(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
“இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.