந்த சாம்பலை அக்காயத்தில் வைத்தார்கள். உடனே, இரத்தம் நின்றுவிட்டது. (ஸஹீஹுல் புகாரி)

அதற்குள்ளாக முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) மதுரமான நீர் எடுத்து வந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பருகி, அவருக்காக நல்ல பிரார்த்தனையும் செய்தார்கள். (ஸீரத்துல் ஹல்பிய்யா)

இவ்வாறு காலை பொழுதில் தொடங்கிய போர் முதலில் வெற்றி பிறகு சேதம் என்று ஒரு வழியாக மதிய வேளையில் முடிவுக்கு வந்தது. இப்போரில் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட காயமும் களைப்பும் தெரிந்ததே. எனவே, நபியவர்கள் லுஹர் (மதிய) நேரத் தொழுகையை உட்கார்ந்து தொழ, தோழர்களும் அவ்வாறே தொழுதார்கள். (இப்னு ஹிஷாம்)

அபூ ஸுஃப்யானின் மகிழ்ச்சி

எதிரிகள் மக்காவிற்கு திரும்ப முழுமையாக ஆயத்தமாயினர். அதற்குள் முஸ்லிம்களின் உண்மை நிலைமையை அறிவதற்காக அபூ ஸுஃப்யான் மலையின் மீது ஏறி “உங்களில் முஹம்மது இருக்கிறாரா?” என்று கூவினார். முஸ்லிம்களில் எவரும் அவருக்கு பதிலளிக்க வில்லை. பின்பு உங்களில் “அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று கூவினார். அப்போதும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. பின்பு அவர் “உமர் இப்னு கத்தாப் இருக்கிறாரா?” என்று கூவினார். அதற்கும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. காரணம், நபி (ஸல்) பதிலளிக்க வேண்டாமென்று முஸ்லிம்களைத் தடுத்திருந்தார்கள். “இஸ்லாமின் வலிமை இம்மூவரால்தான்” என்று அபூ ஸுஃப்யானுக்கும் அவரது கூட்டத்தாருக்கும் தெரிந்திருந்த காரணத்தால்தான், அவர் இம்மூவரைப் பற்றியும் விசாரித்தார். முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் “என் மக்களே! அறிந்து கொள்ளுங்கள். இவர்களையே நீங்கள் கொன்று விட்டீர்கள் அது போதும்!” என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட உமர் (ரழி) தன்னை அடக்க முடியாமல் “ஏய்! அல்லாஹ்வின் எதிரியே! நீ யாரையெல்லாம் கூறினாயோ அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். அல்லாஹ் என்றும் உனக்குக் கவலையைத்தான் தருவான். எனவே, நீ மகிழத் தேவையில்லை” என்று பதிலளித்தார்கள். சிறிது அமைதிக்குப் பிறகு அபூ ஸுஃப்யான் மீண்டும் பேசினார். “உங்களில் கொல்லப்பட்டோன் உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அப்படி செய்ய வேண்டுமென நான் கட்டளையிடவில்லை. ஆனாலும், அது எனக்கு எந்த வருத்தமும் அளிக்கவில்லை” என்றார். பின்பு “ஹுபுல் எனும் சிலையே! உயர்வு உனக்குத்தான்” என்று கூறினார்.

அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இப்போது நீங்கள் அவருக்கு பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்க, “நாங்கள் என்ன பதிலளிக்க வேண்டும்?” என்று முஸ்லிம்கள் கேட்டார்கள். அதற்கு “அல்லாஹ்தான் உயர்ந்தவன் அவனே கண்ணியமிக்கவன் என்று பதிலளியுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள் அவர்களும் அவ்வாறே பதிலளித்தார்கள்.

பின்பு “எங்களுக்கு உஜ்ஜா இருக்கிறது. உங்களுக்கு உஜ்ஜா இல்லையே!” என்றார் அபூ ஸுஃப்யான்.

நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்க “நாங்கள் என்ன பதிலளிப்பது?” என்று நபித்தோழர்கள் கேட்டனர், “அல்லாஹ் எங்களுக்கு எஜமானாக இருக்கிறான். உங்களுக்கு எஜமானன் இல்லையே!” என பதிலளியுங்கள் என்றார்கள். நபித்தோழர்களும் அவ்வாறே கூறினார்கள்.

அதன் பிறகு, “எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. இந்நாள் பத்ர் போருக்குப் பகரமாக ஆகிவிட்டது. போர் இப்படித்தான் கிணற்று வாளியைப் போன்றது” என்றார் அபூஸுஃப்யான். அதற்கு உமர் (ரழி) “ஒருக்காலும் சமமாக முடியாது. எங்களில் கொல்லப்பட்டவர் சுவனத்தில் இருக்கிறார். உங்களில் கொல்லப்பட்டவர் நரகத்தில் இருக்கிறார்” என்று பதிலடி தந்தார்கள். பின்பு அபூஸுஃப்யான் “உமரே! என்னிடம் வா” என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் “உமரே! நீ அவரிடம் சென்று அவர் என்ன கூறுகிறார் என்று கேட்டு வாருங்கள்” என்றார்கள். உமர் (ரழி) அபூஸுஃப்யானிடம் வந்தவுடன் “உமரே! அல்லாஹ்வுக்காக நான் உன்னிடம் கேட்கிறேன். உண்மையில் நாங்கள் முஹம்மதைக் கொன்று விட்டோமா? இல்லையா?” என்று கேட்டார். அதற்கு உமர் (ரழி) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களை நீங்கள் கொல்ல வில்லை, அவர்கள் உமது பேச்சை இப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு “இப்னு கமிஆவை விடவும் நல்லவராகவும் உண்மை சொல்பவராகவும் நான் உன்னை கருதுகிறேன்” என்று அபூ ஸுஃப்யான் கூறினார். (இந்த இப்னு கமிஆ என்பவனே நபி (ஸல்) அவர்களை தான் கொன்றுவிட்டதாக ஊளையிட்டவன்.) (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)