முற்றிலும் சந்திரனின் சுழற்ச்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி 638 (C.E) அன்று நபி முஹம்மது(ஸல்) அவர்களின் நெருங்கிய சகாபா மற்றும் இரன்டாவது கலிபாவான உமர் பின் கத்தாப் அவர்களால், அவர் காலத்தில் இருந்த பல்வேறு நாட்காட்டி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர அறிமுகப்படுத்தபட்டது. உமர்(ரழி), அறிஞர்களுடன் கலந்தாலோசித்து இஸ்லாமிய காலம் கணக்கிடும் முறையை ஹிஜ்ராவிலிருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஹிஜ்ராவின் முதல் மாதமாகிய முஹர்ரமின் முதல் நாளிலிருந்து இஸ்லாமிய நாளேட்டை துவக்குவதாகவும் முடிவு செய்யபட்டது. முஹர்ரம் 1, 1 ஹிஜ்ரி என்பது ஆங்கில நாளேட்டில் ஜுலை16, 622 C.E. குறிக்கிறது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹிஜ்ரா என்பது, நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சியாகும்.

இஸ்லாமிய நாளேடு முற்றிலும் சந்திரனை அடிப்படையாக 12 மாதங்களை கொண்டது. அவை
1. முஹர்ரம் 2. ஸபர் 3. ரபியுல் அவ்வல் 4. ரபியுல் ஆஹிர் 5.ஜமாத்திலவ்வல் 6. ஜமாத்திலாஹிர் 7.ரஜப் 8. ஷஃபான் 9. ரமலான் 10. ஷவ்வால் 11. துல்காயிதா 12. துல்ஹஜ். ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களை கொண்டது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய நாட்கள்: 1 முஹர்ரம் - இஸ்லாமிய புத்தாண்டு, 27 ரஜப் - புனித மெஹ்ராஜ், 1 ரமலான் - முதல் நோன்பு, 17 ரமலான் - நூஸுல் குர்ஆன், கடைசி 10 ரமலானில் ஒரு நாள் - லைலத்துல் கத்ர், 1 ஷவ்வால் - நோன்பு பெருநாள், 8-10 துல்ஹஜ் - ஹஜ் செய்யும் நாட்கள், 10 துல்ஹஜ் - ஹஜ் பெருநாள்.

இஸ்லாமிய நாட்காட்டி 12 மாதங்கள் கொண்டுருப்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றியும் அல் குர்ஆனில்
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. அல்குர்ஆன் 2:189

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானiவ் இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். அல்குர்ஆன் 9:36.

(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன் அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 9:37


இஸ்லாமிய நாளேடு சந்திரனை அடிப்படையாக கொண்டதினால், ஆங்கில நாட்காட்டியைவிட 11 நாட்கள் குறைவானது. ஒரு வருடம் 354 அல்லது 355 நாட்களை கொண்டது. மாதங்கள் காலங்களை அடிப்படையாக கொண்டு இல்லை. ஆகையால், முஸ்லிம் பண்டிகைகள் வெவ்வேறு காலங்களில் வரும். எடுத்துக்காட்டாக நோன்பு பெருநாள் வெயில் காலத்திலும் மழைக்காலத்திலும் வரும். ஹிஜ்ரி மாதம் ஆரம்பம், முதல் பிறை மட்டும் அடிப்படையாக அல்லாமல், அந்தந்த இடங்களில் கண்ணால் பிறை பார்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளது. ஆகையால், முக்கியமான பண்டிகைகள் முன்னமே அச்சிடப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டிகளை மட்டும்வைத்து முடிவு செய்யாமல் கண்ணால் பிறை பார்ப்பதை வைத்து முடிவு செய்யப்படுகிறது.

முதல் பிறை கண்டுபிடிப்பதில் பல்வேறு திட்டமான அளவுகள் உலகம் முழுவதும் பின்பற்றினாலும், ஒவ்வொரு முறையிலும் சில குறைபாடுகள் இருக்கின்றன. ஆகையால் உலகம் முழுவதும் அச்சிடப்பட்ட ஹிஜ்ரி நாளேடுகளில் ஒரு சில நாட்கள் வித்தியாசம் இருக்கலாம்.

தேடுங்கள்