இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது“ என்று கூறினார்.
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
“எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
வ லகத் கால லஹும் ஹாரூனு மின் கBப்லு யா கவ்மி இன்னமா Fபுதின்தும் Bபிஹீ வ இன்ன ரBப்Bபகுமுர் ரஹ்மானு Fபத்தBபி'ஊனீ வ அதீ'ஊ அம்ரீ
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
(இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
இன்னும்: “என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்றுங் கூறினார்).